உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அகிலேஷின் அறிவாற்றல்!

அகிலேஷின் அறிவாற்றல்!

ஆர்.இளமாறன், ஈரோட்டில் இருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அளக்கிற நாழி அகவிலை அறியுமா!' என்பது போல், மத்திய அரசு, 'ஒரே நாடு; ஒரே வரி' என்று கூறியதன் பொருள் புரியாமல் உளறிக் கொட்டியுள்ளார், சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்.'ஒரே நாடு; ஒரே வரி' என்று ஜி.எஸ்.டி.,குறித்து பா.ஜ., கூறியது; ஆனால், ஜி.எஸ்.டி.,யில் பல்வேறு விகிதங்களில் வரிகள் விதிக்கப்படுகின்றன; ஒரே வரி என்பது சுத்த பொய். இந்த அனைத்து வரிகளும் கடைசியில் பொதுமக்கள் தலையில் தான் விழுகிறது' என்று வெகு சிரத்தையாக ஆராய்ந்து, கண்டுபிடித்து கூறியுள்ளார், அகிலேஷ் யாதவ்.இப்படிப்பட்ட அறிவாளிகளை, உ.பி.,மக்கள் எப்படி தேர்ந்தெடுத்து, முதல்வர் ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்த்தனரோ தெரியவில்லை!ஜி.எஸ்.டி., என்பது ஒரே தலைப்பிலானவரி தானே தவிர, எல்லாப் பொருட்களுக்கும்ஒரே விதமான வரி அல்ல!நாம் அன்றாடம் உண்ணும் அரிசிக்கும்,ஆடம்பர பொருட்களில் ஒன்றான ஆடி காருக்கும் ஒரே விதமான வரியா விதிப்பர்...கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?'அனைத்து வரிகளும் பொதுமக்கள் தலையில் தான் விழுகிறது' என்று வேறு அங்கலாய்த்துள்ளார்.மத்திய அரசோ, மாநில அரசோ எந்த அரசாக இருந்தாலும், வரி என்று ஒன்றை விதித்தால், அது பொதுமக்கள் தலையில்தான் வந்து விழும் என்பது கூடவா தெரியவில்லை?அகிலேஷ் முதல்வராக குப்பை கொட்டிக்கொண்டிருந்த காலத்தில், உ.பி.,யில், அரசு விதித்த வரிகள் அனைத்தையும் அரசியல்வாதிகளே கட்டிக் கொண்டிருந்ததுபோலவும், தற்போது, பா.ஜ., அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி., என்ற வரி மட்டும் பொதுமக்கள் தலையில் வந்து விழுவது போலவும் கூறியுள்ளார். கொஞ்சம் சிந்தித்துப் பேச கற்றுக் கொள்ளுங்கள் அகிலேஷ்!

உலக நாயகனின் தியாகம் ஓட்டாகுமா?

ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'உலக நாயகன் பட்டத்தை, நடிகர் கமல் யாருக்கும் பயந்து துறக்கவில்லை...' என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலசெயலர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார். அடடே... என்னே ஒருவிளக்கம்... நாட்டுக்குஅதிமுக்கியமான விளக்கத்தை அல்லவா கொடுத்துள்ளார். அப்படியே,ஊழலை ஒழிக்கப் போவதாக, ஏகப்பட்ட, 'பில்டப்'காட்டிய கமல், விஞ்ஞானஊழலில், பட்ட மேற்படிப்புமுடித்த தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தது ஏன் என்பதையும் கொஞ்சம் விளக்கலாம்!அதோடு, கட்சியில் மட்டுமின்றி, சினிமா துறையிலும் தி.மு.க., கம்பெனியின், 'ரெட் ஜெயின்ட் மூவிஸை' இறுகப் பற்றிக் கொண்ட காரணத்தையும் சொல்லலாம்!தன் திரைப்படமான, தசாவதாரத்தில் நடித்ததால் மட்டுமே, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கமலுக்கு, 'உலகநாயகன்' பட்டத்தைக் கொடுத்தார். மற்றபடி, அவரது திரைப்படம் வசூலில் சாதனை புரிந்ததற்காகவோ, நீண்ட நாட்கள் படம் ஓடியதாலோ, திரைப்பட உலக விருதான, ஆஸ்கரைவென்றதாலோ, அவருக்குயாரும் இந்த பட்டத்தைக் கொடுக்கவில்லை. கமல் உலக நாயகன் பட்டத்தை துறப்பதில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? அவர், ஈரேழு உலக நாயகன் என்றுகூட,தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டாலும், யாரும் அதை கண்டுகொள்ளப் போவதில்லை. அப்புறம் எதற்கு இந்த விளக்கம்? ஒருவேளை, இதைஎல்லாம் ஒரு தியாகமாக சொல்லி, மக்களின் அனுதாபம் கிடைக்கும் என்று நம்பி, ஓட்டு சேகரிக்க நினைக்கின்றனரோமக்கள் நீதி மய்யம் கட்சியினர்...அது சரி... எதைத் தின்றால் பித்தம் தெளியும்என்ற நிலையில் உள்ளவர்தானே கமல்! அதனால், இப்படியும்கூட முயற்சித்துப்பார்க்கலாம்!

பிரதம ர் தலையிட வேண்டும்!

