பிளாஸ்டிக்கால் உருவாகும் செங்கல்கள்: திறமைசாலிகளாக மின்னிடும் மாணவர்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், சூட்டிகையாக, திறமைசாலிகளாக உள்ளனர். படிப்பில் மட்டுமின்றி, பல்வேறு சாதனைகளை செய்கின்றனர். இதற்கு பன்ட்வாலின் கல்லுாரி மாணவர்கள் உதாரணமாக உள்ளனர்.பிளாஸ்டிக் என்பது அபாயமான பொருள். மண்ணில் எளிதில் கரையாது. பல ஆண்டுகள் அப்படியே இருக்கும். பல தரப்பினரும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. வெவ்வேறு வடிவங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. இத்தகைய பிளாஸ்டிக்கையும், நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை, பன்ட்வாலின் கல்லுாரி மாணவர்கள் சாதித்து காட்டியுள்ளனர்.தட்சிண கன்னடா, பன்ட்வாலின் மொடம்காவு கிராமத்தில் கார்மல் பி.யு., கல்லுாரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்கின்றனர். இகோ பிரிக்ஸ் தயாரிக்கின்றனர்.கண்ட, கண்ட இடங்களில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், சாக்லேட் கவர்களை சேகரிக்கின்றனர். பிளாஸ்டிக் பாட்டில்களில், பிளாஸ்டிக் கவர், சாக்லேட் கவர்கள் உட்பட மற்ற பிளாஸ்டிக் பொருட்களை அடைக்கின்றனர்.இதனால் பாட்டில்கள், கற்களை போன்று உறுதியாகும். இதை தான் இகோ பிரிக்ஸ்கள் என அழைக்கின்றனர். இவற்றை செங்கல்களுக்கு மாற்றாக பயன்படுத்துகின்றனர். இதன் உதவியால் கான்கிரீட் இருக்கைகள் தயாரித்துள்ளனர்.பன்ட்வாலின் பி.சி.சாலை பஸ் நிலையத்தில், 50 இகோ பிரிக்ஸ்கள் பயன்படுத்தி தயாரித்த இருக்கை, மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. கல்லுாரி மாணவர்களின் இந்த முயற்சிக்கு, பன்ட்வால் உள்ளாட்சியும், லயன்ஸ் கிளப்பும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இதற்கு முன் இது போன்ற இருக்கைகள், கார்மல் கல்லுாரி வளாகம், கின்னிபெட்டு பள்ளியிலும் அமைக்கப்பட்டு உள்ளது.கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றும் சந்திரிகா ராய் என்பவர், மாணவர்களுக்கு இகோ பிரிக்ஸ் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்துள்ளார். வரும் நாட்களில் பிளாஸ்டிக் கழிவுகள், பெரும் பிரச்னையாக உருவாகாமல் தடுப்பது மிகவும் அவசியம். இதை மனதில் கொண்டு, மாணவர்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. - நமது நிருபர் -