உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

விருதுநகர் தொகுதி, காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பிரமாண்டமான கட்சி ஒன்று, தங்கள் கூட்டணியில் இணைய உள்ளதாக கூறி வருகிறார். பிரமாண்டம் என்ற பெயருடன் யாராவது புதிய கட்சி ஆரம்பித்து இருக்கின்றனரா என, தேடிக் கொண்டிருக்கிறேன். அண்ணா தி.மு.க.,வை, அமித் ஷா தி.மு.க.,வாக மாற்றி விட்டார் பழனிசாமி.டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியா, தமிழகம் முழுக்க செல்வாக்கும், ஓரளவுக்கு ஓட்டு வங்கியும் உள்ள கட்சி என்றால், அது உங்களது, காங்., கட்சி தான்... அது, பிரமாண்ட கட்சியா உங்க கண்ணுக்கு தெரியலையா... உங்க கட்சியை பற்றி நீங்களே குறைத்து மதிப்பிடலாமா என்ற, 'டவுட்' தான் வருது!தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: கடந்த, 1967 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, காமராஜர் குறித்து கருணாநிதி பேசியதை இன்று வெளியிட்டால், மானமுள்ள ஒரு காங்கிரசார் கூட, தி.மு.க., கூட்டணியில் இருக்க மாட்டார்கள். காமராஜர், தன் கடைசி காலத்தில், 'இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்றார். அப்படி இருக்கும் போது, திருச்சி சிவா வரலாற்றை மாற்றி, மக்களை குழப்புவதை கண்டிக்கிறேன்.டவுட் தனபாலு: காமராஜர் கூறியதை யாரும் மறுக்கவும் இல்லை; மறக்கவும் இல்லை... ஆனா, அந்த, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றில் தானே, உங்க கட்சி இப்ப கூட்டணி வச்சிருக்கு என்பதை நீங்க மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வில், 'விடியல் பயணம் எப்போது துவங்கியது' என்றும், ஈ.வெ.ரா., குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. வ.உ.சி., காமராஜர், முத்துராமலிங்கதேவர், நல்லகண்ணு போன்றவர்களை போல, நாட்டின் விடுதலைக்காக போராடி, ஈ.வெ.ரா., சிறைக்கு சென்றதில்லை. அப்படி இருக்க, அவர் குறித்த கேள்விகள் அறிவார்ந்தவையா?டவுட் தனபாலு: அது சரி... 'குரூப் - 4' தேர்வுல ஜெயிக்கிறவங்க, திராவிட மாடல் அரசிடம் தானே பணி புரியணும்... 'நம்ம அரசின் திட்டங்கள், நம்ம இயக்கத்தின் முன்னோடிகளை பத்தி தெரியாதவங்க, திராவிட மாடல் அரசில் பணி புரிய தகுதியில்லாதவங்க'ன்னு கருதி, கேள்விகளை தயார் பண்ண சொல்லியிருப்பாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 21, 2025 16:48

எங்கள் ஆட்சியில் பதவிகள் வேண்டி தேர்வு எழுதுபவர்கள் எங்கள் ‘குலதெய்வமான’ ஈ. வே. ரா பற்றியும், நாங்கள் இந்த 4 வருஷத்தில் கொடுத்த ‘விடியல்’ பற்றியும் அவசியம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் யாரோ ஒரு கட்சி ஜால்றா வினாத்தாள் தயாரித்திருப்பார் தயாரித்த ஆசிரியருக்கு இந்தாண்டு ‘நல்லாசிரியர் விருது ‘ கொடுத்து கௌரவித்தாலும் வியப்பில்லை


சமீபத்திய செய்தி