கைநாட்டு டூ கையெழுத்து: சாதித்து காட்டிய கிராமத்து பெண்கள்
கல்விக்கு வயது தடை இல்லை. எந்த வயதிலும் கல்வி கற்கலாம் என்பதை, யாத்கிரின் கோனாளா கிராமத்து பெண்கள் நிரூபித்துள்ளனர்.கல்வி கற்பதற்கு, வயது வரம்பு இல்லை. எந்த வயதிலும் கல்வி கற்கலாம். ஆர்வம், மன உறுதி இருந்தால் போதும். தங்களாலும் நினைத்ததை அடையலாம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என, கேட்கும் காலம் ஒன்றிருந்தது. படிப்பில் ஆர்வம் இருந்தும், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்பவில்லை.தற்போதைய கால கட்டத்தில், பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். பெண்கள் உயர் கல்வி கற்கின்றனர். அனைத்து துறைகளிலும் உயர் பதவி வகிக்கின்றனர். இவர்களை பார்க்கும் போது, தாங்களும் படிக்காமல் போய் விட்டோமே என்ற ஏக்கம், படிக்காத பெண்களுக்கு ஏற்படுகிறது. புதிய திட்டம்
இத்தகைய பெண்களுக்காக, கொப்பால், வடகேராவின், கோனாளா கிராமத்தின் மகளிர் சுய உதவிக்குழு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கிராமத்தின் பெண்கள், மூதாட்டிகளுக்கு கல்வி கற்று தருகின்றனர். இவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். இப்போது பலர் எழுதவும், படிக்கவும் கற்றுள்ளனர்.கோனாளா மட்டுமின்றி, வடகேரா தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராமங்களின் கட்டட கூலி வேலை, விவசாய கூலி வேலை செய்யும் பெண்களுக்கு கல்வி போதிக்கின்றனர். இவர்கள் மாநிலத்தின் மற்ற கிராமத்தினருக்கு முன் மாதிரியாக விளங்குகின்றனர்.இது குறித்து, கோனாளா கிராமத்தின் விவசாய கூலி வேலை செய்யும் தேவேந்திரம்மா கூறியதாவது:நான் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன் வங்கிக்கு சென்றால், கை ரேகை வைப்பேன்; இப்போது கையெழுத்திடுகிறேன். என்னை போன்ற பல பெண்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுவினர் மாலை நேரத்தில் கல்வி கற்று தருகின்றனர். சிலேட்கள்
நாள் முழுதும் வேலை செய்யும் நாங்கள், மாலை வீட்டுக்கு வந்து சமைத்து, குடும்பத்தினருக்கு பரிமாறிய பின், புத்தகங்களுடன் படிக்க செல்கிறோம். மூதாட்டிகள் பலரும் கல்வி கற்க வருகின்றனர். சிலேட்டில் எழுதி பழகுகிறோம்.கோனாளா, குரகுந்தா, தடிபிடி, ஐக்கூரா, ஹய்யாளா (பி), ஹாலகேரா, துமகூரு கிராம பஞ்சாயத்துகளில், முதியோர் கல்வி நடக்கிறது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், வீடு, வீடாக சென்று பெண்களுக்கு கல்வி கற்று தருகின்றனர். இவர்களால் என்னை போன்ற கைநாட்டு பெண்கள், கையெழுத்து போடும் அளவுக்கு உயர்ந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.