உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: சினிமாவில் கதை ஒரு பக்கம், கவர்ச்சி ஒரு பக்கம் இருக்கும். தி.மு.க., சினிமாத்தனம் செய்து, வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுகிறது. இது போன்ற திறமை தி.மு.க.,வுக்கு கைவந்த கலை. டவுட் தனபாலு: வாக்குறுதிகளை தந்து மக்களை தி.மு.க., ஏமாற்றுதுன்னு சொல்றீங்களே... உங்க கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியும், பிரசாரம் பண்ற ஊர்களில் எல்லாம், 'மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவோம்; தீபாவளிக்கு புடவை, வேட்டி தருவோம்'னு ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசுறதை நீங்க கவனிக்கலையா என்ற, 'டவுட்' தான் வருது!  கேரள பா.ஜ., தலைவர் ராஜிவ் சந்திரசேகர்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்ட தங்கக் கவசத்தின் எடை குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கேரளாவை ஆளும் மா.கம்யூ., அரசு, மன்னிக்க முடியாத ஊழலை செய்துள்ளது. இந்த முறைகேடு பல்வேறு கோவில்களில் நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. டவுட் தனபாலு: கடந்த, 2018ல் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை எடுத்த மா.கம்யூ., அரசுக்கு, 2019 லோக்சபா தேர்தலில் கேரள மக்கள் மரண அடி கொடுத்தனர்... சீக்கிரமே சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, சபரிமலை வடிவில் மீண்டும் சோதனை வந்துடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!  பத்திரிகை செய்தி: சமீபத்தில் பேட்டியளித்த த.மா.கா., தலைவர் வாசன், 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது' என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'சிங்கிள் ரூமிற்குள் கட்சி நடத்து பவர்களுக்கு எல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை' என, கிண்டலடித்தார். இதனால், கோபமடைந்த த.மா.கா.,வினர், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிட்டனர். இது வாசனுக்கு தெரிந்ததும், தன் கட்சி நிர்வாகிகளை கண்டித்து போராட்டத்தை தடுத்து விட்டார். டவுட் தனபாலு: 'தி.மு.க., வின் மூத்த தலைவர் வீட்டு முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம்'னு வாசன் பெருந்தன்மையா தடுத்துட்டாரா...? ஒருவேளை, 'ஆர்ப்பாட்டம் நடத்தி, சொற்ப எண்ணிக்கையிலான கட்சியினர் மட்டுமே கைதானா, துரைமுருகன் கூற்று உண்மை யாகிடும்'னு பயந்து தடுத்துட்டாரா என்ற, 'டவுட்'கள் வருதே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை