உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:

சட்டசபை தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியும், ஆச்சரியங்களும் தரக்கூடியதாக இருக்கும் என, ஓட்டு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே நான் சொன்னேன். அது போலவே த.வெ.க., வெற்றி பெற்று, விஜய் முதல்வராகியுள்ளார். 'இதுவரை தலைவிரித்தாடிய லஞ்சம், ஊழலை வேருடன் சாய்ப்போம்' என சொன்னதை, முதல்வர் விஜய் கடந்த 100 நாள் ஆட்சியில் செய்து காட்டியுள்ளார். பெரிய நிறுவனங்கள் நடத்துவோர் கோடிகளை அள்ளிக் கொடுக்கும் நிலை ஒழிக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு:

'தி.மு.க., ஆட்சியில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது'ன்னு, இப்ப சொல்றீங்களே... இதையே, தேர்தலுக்கு முன்னாடி சொல்லிட்டு, தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி த.வெ.க.,வுடன் சேர்ந்திருந்தால், 'டவுட்' இல்லாம தங்களை பாராட்டியிருக்கலாம்... லஞ்சம், ஊழல் செய்றது மட்டும் குற்றம் இல்லை; அதை வேடிக்கை பார்த்துட்டு இருந்தது, அதை விட பெரிய குற்றம் என்பதில், 'டவுட்'டே இல்லை! ----

பத்திரிகை செய்தி:

தி.மு.க., மாவட்டச் செயலர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியில், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறும் முடிவிற்கு வந்துள்ளனர். பதவி பறிப்பு அபாயத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரும் இந்த பட்டியலில் உள்ளார். குதிரை பேர வழக்கு முடிவுக்கு வந்த பின், இவர்களை த.வெ.க.,வில் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

டவுட் தனபாலு:

தி.மு.க.,வில், தற்போது கட்சி பதவிகளுக்கு வயது மற்றும் காலவரம்பு நிர்ணயம் பண்ணியிருப்பது, நிறைய நிர்வாகிகளுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கு என்பதில், 'டவுட்' இல்லை... இதனால, த.வெ.க., விரிக்கும் வலையில், தி.மு.க.,வினர் சுலபமா சிக்கிடுவாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை! ----

தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி:

'இவர்கள் சர்க்கார் நடத்துகின்றனரா; சர்க்கஸ் கம்பெனி நடத்துகின்றனரா' என்று கேட்கும் அளவுக்கு தான், த.வெ.க., அரசின் செயல்பாடுகள் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் இந்தியாவிலேயே, 'நம்பர் ஒன்' மாநிலமாக, 11.19 சதவீத வளர்ச்சியோடு தமிழகத்தை கொண்டு வந்தோம். இன்று அதை அதல பாதாளத்தில் தள்ளி விட்டனர்.

டவுட் தனபாலு:

கடந்த 2021ல், நீங்க ஆட்சிக்கு வரும் முன், தமிழக அரசின் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாய்... 2026ல் நீங்க ஆட்சியை விட்டு இறங்கும்போது, அது 10 லட்சம் கோடி ரூபாய்... கடன் சுமையை ஏற்றியதில், 'நம்பர் ஒன்'னா இருந்தீங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஆக 26, 2026 19:24

ஆள்காட்டி விரலால் ஒருவனை குற்றம் சாட்டும் போது மீதி மூன்று விரல் உன்னை நோக்கி மூன்று பங்கு குற்றம் சுமத்துகிறது என அறிஞர் அண்ணா சொன்னார். லஞ்சம், ஊழல் மட்டும் குற்றம் இல்லை கூட்டணியிலிருந்து, அதற்கு துணை போனது மூன்று மடங்கு குற்றம் புரிகிறதா.. வைகோ.


duruvasar
ஆக 26, 2026 09:29

வைகோ, திருமா பற்றிய செய்திகளை வெளியிட்டு நாம் நம் தரத்தை தாழ்த்திக்கொள்ளுகிறோம் என்ற டவுட்டு தங்களுக்கு வரவில்லையா ?


S.V.Srinivasan
ஆக 26, 2026 09:05

எதையும் பேசும் முன் சற்று யோசித்து பேசுவது நல்லது வைகோ அவர்களே. தேர்தலுக்கு முன் திராவிட மாடல் கூட்டணியில் இருந்து அப்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு காது ஜவ்வு கிழியும் அளவு ஜால்ரா அடித்து . தேர்தலில் அவர்கள் சின்னத்தில் நின்று 2 எம் எல் ஏ தொகுதியும் வென்று, தா வெ க ஆட்சி அமைத்தவுடன் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு உங்கள் முன்னாள் கூட்டணி தலைவரை பற்றி தரக்குறைவாக பேசும் உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா???? அவர்கள் கூட்டணியில் இருக்கும் பொழுது அவர்கள் உத்தம சீலர்கள். இப்போ அவர்கள் லஞ்சம், ஊழல் பேர்வழி. என்ன கொள்கை இது.


முக்கிய வீடியோ