உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்:

'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டதற்கு, தி.மு.க-.,வும், அ.தி.மு.க-.,வும் தான் காரணம். போராட்டம் நடத்தி மிரட்ட நினைத்தால், இந்த அரசு ஒருபோதும் அடிபணியாது. டாஸ்மாக் பிரச்னை என்பது, 200 படிக்கட்டுகள் கொண்டது. தற்போது நான், 70 படிக்கட்டுகள் வரை ஏறி விட்டேன்; மீதமுள்ள படிக்கட்டுகளை விரைந்து கடப்பேன்.

டவுட் தனபாலு:

உங்க கருத்தை பார்த்தால், 'மூன்றில் ஒரு பங்கு பிரச்னையை தீர்த்துட்டேன்'னு சொல்ல வர்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதேநேரம், இன்னும் எத்தனை படிகள் நீங்க ஏறியதும், மது பாட்டிலுக்கு கூடுதலா 10 ரூபாய் வாங்குறது குறையும் என்ற, 'டவுட்'டும் கூடவே வருது! ----

பத்திரிகை செய்தி:

தமிழக அரசின் முக்கிய வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார். இந்த நியமனம் தொடர்பான தகவல் ராகுலுக்கு சொல்லப்படாததால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

டவுட் தனபாலு:

அது சரி... 'இந்த சின்ன விஷயத்தை எல்லாம் ராகுலிடம் சொல்லணுமா'ன்னு, த.வெ.க., தரப்பு நினைச்சிருக்கலாம்... ஆனா, பதவிக்கு தேர்வாகியிருக்கும் சிதம்பரமாவது, இந்த தகவலை ராகுல் கவனத்துக்கு கொண்டு போயிருக்கலாமே... அவர், ராகுலை இன்னும் தலைவரா ஏத்துக்கலையோ என்ற, 'டவுட்' தான் வருது! -----

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்:

மக்கள் பணத்தில் நாங்கள், 1 ரூபாய் கூட தொட மாட்டோம்; யாரையும் தொடவும் விட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம். 'முதல்வர் விஜய் பிரதமராக வருவார்' என, அன்பின் மிகுதியால் எங்கள் கட்சியினர் கூறுகின்றனர்; அதிகாரப்பூர்வமாக சொல்வது கிடையாது.

டவுட் தனபாலு:

உங்க தொண்டர்களின் இந்த அன்பால, காங்கிரசுக்கும், உங்க கட்சிக்கும் இடையில கருத்து வேறுபாடுகள் வருதே... இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமா, 'இனிமே, நம்ம கட்சியினர் யாரும் என்னை பிரதமர் வேட்பாளர்னு சொல்லக்கூடாது... ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்'னு, உங்க தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமா அறிவிக்காதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை