உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன்: தி.மு.க.,வுடன் நாங்கள் கொள்கை கூட்டணி வைத்து உள்ளோம். இதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சிக்கு திருச்சி, வேலுார், நெல்லை, கடலுார், தஞ்சாவூர் ஆகிய ஐந்து தொகுதிகளை கேட்போம். நாங்கள் கேட்கும் இடத்தில் உள்ளோம்; தி.மு.க., கொடுக்கும் இடத்தில் உள்ளது. நாங்கள் கேட்காததையும் தி.மு.க., கொடுக்கும். டவுட் தனபாலு: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், உங்க கட்சிக்கு மூன்று தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது... இந்த அஞ்சு வருஷத்தில், உங்க கட்சி வளர்ந்திருக்குன்னு சொல்ல வர்றீங்களா அல்லது தி.மு.க.,வின் ஆஸ்தான கூட்டணி கட்சி என்பதால், 'கூடுதலா ரெண்டு சீட் போட்டு குடுங்க'ன்னு கேட்கிறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!  தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி: தமிழக டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக, தாங்கள் விரும்பியவர்களை முன்மொழிந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பட்டியல் அனுப்பி உள்ளது. அதை ஏற்காத தமிழக அரசு, அதற்கான காரணங்களை விளக்கி, கடிதம் எழுதி உள்ளது . அதற்கான பதில் இன்னும் வரவில்லை. தனக்கு வேண்டப்பட்ட நபரை, தமிழகத்தில் டி.ஜி.பி.,யாக அமர்த்த முயலும் மத்திய அரசின் அடாவடிதான், தாமதத்திற்கு காரணம். டவுட் தனபாலு: அடுத்த வருஷம், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர்றதால, மத்திய, மாநில அரசுகள், தங்களுக்கு வேண்டிய அதிகாரியை டி.ஜி.பி.,யாக்க ஆர்வம் காட்டுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... இதைத்தான் கிராமங்கள்ல, விடாக்கண்டன், கொடாக்கண்டன்னு சொல்வாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!  அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி துவங்கி, சரியான முடிவு எடுக்க தவறினார். ஆனால், பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து, ஆந்திர துணை முதல்வராக உள்ளார். அதை பின்பற்றி, நடிகர் விஜய் சரியான முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் பவன் கல்யாண் போல் ஜெயிக்க முடியும். அ.தி.மு.க.,வுடன் விஜய் பயணம் செய்யவே, அவரது கட்சி தொண்டர் களும் விரும்புகின்றனர். டவுட் தனபாலு: அது சரி... ஆட்சியை பிடிக்கிறதுக்காக, விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் தயாராகிட்டீங்க போலிருக்கு... ஆனா, 'கோட்டைக்கு முதல்வராகத்தான் வருவேன்'னு வீம்பு பிடிக்கிற விஜய், உங்களது இந்த டீலை ஏத்துக்குவாரா என்பது, 'டவுட்'தான்! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி