உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தேர்தல் சமயத்தில், ஒரே நேரத்தில், இரண்டு கட்சிகளுடன், கூட்டணி பேசுவது அருவருக்கத்தக்கது. பேரம் பேசுவது, எந்த மாதிரியான அணுகுமுறை என்பதை, இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். மக்களுக்கான அரசியல் என்று ஒன்று இல்லவே இல்லை. இதை மாற்றவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான், கூட்டணி இல்லாமல், தொடர்ந்து தனித்து களம் காண்கிறோம். டவுட் தனபாலு: ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளைத் தான், நீங்க பெயர் குறிப்பிடாம விமர்சிக்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், யார்கிட்டயும் பேரம் பேசாம, வெற்றியோ, தோல்வியோ தனித்து தான் போட்டி என்ற உங்க நிலைப்பாட்டையும், 'டவுட்' இல்லாம பாராட்டலாம்! தமிழக துணை முதல்வர் உதயநிதி: அரசியல் அறிவே இல்லாதோர் உளறினாலும், புலம்பினாலும், களத்தில் நின்று ஜெயிக்கக்கூடிய கட்சி தி.மு.க., தான். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் வைத்துள்ளேன். அதை செய்வார் என நம்புகிறேன். டவுட் தனபாலு: வேட்பாளர் பட்டியலையே நீங்கதான் தயாரிக்க போறதா, தி.மு.க.,வுல எல்லாரும் பேசிக்கிறாங்க... ஆனாலும், 'அப்பாவிடம் கோரிக்கை வச்சிருக்கேன்'னு வெளியில சொல்றது, தன்னடக்கமா அல்லது நாளைக்கு சீட் கிடைக்காதவங்களிடம், 'அப்பாகிட்ட கேட்டேன்... தர மறுத்துட்டார்'னு சமாளிக்கவா என்ற, 'டவுட்' எழுதே! பத்திரிகை செய்தி: ' போர்க் களத்தில் எதிரியை வீழ்த்த, அவர்கள் எடுக்கும் ஆயுதத்தையே நாமும் எடுக்க வேண்டும்; அதேபோல் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பாணியில், 'கவனிப்பு' வேலைகளை செய்தால், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்படும்' என, மேலிடத் தலைவர்களிடம் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... என்னதான் திட்டங்கள், சலுகைகள், தேர்தல் வாக்குறுதிகளை வண்டி, வண்டியா அள்ளிவிட்டாலும், கடைசி நேர பண பட்டுவாடாவுக்கு தான் நிறைய வாக்காளர்கள் முக்கியத்துவம் தருவாங்க... அதனால, ஆளுங்கட்சியினர் பொன் வைக்கிற இடத்துல, நாம பூவையாவது வைக்கணும்னு பா.ஜ.,வினர் நினைக்கிறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
பிப் 10, 2026 11:48

பிஜே பற்றிய செய்தியே டவுட்டாக இருக்கிறது. அந்த செய்தியின் அடிப்படையில் நகர்வுகள் இருந்தால் அதை பற்றியும் ஒரு டவுட்டா ? டவுட்டுக்கு ஒரு அளவே இல்லையா என்ற டவுட்டு வருகிறது


D.Ambujavalli
பிப் 10, 2026 06:20

பாவம், 'யதார்த்தத்தை ' உணர இவருக்கு இத்தனை காலம் ஆகியுள்ளது வேட்பு மனு நேர் கானலின் பொது முதல் கேள்வியே 'எவ்வளவுசெலவு செய்வீர்கள்?' என்பதுதானே இந்த 200/ 300 குமாரி, மூக்குத்தி, hot pack , கொலுசுக்கும் விலைபோகும் மக்கள் உள்ளவரை இது மாறாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை