உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கனிமொழி: வரும் 2029-ல், பிரதமர் யார் என்பதை டில்லியில் இருந்து முடிவு செய்ய போவதில்லை; தமிழகத்தில் இருந்து தான் முடிவு செய்ய போகின்றனர். '2026ல் விஜய் முதல்வராவார்' என, கடந்த ஆண்டு நான் கணித்ததை போல, இப்போதும் சொல்கிறேன்... 2029-ல் தமிழகத்தில் இருந்து தான் பிரதமர் வரப் போகிறார். அந்த ஆண்டு, இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழும். விஜயை, முதல்வர் நாற்காலியில் ராகுல் தான் அமர வைத்தார்; அதேபோல் ராகுலே, விஜயை பிரதமராகவும் அமர வைப்பார். டவுட் தனபாலு: அது சரி... விஜயை பிரதமர் நாற்காலியில் அமர வச்சுட்டு, ராகுல் வெளியில இருந்து வேடிக்கை பார்த்துட்டு இருப்பாரா...? ஒருவேளை, போனா போகுதுன்னு, ராகுலுக்கு துணை பிரதமர் பதவி தரலாம்னு யோசனை ஏதும் வச்சிருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசின் 100 நாள் ஆட்சி, சினிமா போல் உள்ளது. தமிழக மக்கள், தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என தெரியாமலேயே, சினிமா நாயகனை நம்பி ஓட்டு போட்டுள்ளனர். அதனால் எம்.எல்.ஏ.,வாகி இருப்பவர்கள், தமிழைக் கூட சரியாக வாசிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். இப்படி ஒரு தவறான ஆட்சியை, இளம் தலைமுறையினர் உருவாக்கியுள்ளனர். டவுட் தனபாலு: 'தமிழ் தமிழ்'னு முழங்கிய திராவிட கட்சிகள் நடத்திய, 59 ஆண்டு கால ஆட்சியில தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுச்சா என்ன...? அவங்க எல்லாம் தமிழின் பெயரை சொல்லி, தங்களை வளப்படுத்திக்கிட்டாங்களே தவிர, தமிழகத்தை வளப்படுத்த ஏதும் செய்யலையே... அந்த கோபத்துல தான், இளம் தலைமுறையினர், த.வெ.க.,வை தேர்வு செஞ்சிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! காங்., கட்சியின், தமிழக சட்டசபை குழு தலைவர் தாரகை கத்பட்: அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் ராகுல். இதுவரை, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என முதல்வர் விஜய் கூறியுள்ளார். த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் புதிதாக வந்தவர்கள்; ரசிகர்கள் தங்கள் தலைவரை பிரதமர் என சொல்கின்றனர். ஆனால், 2029ல் ராகுல் தான் பிரதமர். டவுட் தனபாலு: 'ரசிகர்களை நம்பி விஜய் கட்சி துவங்கியிருக்காரு... அவரால, 10 இடங்கள்ல கூட ஜெயிக்க முடியாது'ன்னு தான், உங்க கட்சி உட்பட எல்லா பெரிய கட்சிகளுமே நினைச்சாங்க... விஜய்க்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் இருப்பதால, 2029 லோக்சபா தேர்தலிலும் அதிசயம் நடக்க வாய்ப்பிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !