என்.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'துரோகிகளையும், விரோதிகளையும் மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க மாட்டேன்' என்று பிடிவாதம் பிடிக்கிறார், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி.ஓநாயும், வெள்ளாடும் ஒன்று பட்டு நிற்க முடியாது என்று நியாயம் வேறு பேசுகிறார்.பன்னீர்செல்வத்தை துரோகி என்றும், ஓநாய் என்றும் சுட்டிக்காட்டும் பழனிசாமி, தன்னைப்பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது.பன்னீர்செல்வம் பதவிக்கு ஆசைப்படுபவர் என்ற குற்றச்சாட்டைத் தவிர்த்து, அவர் யாருக்கும் துரோகம் செய்ததில்லை.அவர் மீது இருந்த அபார நம்பிக்கையால் தான், தான் வகித்த முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார், ஜெயலலிதா. சசிகலாவுக்கும் அவர் துரோகம் செய்யவில்லை. பதவியில் இருந்து விலகு என்றதும், அமைதியாக விலகிச் சென்றவர் தான் பன்னீர்செல்வம். ஆனால், பழனிசாமியோ தன்னை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த சசிகலாவையே, அ.தி.மு.க., விலிருந்து அதிரடியாக நீக்கி, அவருக்கு துரோகம் இழைத்தார். சசிகலாவை மட்டும் அல்ல, பன்னீர்செல்வம் மற்றும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கினார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா காலத்தில் செல்வாக்குடன் இருந்த அ.தி.மு.க., இன்று பிளவுபடக் காரணமே பழனிசாமி தான்!கட்சியில் தான் சொல்வதை மற்றவர்கள் ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்கக் கூடாது என்ற மனநிலைக்கு பழனிசாமி வந்து விட்டார்.இன்று, அ.தி.மு.க., மூன்றாக பிளவு பட்டிருக்கும் நிலையில், 2026 சட்டசபை தேர்தலில், எப்படி பழனிசாமியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்?மொத்தத்தில், தன் சுயநலத்தால், அ.தி.மு.க.,வை பழைய பெருங்காய டப்பாவாக ஆக்கி விட்டார், பழனிசாமி! குளிர்காய நினைக்காதீர்!
தேவ்.பாண்டே,
செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மும்மொழிக் கொள்கையை
எதிர்த்து, சென்னையில் தி.மு.க., கூட்டணியினர் நடத்திய கண்டன
ஆர்ப்பாட்டத்தில்,'இது மாணவர்களின் பிரச்னை, ஹிந்தி எதிர்ப்பு
போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரை துறந்தனர்; மும்மொழிக்
கொள்கையை எதிர்க்க, உயிரை விடவும், தமிழ் மொழியை காக்கவும் தயாராக
இருக்கிறோம்' என, பேசியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி. கடந்த 1965
பிப்ரவரி யில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், 18 நாட்கள் நடந்தது.
இப்போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், விஷம்
அருந்தியும், தீக்குளித்தும், 63 பேர் இறந்தனர். போராட்டக்காரர்களால் இரு
போலீஸ் அதிகாரிகளும் இறந்தனர்.அதேநேரம், உயிரை விட்டவர்களில்
கருணாநிதி மற்றும் அக்கட்சி முக்கியஸ்தர்களின் வாரிசுகள் எவரும் இல்லை;
குண்டு அடிபட்டு இறந்தவர்கள் எல்லாம் இவர்களின் உசுப்பலால், போராடிய
அப்பாவிகள்!'இது மாணவர்களின் உரிமைக்கான பிரச்னைஎன்பதால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்' என்கிறார்.தி.மு.க.,வுக்கு
தேவைப் படும் போதெல்லாம் மாணவர்களை துாண்டி, அவர்களை பலிகடா ஆக்குவதும்,
உசுப்பி விட்டு, ஓரமாக ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும் தானே
அக்கட்சியின் குணம்!இப்படித்தான், 'அடைந்தால் திராவிட நாடு;
இல்லையேல் சுடுகாடு' என்றார் அண்ணாதுரை. திராவிட நாடு தான்
கிடைக்கவில்லையே... சுடுகாட்டிற்கு போனவர்கள் எத்தனை பேர் என்று, இன்று வரை
கணக்கு கூறவில்லை! கடந்த 1965 மார்ச் 1ம் தேதி, 'விடுதலை'
நாளிதழில்,'ஹிந்தி எதிர்ப்பு என்பது மொழி சிக்கல் அல்ல; அரசியல் சிக்கல்'
என்று எழுதியுள்ளார், ஈ.வெ.ரா., அவர் கூறியது போல், மொழி பிரச்னையை அரசியலாக்கி, அன்று போல் இன்றும் குளிர்காய நினைக்கிறது தி.மு.க.,!ஆனால், அன்றைய மக்கள் போல், இன்று இருப்பவர்கள் அறியாமை நிறைந்தவர்கள் அல்ல என்பதை மறந்து விட்டனர், தி.மு.க.,வினர்! நடைமுறை படுத்து வரா?
