அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சிற்றும் மதிக்காமல், நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கிறது மத்திய பா.ஜ., அரசு. மதத்தின் வழியே மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கொள்கையாக வைத்துக் கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் வழியே அரசியல் லாபம் தேடும், பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் தமிழகத்தில், குறிப்பாக அ.தி.மு.க.,விடம் ஈடேறாது.டவுட் தனபாலு: பா.ஜ., பத்தி இப்ப இப்படி குற்றம் சாட்டுறீங்களே... அவங்க தயவுல நாலு வருஷமா முதல்வர் பதவியில இருந்தப்ப, பா.ஜ., போட்ட சட்டத்துக்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுட்டு இருந்தீங்களே... அதெல்லாம், உங்க பதவி நாற்காலியை காப்பாத்திக்க போட்ட வேஷம் தான் என்பது, 'டவுட்'டே இல்லாம விளங்கிடுச்சு!தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை, ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும். தி.மு.க., ஆட்சியின், ஐந்து ஆண்டுகளில் முடிந்திருப்பது மூன்று ஆண்டுகள். எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளில் மிச்சமுள்ள 43 கோரிக்கைகளையும், 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்றி விட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம்.டவுட் தனபாலு: எல்லா வாக்குறுதிகளையும் இப்பவே நிறைவேற்றி விட்டால், 2026 தேர்தல்ல சொல்ல எதுவும் இருக்காது என்று தான், 43 வாக்குறுதிகளை நிறைவேற்றாம வச்சிருக்கீங்களா... ஆனா, ஏற்கனவே உங்களை நம்பி ஏமாந்த மக்கள், 2026லிலும் ஏமாறுவாங்களா என்பது, 'டவுட்'தான்!பத்திரிகை செய்தி: 'தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபுமுருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.டவுட் தனபாலு: இவரது புகாரை ஏற்று, அவரை, அந்த பணியில இருந்து தேர்தல் கமிஷன் விடுவிக்கும்... ஆனா, ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், மறுபடியும் அவருக்கு பதவி உயர்வோட கூடிய நல்ல பணியிடத்தை தி.மு.க., அரசு வழங்கிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!