திருப்பூர்::திருப்பூரில் 'டாஸ்மாக்' மதுக்கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்த பணத்தை விட்டு விட்டு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டிலை, மூட்டையில் கட்டி திருடி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே சர்மியான் சாஹிப் வீதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை (கடை எண்:1990) செயல்படுகிறது. கடையின் விற்பனையாளராக உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன், 45 என்பவர் உள்ளார். இவர் கடை அருகே அறை எடுத்து தங்கி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை மூடி விட்டு துாங்க சென்றார்.நேற்று காலை, 9:30 மணிக்கு, வங்கியில் செலுத்த விற்பனை பணத் தை எடுக்க கடைக்கு சென்றார். கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராமன், உடனே உயரதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் கடைக்குள் சென்று பார்த்த போது, நேற்று முன்தினம் விற்பனை தொகை, 3.76 லட்சம் ரூபாயை ஒரு கவர் சுற்றில், மறைத்து வைத்திருந்தார். இதனால், பணம் திருடு போகாமல் தப்பியது. மதுபாட்டில்கள் மட்டும் திருடு போனது தெரிந்தது.தெற்கு போலீசார் மதுக்கடைக்கு சென்று, 'சிசிடிவி' கேமரா பதிவை பார்வையிட்டனர். அதில், நள்ளிரவு, 1:00 மணிக்கு பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்த மர்ம ஆசாமி, கல்லாப்பெட்டியில் பணத்தை தேடி கிடைக்காததால், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 30 முதல், 35 மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் கட்டி, தலையில் வைத்தபடி ரோட்டில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து, 'டாஸ்மாக்' அதிகாரிகளும் விசாரித்தனர். தடய அறிவியல் பிரிவினர் கடையில் பதிவான கைரேகையை சேகரித்தனர். மது பாட்டில் திருட்டு குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து மது பாட்டில் திருடி சென்ற மர்ம ஆசாமி குறித்து விசாரிக்கின்றனர். பணத்தை திருட வந்தவர், பணம் கிடைக்காததால், 'சரி வந்தது தான் வந்துட்டோம். 'அட்லீஸ்ட்' சரக்கையாவது கொண்டு போயிடலாம்,' என்றெண்ணி மது பாட்டில் திருடி சென்றது போலீசார் மற்றும் 'டாஸ்மாக்' ஊழியர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.