ராஜ்யசபா அ.தி.மு.க.,- எம்.பி.,தம்பிதுரை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு அருகில், கஞ்சாவும் போதைப் பொருட்களும், எளிதாக கிடைக்கும் நிலை காணப்படுகிறது. போதைப் பொருட்களின் ஆதிக்கத்தால், தமிழகம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. போதை பயன்படுத்துவதன் காரணமாக, அதிக அளவில் படுகொலைகள் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன.டவுட் தனபாலு: அது சரி... போதைப் பொருளான, 'குட்கா' கடத்தல் புள்ளிகளிடம் மாமூல் வாங்கிய வழக்குல உங்க கட்சியின் முன்னாள் அமைச்சர்களும், உங்க ஆட்சி காலத்து அதிகாரிகள் பலரும் சிக்கிஇருப்பதை வசதியா மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஏற்கனவே இருந்த வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதால், பதிவுக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, கட்டட அனுமதிக்கான கட்டணத்தையும் பன்மடங்கு தி.மு.க., அரசு உயர்த்தியுள்ளது. மக்களிடம் இருந்து அநியாயமான முறையில், பல வழிகளில் தொடர்ந்து வரி வசூலிக்கப்படுகிறது. இது வழிப்பறி கொள்ளைக்கு சமம். டவுட் தனபாலு: மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய், தவப்புதல்வனுக்கு 1,000 ரூபாய், மகளிருக்கு இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை எல்லாம் எப்படி கொடுக்க முடியும்... தமிழக அரசுக்கு, 'கரன்சி' அச்சடிக்கிறஅதிகாரம் இல்லையே...அதனால, மக்களுக்கு கொடுக்கிறதை, மக்களிடமே பறிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., துணை தலைவர் கே.பி.ராமலிங்கம்: 'ஈரோட்டில் இருந்து, திருச்செங்கோடு, நாமக்கல் வழியாக, அரியலுார், பெரம்பலுாருக்கு ரயில் பாதை அமைக்கப்படும்' என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, நான்கு, ஐந்து இடங்களில் ஆறு குறுக்கீடு உள்ளது. அதனால் தான் நிதிநிலை அறிக்கையில் நிதியை வெளியிட முடியவில்லை. டவுட் தனபாலு: ஆக்ரோஷமான அலைகள் ஆர்ப்பரிக்கும் பாம்பன் கடல்லயே, 550 கோடி ரூபாய்க்கு மத்திய அரசுஅருமையான பாலம் கட்டி முடிச்சிருக்கு... சாதாரண ரயில் பாதையில ஆறுகள் குறுக்கிடுதுன்னு நீங்க சால்ஜாப்பு சொல்றது, போகாத ஊருக்கு வழி சொல்லும் கதையா இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்ல!