UPDATED : டிச 04, 2024 04:55 AM | ADDED : டிச 04, 2024 01:15 AM
மீரட்: மீரட்டில் நடந்த ஒரு திருமண விழாவில், மணப்பெண் வீட்டிலிருந்து மணமகன் வீட்டாருக்கு சீதனமாக, 2.5 கோடி ரூபாய் வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.உத்தர பிரதேசத்தின் மீரட்டில், முஸ்லிம் திருமண விழா ஒன்று சமீபத்தில் நடந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. மணமகன் குடும்பத்தாருக்கு, மணமகள் தரப்பில் இருந்து சீதனமாக, 2.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. பணம் நிரம்பிய சூட்கேஸ்கள் வரிசையாக வழங்கப்பட்டன.இதைத் தவிர, மணமகனின் செருப்பை, மணப்பெண்ணின் சகோதரிகள் எடுத்துக் கொள்வதும், அதை திருப்பித் தருவதற்கு பணம் கொடுப்பதும் வழக்கம். அந்த வகையில், மணமகளின் சகோதரிகளுக்கு, 11 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுக்கப்பட்டது.மீரட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் இந்த ஆடம்பர திருமணம் நடந்தது. இதில் இருதரப்பும் தங்களுடைய செல்வ செழிப்பை மாறி மாறி வெளிப்படுத்தினர். திருமணத்தை நடத்தி வைத்த மதத் தலைவருக்கு, மணமகன் தரப்பில் இருந்து, 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், மணமகளின் சொந்த ஊரான காஜியாபாதில் உள்ள மசூதிக்கு, மணமகன் தரப்பில் 8 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.இதற்கிடையே மணமகளின் உறவினர் ஒருவர், சொகுசு கார் வாங்குவதற்காக, 75 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சில சூட்கேஸ்கள், மணமகன் தரப்புக்கு வழங்கப்பட்டன. ஆனால், மணமக்களின் குடும்பங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.