அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மகளிர் உரிமைத்தொகை
பற்றி முதல்வர் ஸ்டாலின் பெருமையாக பேசுகிறார். இப்போது மேலும், 30 லட்சம்
பேருக்கு விதிகளை தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
அதுவும் பெண்களின் கஷ்டங்களை பார்த்து கொடுக்கவில்லை. அடுத்தாண்டு தேர்தல்
வருவதால், ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். எல்லாம் ஏமாற்று வேலை.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது, 1,500 ரூபாய் வழங்கப்படும். * டவுட் தனபாலு: நீங்க ஆட்சிக்கு வந்தால் தானே, 1,500 ரூபாய்
கொடுப்பீங்க... தி.மு.க., அரசு வர்ற பொங்கல் பரிசாக, உரிமைத்தொகையை, 1,500
ஆக உயர்த்தி கொடுத்துட்டா என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' வருதே... அப்படி
பண்ணிட்டா, நீங்க, '2,000 ரூபாய் தருவோம்'னு வாக்குறுதி தருவீங்களோ என்ற,
'டவுட்'டும் கூடவே வருது! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: நாட்டு மக்கள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம், 5,000 ரூபாய்க்காவது, காதி பொருட்களை வாங்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அவர்களின் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் உண்டாகும். உள்ளூர் பொருட்களையே வாங்குவோம் என்ற கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும். * டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... உள்ளூர் பொருட்களுக்கு நாம முக்கியத்துவம் தந்துட்டோம் என்றால், ஏற்றுமதியை யாரும் நம்பியிருக்க வேண்டாம்... அமெரிக்காவின் அநியாய வரி விதிப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடணும் என்றால், மஹாத்மா காந்தி வலியுறுத்திய சுதேசி கொள்கையை மீண்டும் கடைப்பிடிக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை. ----------- பா.ம.க., தலைவர் அன்புமணி: 'கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர் சேர்க்கை வரும் 6ம் தேதி துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கைக்காக, அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் அபத்தமாக உள்ளன. அதன்படி, இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும், புதிதாக விண்ணப்பித்து, தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில், கல்வி உரிமை சட்டப்படி தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படுமாம். * டவுட் தனபாலு: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்து போக செய்யும் வகையில், தமிழக அரசின் இந்த முடிவு இருக்குதே... இது சம்பந்தமா, தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள், குறிப்பா, இந்த சட்டத்தை கொண்டு வந்த காங்., கட்சி கமுக்கமாக இருப்பது ஏன் என்ற, 'டவுட்' எழுதே? ***