ஓபன் ஏ.ஐ., தலைமை பொறுப்பில் புதுச்சேரி இளைஞர் விஜய் ராஜி
புதுடில்லி : அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியவம்சாவளியும், புதுச்சேரியைச் சேர்ந்தவருமான விஜய் ராஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் சாட் ஜி.பி.டி., நிறுவனம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனம், தங்கள் செயல்பாட்டை விரிவுபடுத்தும் வகையில், ஏ.ஐ.,க்கான செயலிகளை உருவாக்கும் 'ஸ்டாட்சிக்' நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளியும், புதுச்சேரியைச் சேர்ந்தவருமான விஜய் ராஜி என்பவர் உள்ளார். 'ஸ்டாட்சிக்' நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சாட் ஜி.பி.டி., மற்றும் 'கோடெக்ஸ்' தொடர்பான செயலிகளின் செயல்பாடுகளை விஜய் மேற்பார்வையிடுவதுடன், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் உள்கட்டமைப்புக்கான பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தில் பணிபுரியும் பிற தலைமை பொறுப்புகளும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.