தமிழக, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி: எம்.எல்.ஏ.,க்களுக்கு வீடு வேண்டும் என, காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா கேட்டார். வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட, 3,500க்கும் அதிகமான வீடுகள் விற்காமல் உள்ளன. அதன் விலை பட்டியலை தருகிறேன்; எம்.எல்.ஏ.,க்கள் வாங்கிக் கொள்ளலாம்.டவுட் தனபாலு: அது சரி... 3,500 வீடுகள் விற்காம இருக்குது என்றால் என்ன அர்த்தம்... தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போல கொள்ளை லாபம் பார்க்க துடிக்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாங்குற அளவுக்கு விலையை நிர்ணயம் செய்தால், ஒரே மாதத்தில் எல்லா வீடுகளும் விற்று தீர்ந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழிலாளர் நலச்சங்க தலைவர் குமார்: 'ஜாதிய சிந்தனையில் உள்ள ஆசிரியர்கள், அதில் இருந்து விடுபடும் வகையில், உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். ஜாதி தலைவர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் சீர்படுத்த வேண்டும்' என்பது போன்ற, நம்பிக்கையுடன் எதிர்பார்த்த பரிந்துரைகள் ஏதும் நீதிபதி சந்துரு அறிக்கையில் இல்லை. பள்ளிக்கல்வி அமைச்சரின் நேர்முக உதவியாளர் முதல், அதிகாரிகள் வரை, பட்டியலினத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.டவுட் தனபாலு: நீங்க மட்டுமா... நீதிபதி சந்துரு பரிந்துரைகளை பல தரப்பிலும் எதிர்க்க தானே செய்றாங்க... இதனால, அவரது பரிந்துரைகளை அரசு அமல்படுத்துமா என்பது, 'டவுட்'தான்!தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியம் இல்லை. 'டாஸ்மாக்' மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும். அதற்கு மாற்றாக, கள்ளுக்கடை திறக்க வேண்டும். ஆனால், அதை அரசு கண்காணிக்க வேண்டும்.டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... டாஸ்மாக் கடைகள் இருக்கும்போதே, இந்த அளவுக்கு கள்ளச்சாராய சாவுகள் நடக்குது என்றால், அதை பட்டென இழுத்து மூடினால், நிலைமை மோசமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை... கண்மூடித்தனமா மற்ற அரசியல்வாதிகள் மாதிரி இல்லாம, உண்மையை உடைச்சு பேசும் உங்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!