உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளன. ஆண்ட, ஆளும் கட்சியாக இருப்போருக்கு இது பெரிய விஷயம் அல்ல. ஆனால், தே.மு.தி.க., போன்ற சிறிய கட்சிகள், தமிழகம் முழுதும் உள்ள 68,000 பூத்களுக்கும் ஆட்களை நியமித்தால், அது பெரிய விஷயம் தான். அந்த பணியை, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக செய்து முடித்திருக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க., தான். டவுட் தனபாலு: தமிழகம் முழுக்க, 68,000 பூத்களிலும் தே.மு.தி.க.,வுக்கு நிர்வாகிகள் இருக்காங்களா... அப்படி என்றால், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியில் சில சீட்களுக்காக காத்திருக்காமல், உங்க கட்சி தலைமையிலேயே ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி, தேர்தலை சந்தித்தால் என்ன என்ற, 'டவுட்' வருதே!  பத்திரிகை செய்தி: முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் வரிசையில் தி.மு.க., இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி, தன் 48வது பிறந்த நாளை, முதன் முறையாக கட்சி தலைமையகமான அறிவாலயத்தில் இன்று கொண்டாடுகிறார். டவுட் தனபாலு: சீக்கிரமே தேர்தல் வர்றதால, உதயநிதிக்கு வாழ்த்து சொல்ல நிர்வாகிகளும், தொண்டர்களும் முட்டி மோதுவாங்க என்பதில், 'டவுட்' இல்லை... அதே நேரம், 'ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி தான் கட்சிக்கு தலைவர்' என்பதை கட்சியினருக்கு உணர்த்தும் விதமாகவே இந்த ஏற்பாடுகள் இருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 'மோடியா, இந்த லேடியா' என கேட்டு முழங்கிய ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, பா.ஜ.,வால் அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடிய வில்லை; ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அ.தி.மு.க., மீதுள்ள நன்மதிப்பால், அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்தேன்; அதை அ.தி.மு.க., புரிந்து கொள்ளவில்லை. வருங்காலத்தில் அ.தி.மு.க.,வை பா.ஜ., அழித்துவிடும். இதெல்லாம் புரிந்தால் அ.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கும் நல்லது. டவுட் தனபாலு: அ.தி.மு.க., நன்றாக இருக்கணும்னு அந்த கட்சியின் பொதுச்செயலர் பழனி சாமியே கூட இந்த அளவுக்கு யோசிச்சிருப்பாரா என்பது, 'டவுட்'தான்... அ.தி.மு.க., இல்லாம போயிட்டா, தி.மு.க.,விடம் கூடுதல் சீட்கள் கேட்டு பேரம் பேச முடியாதுன்னு பயப்படுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி