தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: கல்லுாரி மாணவர்கள், வெளிநாட்டு வேலைக்கு செல்லும் வகையிலான திட்டங்களை கூட, தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். இதனால், எங்களுக்கு தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அறிவுசார்ந்த கருத்துகளை உள்வாங்கி, யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கட்டும். உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் செல்லுங்கள்; நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், உயிர் ரொம்ப முக்கியம். * டவுட் தனபாலு: அது சரி... 'ஓரணியில் தமிழகம் என்ற எங்க திட்டத்தில் வந்து சேருங்க... த.வெ.க., மாதிரியான கட்சிகளில் போய் சேர்ந்து உயிரை இழந்துட வேண்டாம்'னு நீங்க பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை! ---------- தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்: கரூரில், த.வெ.க., பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், காயமடைந்த ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரிடம் பணம் இல்லை என்பதால், மனிதாபிமானம் இல்லாமல் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். * டவுட் தனபாலு: ஆனா, 'தனியார் மருத்துவமனையில் யார் சேர்ந்திருந்தாலும், அவங்களிடம் பணம் வாங்காம சிகிச்சை அளிக்க உத்தரவு போட்டிருக்கோம்'னு கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்புல சொன்னாங்களே... அவங்க பொத்தாம் பொதுவா சொன்னாங்களா அல்லது அவங்க உத்தரவை தனியார் மருத்துவமனை மதிக்கலையா என்ற, 'டவுட்' வருதே! ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 'கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி' என, த.வெ.க.,வினர் வேண்டுமென்றே இட்டுக்கட்டி பேசுகின்றனர். அவர்களின் கவனக்குறைவு தான் காரணம். விஜய் வந்தபோது, நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் காரணமாக பலர் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பு த.வெ.க.,வினர் தான். கரூர் சம்பவத்தின் வாயிலாக, விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக, விஜயை கைது செய்வது விபரீத யோசனை. அவரை விசாரிக்கலாம்; ஆனால், கைது செய்யக்கூடாது. அது தேவையில்லாதது. அரசுக்கு அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை. * டவுட் தனபாலு: விஜயை கைது பண்ணிடக் கூடாதுன்னு விழுந்தடிச்சுட்டு சொல்றாரே... ஒருவேளை, அவரை கைது பண்ணிட்டா, இன்னும் பெரிய தலைவராகிடுவாரு... தன் மகன் துரை வைகோவின் அரசியல் எதிர்காலத்துக்கு சவாலா மாறிடுவார்னு பயப்படுறாரோ என்ற, 'டவுட்'தான் வருது! ***