பொதுக்கழிப்பறை உடைப்பை சீரமைத்த மூதாட்டிக்கு பாராட்டு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருச்சி:துவாக்குடியில், பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் உடைப்பில், மூதாட்டி ஒருவர் மண்ணை கொட்டி, உடைப்பை தற்காலிகமாக சீரமைத்தார்.திருச்சி மாவட்டம், துவாக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், இலவச பொது கழிப்பறை உள்ளது. முறையாக பராமரிப்பில்லாத கழிப்பறையின் செப்டிக் டேங்க் நிரம்பியதால், கடந்த சில நாட்களாக, டேங்க்கில் இருந்து, கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது.இதனால், கடும் துர்நாற்றம் வீசியதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து, துவாக்குடி நகராட்சியிடம் புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், மண்ணை எடுத்து வந்து கொட்டி, செப்டிக் டேங்க்கில் இருந்து கழிவுநீர் வெளியேறியதை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, மூதாட்டியை பொதுமக்கள் பாராட்டினர். மேலும், செப்டிக் டேங்க்கை உடனே சீரமைத்து தர வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.