உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா: தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணியில் இருந்தது. அப்போது அந்த கட்சியை கபளீகரம் செய்து விட்டோமா... பல்லடம் சட்டசபை தொகுதியில், ம.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட முத்துரத்தினம் உள்ளிட்டவர்கள், தி.மு.க.,வில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்வது தி.மு.க.,வா, பா.ஜ.,வா?டவுட் தனபாலு: அதானே... ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்லுவாங்களே... அந்த மாதிரி, ம.தி.மு.க., இப்ப இருக்கும் நிலையில், கூட்டணி தர்மத்தை பற்றி எல்லாம் குரல் கொடுக்காதுன்னு நினைச்சு தான், அந்த கட்சியினரை அறிவாலயம் அரவணைக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!வி.சி., கட்சி தலைவர் திருமா வளவன்: தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.,வை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கின்றன. எங்கள் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முயற்சிக்கிறார். தி.மு.க., கூட்டணியில் இருந்து எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என பழனிசாமி அழைப்பு விடுப்பது, அவராக சொல்கிற ஒரு கருத்தாக தெரியவில்லை. யாரோ சொல்வதை, அவர் திருப்பி சொல்கிறார் என்றுதான் தோன்றுகிறது.டவுட் தனபாலு: 'எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்று வள்ளுவர் சொல்லியிருக்காரே... அந்த வகையில், பழனிசாமி கருத்தின் பின்னாடி பா.ஜ., இருக்கும்னு, 'டவுட்' படுறீங்களோ... ஆயினும், 'பழனிசாமி அழைப்பை நிராகரிக்கிறேன்'னு திட்டவட்டமா சொல்லாம விட்டது ஏன் என்ற, 'டவுட்'டும் வருதே!மா.கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு பேசுவார். லோக்சபா தேர்தலில் ஒரு பேச்சு. அதற்கு நேர்மாறாக இப்போது பா.ஜ.,வோடு கூட்டணி வைத்துள்ளார். கடந்த வாரம், கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார்; இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்ட்களுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல; வஞ்சக வலை என்பதை அறிந்தே வைத்துள்ளோம்.டவுட் தனபாலு: 'பா.ஜ., இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டோம்'னு நீங்களும், வி.சி., திருமாவளவனும் பலமுறை சொல்லிட்டீங்க... அப்படியிருந்தும், உங்களுக்கு பழனிசாமி அழைப்பு விடுத்திருக்கார் என்றால், ஒருவேளை நீங்க எல்லாம் அந்த பக்கம் போனால், 'கூட்டணி ஆட்சி' என குரல் கொடுக்கும் பா.ஜ.,வை கழற்றி விட்டுடலாம்னு நினைக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி