உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்உதயகுமார்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய்படேலின் மறுவடிவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழகத்தின் இரும்பு மனிதரும், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலருமான பழனிசாமி சந்தித்து பேசியது குறித்து பல கருத்துகள் எழுந்து உள்ளன. ஆட்சி, அதிகாரம் கையில் இல்லாவிட்டாலும், பழனிசாமி மக்களுக்காக உழைத்து வருகிறார் என்பதற்கு அமித் ஷாவுடனான சந்திப்பின்போது, அவர் வலியுறுத்திய மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளே சாட்சி. டவுட் தனபாலு: கடந்த நாலு வருஷமா, பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருக்காரே... இவ்வளவு நாளா மவுனமா இருந்துட்டு, அடுத்த வருஷம் தேர்தல் வரும் சூழலில்தான், தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் எல்லாம் அவரது நினைவுக்கு வந்துச்சா என்ற, 'டவுட்' வருதே!தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சந்தித்த பின், 'தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில், தமிழகத்தில் 2026ல் ஆட்சி அமையும்' என, சமூக வலைதளத்தில், அமித் ஷா பதிவிட்டுள்ளார். இதற்கு பழனிசாமியோ, அவரது ஆதரவாளர்களோ, எந்த பதிலையும் தெளிவாகக் கூறவில்லை. டவுட் தனபாலு: அவங்க எப்படி தெளிவான பதிலை தருவாங்க... தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைவது சம்பந்தமா பல சுற்று ரகசிய பேச்சு நடந்த பிறகுதானே, அமித் ஷா - பழனிசாமி சந்திப்பு நடந்திருக்கு... அரசியலில் சீனியரான இவருக்கு இது தெரியாம போனது ஏன் என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: தமிழக மாணவர்கள் மூன்று மொழி படிக்க தடை போட்டு, வஞ்சிக்கப்படுகின்றனர். புதுச்சேரியில் நான் கவர்னராக இருந்தபோது, சி.பி.எஸ்.இ., கல்வி திட்டத்தை செயல்படுத்த கையெழுத்திட்டேன். அதற்காக என்னை தமிழின துரோகி என மோசமாக விமர்சிக்கிறார், தமிழக பாடநுால் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி. டவுட் தனபாலு: லியோனி, பட்டிமன்ற பேச்சாளராக இருந்து தி.மு.க.,வுக்கு வந்தவர்... இப்படி எல்லாம் காட்டமான விமர்சனங்களை, எதிர்க்கட்சியினர் மீது வைத்தால் தான், அவருக்கு கட்சியில அடுத்தடுத்து, 'புரமோஷன்'கள் கிடைக்கும்... அதுக்கு உங்களை எல்லாம் படிக்கட்டுகளாக பயன்படுத்திக்கிறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மார் 30, 2025 23:52

பழனிசாமி தலைமையில் அதிமுக துரு பிடித்து போய்விட்டதே.


Rajan A
மார் 30, 2025 20:50

என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் கூட்டணிக்காக சொல்ல வேண்டியிருக்கிறது. அமித் ஷா ஒகே, இபிஸ் இரும்பு மனிதர்னு சொல்வதெல்லாம் ஓவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை