'மகாபாரதம் இதிகாசமானது; பகவத்கீதை வேதமானது; கண்ணன், அர்ச்சுனன் அனைவரும் கடவுளானார்கள். எல்லாம் சரி... கூட்டம் கூட்டமாக வெட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் செத்துப்போன சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?' அவர்கள் என்ன ஆனார்கள் என நமக்குத்தெரியாது. ஆனால், நமது இந்த வார கவிஞர் எழுப்பிய அந்த கேள்வி தான் அவரை பிரபலம் ஆக்கியது.படித்தது பொறியியல், பணியாற்றுவது மின்னியல், மின்னணுவியல் துறை பொறியாளாராக. வயது ஒன்றும் அதிகமில்லை; 31 தான். இந்த வயது இளைஞர்கள், பொழுது போக்க வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்க, இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட்டு, சிற்றிதழ்களை நடத்தி, நவீன தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை பரவலாக ஈர்த்து வருகிறார் இந்த பொள்ளாச்சி இளைஞர். 'பூபாலகிருஷ்ணமூர்த்தி' என்ற இயற்பெயர் கொண்டவர், 'இரா.பூபாலன்' எனும் பெயரால் இலக்கிய உலகில் அறியப்படுபவர். தான் காணும் அனைத்து விஷயங்களையும் கவிதையாய் நெய்து விடும் அவருக்கு, சொந்த ஊர் ஆனைமலையை அடுத்த பெத்தநாயக்கனூர். பணிக்காக குடியியேறியது சூலக்கல்லில். பூபாலனுக்கு சிறு வயதில் அவரின் பாட்டி சொன்ன நீதிக்கதைகளும், அதில் உலா வந்த பாத்திரங்களும் கற்பனை உலகை அறிமுகப்படுத்தியுள்ளன. தொடர்ந்து தேடித்தேடி வாசித்த புத்தகங்கள், அவரை எழுதத்துாண்டின. அவரின் படைப்புத்திறனை இனங்கண்டு கொண்டு, மாமா செந்தில்குமாரும், தமிழாசிரியர்களும் கொடுத்த ஊக்கம் அவரை முழுக்கவிஞனாய் வார்த்தெடுத்துள்ளன. அவர் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு, 'பொம்மைகளின் மொழி' எனும் தலைப்பில், 2010ம் ஆண்டு வெளியானது. இரண்டாம் தொகுப்பு, கடந்தாண்டு 'பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு' எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது. 'கருந்துளை' எனும் சிற்றிதழையும் நண்பர்களுடன் இணைந்து நடத்துகிறார்.கவிஞர் பூபாலன் நமது நிருபரிடம் கூறியதாவது:பள்ளிக்காலம் தொட்டு, பள்ளி நேரம் முடிந்தவுடன் பாடப்புத்தகங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பிற புத்தகங்களை கையில் எடுத்துக்கொள்வேன். ஒரு மனிதனை அறிவு முதிர்ச்சியில் முழுமையாக்குவது, பாதி பாடப்புத்தகங்கள் என்றால், மீதி 'பாடமல்லாத' புத்தகங்கள் தான். அவனே படைப்பாளியாக மாற, புத்தகங்களை தேடித்தேடி வாசிக்கும் பசியுள்ளவனாக இருக்க வேண்டும். எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகப்பசி அதிகம். அது தான் என்னை எழுதத்துாண்டியது.அதிலும், பல்லாயிரம் ஆண்டு பழமை மிக்க, நம் மொழியில் இதிகாச காப்பியங்களும், பெரும் இலக்கியங்களும் உருவான கவிதை வடிவம், என்னை கவர்ந்தது. தாலாட்டு முதல் ஒப்பாரி வரையான நம் உணர்வுகளின் வெளிப்பாடுகளை கவிதை வடிவமாகவே பார்க்கிறேன்.தொடர்ந்து எழுதி வந்த எனக்கு, கவிதை தொகுப்பை வெளியிடும் சூழல் இல்லாத நிலையில், நான் பணியாற்றும் நிறுவனத்தின் இயக்குனரும், மூத்த கவிஞருமான கவிதாசன், என் முதல் கவிதை தொகுப்பை, தன் சொந்த முயற்சியில் வெளியிட்டார். அது தான் என் இலக்கிய பயணத்திற்கான எரிபொருளாக இருந்தது.அக உணர்வுகளையும், அழகியலையும் கவிதைகளாக்கினாலும், சமூக மாற்றத்திற்கான கவிதைகளை எழுதுவதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இனி சமூகத்திற்கான எழுத்துகளை அதிகரிக்கும் எண்ணமுள்ளது.என்னை முதன்முதலில் சிந்திக்க துாண்டியது என் பாட்டி சொன்ன கதைகள் தான். என்னை நல்வழியில் கூட்டி வந்தது என் வாசிப்பு பழக்கம் மட்டுமே தான். மேலும், இரண்டு வயதில் குழந்தைகளை புத்தக சுமை துாக்கிகளாக மாற்றி, பள்ளிக்கு அனுப்புவதில் எனக்கு உடன்பாடில்லை. குழந்தைகள் குழந்தைகளாக வளரவேண்டும்; குழந்தைதன்மையை இழக்காமல் வளர வேண்டும் என்பதே என் ஆசை.இவ்வாறு அவர் கூறினார்.கட்டுரையின் துவக்கத்தில் அளிக்கப்பட்டிருந்தது பூபாலனின் புன்னகை என்ற சிற்றிதழில் வெளியான கவிதை வரிகள் தான். அதை படித்து வியந்த மறைந்த எழுத்தாளர் சுஜாதா, தான் பிரபல வார இதழில் எழுதி வந்த தொடர் கட்டுரையில் பாராட்டினார். அது தமிழ் கவிதையுலகில் பூபாலனுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.'சிறுதுளியாய் சேர்த்து வைத்ததை சீட்டுக்கம்பெனியில் போடக் காத்திருக்கையில், கைபிடித்து 'வேண்டாம்' என அழைத்து வந்த முகமறியா லுங்கி வேட்டிக்காரரும் கடவுளாயிருக்கலாம்,' என சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் ஒரு சேர பிரதிபலித்துச் செல்கின்றன பூபாலனின் வரிகள்.பயோ டேட்டா:பெயர்: இரா.பூபாலன் எனும் பூபாலகிருஷ்ணமூர்த்திதொழில்: பொறியாளர்இலக்கிய பங்களிப்பு: இரு கவிதை தொகுப்புகள், சிற்றிதழ்கள், பல்வேறு பிரபல வார இதழ்களில் கவிதைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. 'பொள்ளாச்சி இலக்கிய வட்டம்' அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவர்.-நமது நிருபர்-