பாட்டி சொல்லை தட்டாதே! செலிபிரிட்டிகளை கவரும் ஓவியர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கலைத்திறன் என்பது அனைவருக்கும் வந்து விடுவது இல்லை. பெலகாவியின் ஒரு இளைஞருக்கு, ஓவியம் கை வந்த கலை. அவரிடம் காகிதம், கல், இலை என, எதை கொடுத்தாலும் சிறிது நேரத்தில் கண் கவர் கலைப்பொருளாக மாறுகிறது. இவரது கலைத்திறனை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது.பெலகாவி, காக்வாடின் மொளே கிராமத்தில் வசிப்பவர் வினோத் படிகேரா. இவர் ஐ.டி.ஐ., பட்டதாரி ஆவார். இவருக்கு புதிதாக எதையாவது கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். இவர் அற்புதமான ஓவிய திறன் படைத்தவர். தான் நடமாடும் பாதையில் கிடைக்கும் கல், கட்டை, மர இலைகளிலும் கலையை தேடும் திறமைசாலி. மூன்றாவது வயதில் தாயை இழந்த இவர், சில ஆண்டுகளுக்கு பின், தந்தையையும் இழந்து பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். அவரது சொல் பேச்சைக்கேட்டு நன்கு படித்தார்; தன் திறமையை வளர்த்து கொண்டார். பெரிய, பெரிய செலிப்ரிட்டிகளின் ஓவியங்களை மர இலை, கட்டை, முத்து, கடலில் கிடைக்கும் கற்களின் மீது வரைவார். இவரது திறமையை பார்த்து, நடிகர், நடிகையரே வியப்படைந்துள்ளனர்.கன்னட திரையுலகின் சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார், சுதீப், ஸ்ருதி, சாது கோகிலா, ஜக்கேஷ் உட்பட, பலரின் படங்களை வரைந்து பரிசளித்துள்ளார். பல அரசியல் தலைவர்களின் படங்களையும் வரைந்துள்ளார். தன் ஓவியங்களை வைத்து, கண்காட்சியும் ஏற்பாடு செய்துள்ளார்.வினோத் படிகேராவின் கலையால் ஈர்க்கப்பட்ட பலரும், இவரிடம் தங்களின் உருவப்படத்தை வரைய வைத்து, பணம் கொடுக்கின்றனர். இந்த பணத்தை பயன்படுத்தி, செலிபிரிட்டிகள், தலைவர்களின் உருவப்படங்களை வரைந்து பரிசளிக்கிறார். தன் உழைப்பு, கலைத்திறனுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என, விரும்புகிறார். நாட்டின் முக்கியமான இடங்களில், தன் ஓவிய கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது, இவரது கனவாகும். - நமது நிருபர் -