மேலும் செய்திகள்
திருநங்கை ரபியாவின் நெகிழ்ச்சிப் பயணம்
18-Nov-2026
சான் ஜுவான்: இந்த ஆண்டு 'மிஸ் யுனிவர்ஸ்' எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை, போர்ட்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த, 27 வயதான தாய் ஒருவர் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். கரீபியன் கடற்பகுதியில் உள்ள தீவு நாடான போர்ட்டோ ரிகோ தலைநகர் சான் ஜுவான் நகரில் 75வது பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடந்தது. பிரபஞ்ச அழகி அமைப்பின் 75வது ஆண்டு விழா என்பதால், இந்த போட்டி வைர விழாவாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, 3,150 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட புதிய கிரீடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, வெனிசுலா, டொமினிகன் குடியரசு மற்றும் போர்ட்டோ ரிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முதல் 5 இடங்களுக்கு தேர்வாகினர். இறுதிச் சுற்றில், 'தற்போதைய சூழலில் உலகத் தலைவர்களிடம் இருந்து இந்த உலகத்திற்கு மிகவும் தேவையானது என்ன' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, தொழில்ரீதியாக பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தலைவர்களே இன்றைய உலகிற்கு தேவை. மற்றவர்களை எளிதில் விமர்சிக்கும் மற்றும் கேள்வி கேட்கும் உலகில், ஒரு சிறந்த தலைவர் தன் கொள்கைகளில் உறுதியாக நின்று, சமூகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும், என, போர்ட்டோ ரிகோ நாட்டை சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ கூறினார். நடுவர்களின் மனதைக் கவர்ந்த இந்தப் பதில் அவருக்கு மகுடத்தை பெற்றுத் தந்தது. பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற ஜெனிபர் பாரெட்டோவுக்கு திருமணமாகி, 7 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபஞ்ச அழகிப் போட்டியில், 18 முதல் 28 வயதுக்குட்பட்ட, திருமணமாகாத மற்றும் குழந்தைகள் இல்லாத பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி இருந்தது. ஆனால், 2023-ம் ஆண்டு முதல், திருமணமான பெண்கள், விவாகரத்து ஆனவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் இப்போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதால், ஒரு குழந்தைக்கு தாயான ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடியுள்ளார். இதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் தாய் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பிரபஞ்ச அழகி போட்டியில், நம் நாட்டின் சார்பில், கேரளாவைச் சேர்ந்த சட்ட மாணவி காசியா லிஸ் மேஜோ, 19, பங்கேற்றார். போட்டியின் ஒரு கட்டமாக, 30 பேர் தேர்வாகினர். அதில் காசியாவும் இடம்பெற்றார். அடுத்தகட்டமாக, 12 பேர் அடுத்தச் சுற்றுக்கு தேர்வாகினர். அதில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார்.
18-Nov-2026