UPDATED : ஆக 18, 2025 02:03 AM | ADDED : ஆக 17, 2025 11:59 PM
புதுடில்லி:'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு, 7.5 கோடி பேர் தேசிய கொடிகளுடன், 'செல்பி' எடுத்து பதிவிட்டுள்ளதாக மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' எனப்படும், 'ஹர் கர் திரங்கா' என்ற இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் நான்காம் ஆண்டு கொண்டாட்டம் கடந்த 2ல் துவங்கி மூன்று கட்டங்களாக கடந்த 15ம் தேதி வரை நடந்தது. இந்த ஆண்டின் கருப்பொருளாக தன்னார்வ நடவடிக்கைகள், குடிமைப் பெருமை, துாய்மை இயக்கங்கள் மற்றும் நம் ஆயுதப்படைகள் மற்றும் காவல் துறையினருக்கு நன்றி செலுத்துதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், 'திரங்கா தன்னார்வலர்' என்ற புதிய திட்டமும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற திட்டத்தின் வாயிலாக கடந்த 16ம் தேதி மாலை 6:00 மணி வரை, 7.5 கோடி பேர் வீட்டில் ஏற்றப்பட்ட தேசிய கொடியுடன், 'செல்பி' எடுத்து ஆன்லைனில் பதிவேற்றியுள்ளதாக மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.