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மணிப்பூரில், மெய்திபழங்குடியினர் மற்றும் கூகி நாகா சமூகங்கள், பழங்குடியின பட்டியலில்இடம் பெறுவது தொடர்பாகமோதிக் கொள்கின்றனர். இம்மோதலின் பின்னணியில்,மதம், இனம், சமூகம், போதைப்பொருள் கடத்தல்போன்ற பிற அம்சங்களும்பின்னிக் கிடக்கின்றன. இரு சமூகங்களின் கோரிக்கைக்கு, மாநில அரசால் இணக்கமான தீர்வுகாண இயலாதது தான், வன்முறைக்கு வித்திட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட, 5,000 மத்தியபாதுகாப்புப் படையினரை,உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. அதனால்என்ன பயன்? முறையானகருத்து பரிமாற்றம் இல்லாமல், அடக்குமுறையால் அமைதியை ஏற்படுத்திவிட முடியுமா? மத்திய, மாநில அரசுகள்பேச்சுவார்த்தை நடத்துவதன் வாயிலாக மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்!இக்கலவரங்களுக்கு பின்னணியில் உள்ள வெளிநாட்டு சக்திகளை, மத்திய உளவுத் துறையால் கண்டறிய முடியாதா? இன மோதலை, மதக் கலவரமாக சாயம் பூசும் விஷமிகளை, பார்லிமென்ட் நிலைக்குழு முன், அடையாளம் காட்டு வதில் என்ன தயக்கம்?அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவிய வன்முறையாளர்களை விரட்டியடித்து, மண்ணின் மைந்தர்களின் உரிமைக் குரலை, அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று, கள நிலவரத்தை கண்டு, கேட்டு அறிய வேண்டும்.பிரதமர் தலையிட்டால் மட்டுமே இப்பிரச்னை தீரும்!

கரை சேர்வாரா பழனிசாமி!

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை,குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எம்.ஜி.ஆர்., மற்றும்கட்சியின் மூத்த தலைவர்களை, அ.தி.மு.க., இன்னும்மறக்காமல் தான் உள்ளது என்று காட்டிக்கொள்ள, ஜானகி அம்மாள் நுாற்றாண்டு விழாவை நடத்தியுள்ளார், முன்னாள்முதல்வர் பழனிசாமி. கடந்த, 2021 தமிழக சட்டசபை தேர்தலில், ஆட்சியை இழக்க, மதவாதபா.ஜ.,வுடனான கூட்டணிதான் காரணம் என பழி போட்டவர், அடுத்து வந்தலோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவி, தன் நிலை என்ன என்பதை புரிந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு வெற்றி தந்த இரட்டை இலை, தமக்கும் வெற்றி இலையாகஅமையும் என காத்திருந்தவருக்கு, தொடர்ந்து ஏமாற்றமே மிச்சமானது. இதனால், வரப்போகும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, வலுவான கூட்டணி அமைக்க பழனிசாமி ஆசைப்படுகிறார்.ஆனால், சாண் ஏறினால், முழம் சறுக்குகிறதே...சீமானை தாஜா பண்ணினார், விஜய்க்கு, தன் கட்சியினரை வைத்து பாமாலை படித்துப் பார்த்தார்... ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் தான், ஜானகி ராமச்சந்திரன் நுாற்றாண்டு விழாவை நடத்தி, 'அ.தி.மு.க.,வை அழிக்கவோ, முடக்கவோ முடியாது' என, வீராவேசமாக பேசியுள்ளார். ஏன் இந்த ஆவேசம்... அ.தி.மு.க., பலமின்றி, சோகையாக இருப்பதை புரிந்து கொண்டதன் விளைவு! அடுத்து, இரட்டை இலை மட்டும் வெற்றி தராது; வலுவான கூட்டணி தேவை. தேசிய கட்சியின் ஆதரவு தேவை என, கட்சியின் முக்கிய தலைவர்கள் கருதுவது...இவையே, பழனிசாமியை கொந்தளிக்க வைத்துள்ளது. பார்க்கலாம்... அ.தி.மு.க.,வை, பழனிசாமி கரை சேர்ப்பாரா அல்லது நந்தவனத்து ஆண்டி, கூத்தாடிபோட்டு உடைத்த தோண்டிபோல், ஆகப் போகிறதா என்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:10

அகிலேஷைப் போலவே தத்திகள் பலர் உண்டு.. திணிக்கப்பட்ட வாரிசுகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சிங்கப்பூர் சேகரன் அடிக்கடி எழுதுவார்.. முழு உண்மை .....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:06

கமலை இன்னமும் சிலர் நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம்தான் ......


Dharmavaan
டிச 08, 2024 09:44

வரி பற்றி அடிப்படை அறிவற்ற அகிலேஷ் என்பது தெரிகிறது. இவரெல்லாம் முதல்வரா


VENKATASUBRAMANIAN
டிச 08, 2024 08:59

மணிப்பூர் பற்றி பேச காங்கிரஸுக்கு யோக்கியதை கிடையாது. மேலும் தீவிரவாதிகள் நடமாடும் இடத்திற்கு ராணுவம் தான் போக வேண்டும். பிரதமர் இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:05

பிரதமர் போகவேண்டும் என்று சொல்பவர்கள் உண்மையில் மணிப்பூர் பிரச்னை தீர்வதை விரும்பாதவர்கள். காங்கிரஸ் விதைத்து விட்டுப்போன காஷ்மீர் பிரச்னையையே தீர்த்த நம் அரசு இதைச் செய்திருக்கலாம்தான்.. வெளிநாட்டு சக்திகள் காரணம் என்றால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ......


D.Ambujavalli
டிச 08, 2024 06:37

உலகில் உள்ள குட்டி குட்டி நாட்டைக்கூட விடாது விஜயம் செய்யும் பிரதமருக்கு ஏனோ மணிப்பூர் இந்தியாவில் இருப்பதோ, அங்கு செல்வது கடினமான பயனுமில்லை என்பதும் தோன்றவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை