மேலும் செய்திகள்
கோவிலுக்குள் செல்வதில் இருதரப்பினர் சமரசம்
08-Dec-2024
ஏழ்மை, தீண்டாமை என்ற தடைகளை தகர்த்தெறிந்த கொரகா சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின பெண், கல்வியில் சாதனை செய்துள்ளார். மன உறுதியும், விடா முயற்சியும் வெற்றிக்கான படிகள் என்பதை நிரூபித்துள்ளார்.அரசியல் அமைப்பு அமலுக்கு வந்து, அனைவரும் கல்வி பெறலாம் என்ற சூழ்நிலை இருந்தும், பல்வேறு சமுதாயங்கள் இன்றைக்கும் கல்வியில் பின் தங்கியுள்ளன. ஜாதி நடைமுறையால் புறக்கணிக்கப்படுகின்றனர்; ஒதுக்கப்படுகின்றனர். சுதந்திரமாக கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவும் இவர்களுக்கு உரிமை இல்லை. இத்தகைய சமுதாயத்தினர் சவால்களை எதிர் கொண்டு வாழ்கின்றனர். 'டாக்டரேட்'
சிலர் மட்டுமே, தடைக்கற்களை துச்சமாக நினைத்து, அவற்றை தகர்த்தெறிந்து சாதனை செய்கின்றனர். இதில் கலாவதியும் ஒருவர். தாழ்த்தப்பட்ட கொரகா சமுதாயம் குறித்து ஆய்வு செய்து, புத்தகம் எழுதி விஜயநகரா, ஹம்பியின் கன்னட பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து, 'டாக்டரேட்' பட்டம் பெற்றுள்ளார்.உடுப்பியின், பிரம்மாவராவின் கடம்கோடு கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி. தாழ்த்தப்பட்ட கொரகா சமுதாயத்தை சேர்ந்தவர். தன் ஊரில் தொடக்க பள்ளியில், படித்தார். அதன்பின் மங்களூரில் பட்டப்படிப்பை முடித்தார். இவர் டாக்டர் மேத்ரியின் வழி காட்டுதலில், கொரகா சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து, புத்தகம் எழுதி 'டாக்டரேட்' பெற்றுள்ளார்.இவர் டாக்டரேட் பட்டம் பெறுவது, அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பத்து ஆண்டுக்கு முன், கொரகா சமுதாயத்துக்கு அரசு நிலம் வழங்க வலியுறுத்தி, நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் சிறைக்கு சென்றார்.மற்றொரு பக்கம் இவரது சமுதாயத்தை, உயர் வர்க்கத்தினர் ஒடுக்கினர். தீண்டாமை இருந்தது; வீட்டில் வாட்டி வதைத்த வறுமை. இதுபோன்ற பல நெருப்பு பாதைகளை கடந்து, இலக்கை எட்டினார்.இதுவரை கொரகா சமுதாயத்தின் நால்வர், பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளனர். 2011ல் தட்சிண கன்னடா, பெல்தங்கடியின் பாபு கொரகா, டாக்டரேட் பட்டம் பெற்றார். இந்த சமுதாயத்தில் இப்பட்டம் முதல் நபர் இவரே. அதன்பின் சபிதாவும், அவரது கணவர் தினகர் கஞ்சூரும், நடப்பாண்டு ஆரம்பத்தில் பெற்றனர். இப்பட்டம் பெற்றவர்களில், கலாவதி நான்காமவர். தொழிற்சாலை
இது தொடர்பாக, கலாவதி கூறியதாவது:என் வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களை கண்டேன். நான் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத வேண்டிய தினமே, என் தந்தை காலமானார். புற்றுநோய் அவரை பலி வாங்கியது. எனவே மறு தேர்வு எழுதினேன். முடிவு வெளியான பின், படிப்பை தொடர விரும்பிய போது, என் குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை.நான் பிடிவாதமாக இருந்ததால், என் குடும்பத்தினர் சம்மதித்தனர். படிப்பை தொடர்வதற்கு முன், இரண்டு ஆண்டுகள் தொழிற்சாலையில் பணியாற்றினேன். அதன்பின் பி.யு.சி.,யில் சேர்ந்தேன். இரண்டாம் ஆண்டு, முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றேன். டி.எட்., கோர்ஸ் படிக்க அரசு சீட் கிடைக்காததால், மீண்டும் முந்திரி தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தேன்.கொரகா மேம்பாட்டு சங்கங்கள் கூட்டுறவின் முன்னாள் தலைவர் பள்ளி கோகுல்தாசின் உதவியுடன், மங்களூரில் பி.எஸ்.டபிள்யூ., கோர்சில் சேர்ந்தேன். அதன்பின் என் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் எதிர் கொண்டன. ஆனால் மனம் தளரவில்லை.டாக்டரேட் படிப்பு முடிப்பதற்கு முன், 2013ல் எனக்கு மைசூரின் ஷைலேந்திர குமாருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் எம்.ஏ., மற்றும் பிஎச்.டி., படிக்க என் கணவர் உதவியாக இருந்தார். என் கடின உழைப்பு, விடா முயற்சியால் இந்த சாதனையை என்னால் செய்ய முடிந்தது.இந்திய அரசின் பழங்குடியினர் நலன் அமைச்சகத்தின் நிதியுதவியால், படித்தேன். எனக்கு நிதியுதவி கிடைத்ததால், என் படிப்புக்கு பண பிரச்னை ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
08-Dec-2024