எஸ்.ஸ்ரீனிவாச
ராகவன், வழக்கறிஞர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: ஒரு வழக்கறிஞர்,
சமூகத்திற்கு தன்னால் முடிந்தவரை உதவுதல் என்பது ஓர் அறம்; என்னைத் தேடி
வரும் நபர்களுக்கு வழக்கு மற்றும் -சட்டம் சார்ந்த ஆலோசனைகள் சொல்ல நேரும்
போது, அதற்கு நான் ஊதியம் வாங்குவதில்லை. இதை சிறு சேவையாக கருதுவதால்,
இதற்காக செலவாகும் நேரமோ, பண இழப்போ பெரிதாகதெரிவதில்லை. நான் மட்டுமல்ல; பலர், இலவச சட்ட ஆலோசனையை தந்து கொண்டு தான் இருக்கின்றனர். பிறப்பு
- இறப்பு பதிவு, நாமினி உரிமைகள், கடனுக்காக ஜாமின் தருதல், பெயர்
மாற்றம், உயில் பதிவு, திருமணப் பதிவு, வங்கிக் கடன், மருத்துவக் காப்பீடு,
சாலை விபத்து என்று நீதிமன்றம் போகாத, ஆனால், சட்டம் சார்ந்த சந்தேகங்களை,
ஒரு வழக்கறிஞர் இலவச சட்ட உதவியால் தீர்த்து வைக்கமுடியும். அதேநேரம், பொதுமக்கள் இவர்களை தெரிந்து வைத்திருப்பதிலும், தொடர்பு கொள்வதிலும் நடைமுறையில் பல சிக்கல்கள் உண்டு.இதை தவிர்க்க, இலவச சட்ட ஆலோசனை வழங்குவதை, தன்னார்வ அமைப்பு, சுயஉதவி குழு, சட்ட உதவி மையங்கள், நுகர்வோர் அமைப்புகள் செய்யலாம். இளம்
மற்றும் வளரும் வழக்கறிஞர்களையும், சட்ட மாணவர்களையும் இதில்
ஈடுபடுத்தலாம். தேவைப்படும் போது மூத்த வழக்கறிஞர்களையும், ஓய்வு பெற்ற
நீதிபதிகளையும் இச்சேவையில் ஈடுபடுத்தலாம்.இதனால், ஏமாற்றப்படுவது, சுரண்டப்படுவதில் இருந்து, ஏழை தொழிலாளிகளும், பெண்களும், விளிம்புநிலை மனிதர்களும் பாதுகாக்கப்படுவர். இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் இது மிகச் சாதாரணமாக செயல்படுத்தப்படக் கூடியதே! ஒரு தொலைபேசி அழைப்பில் சரியான வழிகாட்டுதல் கிடைத்துவிடும். மேலும், சட்டம் குறித்த விழிப்புணர்வு பாமர மக்களையும் சென்றடையும்! தேசிய - மாநில சட்ட உதவி ஆணையம் நினைத்தால், இதை எளிதில் நடைமுறைப்படுத்த முடியும்.செய்வரா? பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளை திறங்கள்!
சுக.மதிமாறன்,
நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் இருக்கும் ஒரு சில கட்சிகளைத் தவிர, அனைத்துக் கட்சிகளும்
புதிய கல்வித் திட்டத்தின் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருகிறது. புதிய
கல்வித் திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் கற்க வேண்டும் என்று எங்கும்
கூறியதாக தெரியவில்லை; இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும்
என்றுதான் கூறப்பட்டுள்ளது.அரசுக்கு எதிரான பிரச்னைகளை மடைமாற்றம் செய்யும் விதமாக, ஹிந்தியை திணிப்பதாக கூறி, இத்திட்டத்தை அமல்படுத்த மறுக்கிறது அரசு.அதனால்,
தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியின் வாயிலாக, கேந்திரிய வித்யாலயா பள்ளியை
போன்று, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளையும் மத்திய அரசே நேரடியாக தமிழகத்தில்
திறக்கலாமே!மூன்றாவது மொழியை கற்கும் ஆர்வம் உள்ளவர்கள், தனியார்
பள்ளியில் சேர பொருளாதாரம் இடம் கொடுக்காத நிலையில், மத்திய அரசின் நேரடிப்
பள்ளிகளில் சேர்ந்து பயன்பெற முடியுமே!