டவுட் தனபாலு
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: மற்ற கட்சிகளை நம்பி, அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றோர், அங்கு ஏன் சென்றோம் என ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர். காரணம், அங்கு அவர்களுக்கு ஏற்றமோ, மரியாதையோ இல்லாதது தான். அ.தி.மு.க.,வை நம்பி யாரும், எப்பவும் கெட்டதில்லை. அப்படி யாரேனும் கெட்டுப்போனதாக உதாரணம் காட்டினால், அவர்களுக்கும் ஏற்றம் அளிக்க வேண்டியது என் பொறுப்பு. அதனால், அ.தி.மு.க.,வை நம்பி, எந்த கட்சியினரும் தைரியமாக அரசியல் செய்ய வரலாம். - டவுட் தனபாலு: இதன் வாயிலாக, 'எங்க கூட்டணிக்கு நம்பி வாங்க... ஏற்றம் உறுதி'ன்னு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு நாசுக்கா அழைப்பு விடுப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது! lll அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: அ.தி.மு.க., மீதும், அதன் பொதுச்செயலர் பழனிசாமி மீதும் உள்ள தனிப்பட்ட பொறாமைக்காக, தி.மு.க.,விடம் தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, அறிவாலயம் ஏவும் போதெல்லாம் குரல் கொடுக்கும், வாலாட்டும் ஏஜன்டாக மாறிவிட்ட அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனிடம், அவர் முன்னால் இருக்கும் நான்கு ஊடக மைக்குகள் தவிர, வேறு என்ன இருக்கிறது? வெறும் கொடியையும், பெயருக்கு ஒரு கட்சியையும் வைத்துக் கொண்டு, வெட்டி சவடால் பேசிக்கொண்டு இருக்கிறார் தினகரன். டவுட் தனபாலு: அடடா... ஜெ., இருந்தப்ப தினகரனுக்கு கிடைச்ச மரியாதை என்ன, கவுரவம் என்ன...? இப்ப, இப்படி போட்டு தாளிக்கிறாங்களே... இப்படி கேவலமா திட்டியிருப்பதால் தான், இந்த அறிக்கையை யார் பெயரிலும் வெளியிடாம, தலைமை அலுவலகம் பெயரில் வெளியிட்டிருக்காங்களோ என்ற, 'டவுட்' வருதே! lll தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழக கவர்னர் ரவியை, துணை முதல்வர் உதயநிதி தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். கவர்னரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட உதயநிதி, முதலில் இந்திய அரசியலமைப்பின் மாண்பை புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பு சாசனப்படி நியமிக்கப்பட்ட கவர்னர் மீது, இனியும் வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தினால், தமிழக பா.ஜ., வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். டவுட் தனபாலு: கவர்னரை தி.மு.க.,வினர் விமர்சித்தால், அதற்கு அவர் பதிலடி தந்துட்டு போறாரு... நீங்க ஏன் குறுக்கே வர்றீங்க...? ஏற்கனவே, 'பா.ஜ.,வின் ஊதுகுழல்'னு கவர்னரை திட்டும் தி.மு.க.,வினருக்கு, உங்களது கருத்து லட்டு போல அமைஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll