தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை: நடிகர் விஜய், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'மற்ற கட்சிகளை போல் நம் கட்சி சாதாரண கட்சி அல்ல' என்று குறிப்பிட்டிருக்கிறார். எத்தனையோ ஆண்ட கட்சிகள் உள்ளன. பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளுக்கு மத்தியில் விஜய் கட்சி எந்தளவிற்கு உயர்ந்துள்ளது? டவுட் தனபாலு: 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்ற பழமொழி தங்களுக்கு தெரியாதா... இப்ப இருக்கிற எந்த கட்சிகளும் சரியில்லை என்பதால் தான், விஜய் புதிய கட்சி துவங்கும் முடிவுக்கே வந்தார் என்பது தான், 'டவுட்'டே இல்லாத உண்மை.தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'மதுவை ஒழிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்' என்று வலியுறுத்துவது, மக்களை ஏமாற்றும் செயல். அரசியலமைப்பு சட்டத்தின்படி, மது, மாநில பட்டியலில் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தது, தி.மு.க., ஆட்சி. எந்த அதிகாரத்தை பயன்படுத்தி மதுவை கொண்டு வந்ததோ, அதே அதிகாரத்தை பயன்படுத்தி, மதுவிலக்கை அமல்படுத்துவது தானே முறை?டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சி அமையுறப்ப எல்லாம், தி.மு.க., அரசு கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தினீங்களே... அந்த வகையில், மது விற்பனைக்கும் உங்க ஆட்சியில மூடுவிழா நடத்தி, வரலாற்றில் இடம் பிடிக்காம போனது ஏன் என்ற, 'டவுட்' வருதே!பத்திரிகை செய்தி: தி.மு.க., அனுதாபியான நடிகர் பிரகாஷ் ராஜை, வரும் சட்டசபை தேர்தலுக்கு கட்சியின் பிரசார பீரங்கியாக பயன்படுத்த துணை முதல்வர் உதயநிதி விரும்புகிறார். அதே சமயம், பிரகாஷ்ராஜ், தி.மு.க.,வில் சேர்வாரா அல்லது நடிகர் வடிவேலு போல, விஜய்க்கு எதிரான பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.டவுட் தனபாலு: நடிகர் வடிவேலு, 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு, தீவிரமாக பிரசாரம் செய்தாரு... அதன்பின், அவரது சினிமா அத்தியாயம் என்ன ஆனது... இன்று வரை வடிவேலுவால், சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முடியலை... அதனால, வடிவேலு வழியில் பிரகாஷ்ராஜ், தி.மு.க., வலையில் விழுவது, 'டவுட்'தான்!