தாய் தற்கொலை; தந்தை விபத்தில் சாவு நிர்கதியாக நிற்கும் 4 பெண் குழந்தைகள்
மதுரை:தாய் ஓடும் பஸ்சில் விழுந்து தற்கொலை செய்ய, தந்தையும் விபத்தில் பலியாக, கள்ளிக்குடியில் ஆதரவற்ற நான்கு பெண் குழந்தைகள் நிர்கதியாக தவிக்கின்றனர். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், மையிட்டான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன், 44; கோவை, சூலுார் நுாற்பாலையில் பணிபுரிந்தார். இவரது மனைவி நாகலட்சுமி, 28; நுாறு நாள் வேலை திட்டத்தில் பணித்தள மேற்பார்வையாளராக பணியாற்றினார். இந்த தம்பதிக்கு ஐந்து பெண் குழந்தைகள். முதல் குழந்தை பிளஸ் 1, இரண்டாவது 7ம் வகுப்பு, 3வது குழந்தை 4ம் வகுப்பு படிக்கின்றனர். கடைசி குழந்தைக்கு 2 வயது ஆகிறது. நான்காவது குழந்தை சண்முகபிரியா 2024ல் பாம்பு கடித்து பலியானது. கடந்த 2023ல் நாகலட்சுமிக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிகாரி குறித்து புகார் செய்ய மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் நாகலட்சுமி பஸ்சில் சென்றார். மன உளைச்சலில் இருந்த அவர், தன் குழந்தையை அருகில் இருந்த பயணியிடம் கொடுத்துவிட்டு, ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாகலட்சுமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சர் மூர்த்தி அவர்களை அழைத்து பேசினார். நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறி, ஐந்து குழந்தைகளுக்கும் தலா, 1.5 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய ஏற்பாடு செய்தார். அந்த தொகையை குழந்தைகள் 18 வயது நிறைவடையும் போதே பெற முடியும். தாய் இறந்துவிட்ட நிலையில், தந்தை சூலுாரில் பணியாற்றியதால் மற்ற நான்கு பெண் குழந்தைகளும் உறவினர்கள் பராமரிப்பில் இருந்தனர். தந்தை கணேசன், சில நாட்களுக்கு முன் இரவு உணவை முடித்துவிட்டு, காந்திபுரம் - சூலுார் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அவருக்கு பின்னால் சென்ற வாகனம், அவர் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் பலியானார். அவரது இறுதி சடங்கு மையிட்டான்பட்டியில் நேற்று இரவு நடந்தது. நான்கு பெண் குழந்தைகளும் பெற்றோரை இழந்து ஆதரவற்றோராகி விட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்களும் தவிக்கின்றனர். இந்த பெண் குழந்தைகளுக்கு உதவ 90425 18085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.