உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தி.மு.க.,வின் ஹரிக்கேன் விளக்கு, லாஜிக்!

தி.மு.க.,வின் ஹரிக்கேன் விளக்கு, லாஜிக்!

ச.பூட்டுதாசன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: வழிப்போக்கர் ஒருவர் வெகுதுாரத்தில் உள்ள ஓர் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். இரவு நேரமாகிவிட்டதால் இருள் சூழ்ந்து விட்டது. அப்போது, அவர் தன்னிடம் இருந்த பழைய ஹரிக்கேன் விளக்கில் தீபமேற்றி, விளக்கை துாக்கி பிடித்து பார்த்துள்ளார். விளக்கின் வெளிச்சமானது அவர் நின்ற இடத்திலிருந்து வெறும் ஆறடி துாரத்திற்கு மட்டுமே தெரிந்ததால், அவர் கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டாராம். 'வெறும், 6 அடி துாரம் மட்டும்தான் இந்த விளக்கின் வெளிச்சம் தெரிகிறது. நான் செல்ல வேண்டிய துாரம் அதிகமாக இருக்கிறதே...' என்று புலம்பினாராம். விளக்கை கையோடு எடுத்து செல்லும்போது, இருள் தன்னால் அகன்றுவிடும் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாத அந்த வழிப்போக்கரைப் போலத்தான், தமிழக அரசு, ஊர் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயரை மாற்ற உத்தரவிட்டுள்ளது. சாதாரண உள்ளாட்சி தேர்தலில், கவுன்சிலர் வேட்பாளரை நியமிப்பது என்றால் கூட, ஜாதியை சீர்துக்கி பார்த்து நியமிக்கும் நிலையில், ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்? சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால், திருமணத்தை நிறுத்திவிட முடியுமா? தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதால், ஜாதியை ஒழித்து விட முடியுமா? சட்டமும், ஜாதி ஒழிப்பும் அடுத்தவர்களுக்கு மட்டும்தான் என்ற மறைமுக விதியை, தி.மு.க., காலங்காலமாக பல இடங்களில் அரங்கேற்றி வருவதை மக்கள் நன்கறிவர். அதனால், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இதுபோன்ற கம்பு சுத்தும் தந்திரத்தை தி.மு.க., நிறுத்தி, ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்!

விரோத போக்கால் சாதித்தது என்ன?

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், 'அரசின் கடன் அதிகரிப்புக்கு எவர் காரணம்?' என்று தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் முட்டிக் கொண்டன. அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அ.தி.மு.க., ஆட்சியில் கடன் விகிதம், 128 சதவீதம்; ஆனால், தி.மு.க., ஆட்சியில் வெறும், 93 சதவீதம் தான்...' என்றார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணியோ, 'கடந்த 75 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடன், 4 லட்சம் கோடி ரூபாய் தான்; ஆனால், நடப்பு தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடனோ, நான்கு ஆண்டுகளில் மட்டுமே, 4 லட்சம் கோடி ரூபாய்...' என்கிறார். இப்படி இரு கழகங்களும் சதவீதம், கோடி என்று சொல்லி சமாளித்தாலும், அந்த சுமை மக்களின் தலையில் தானே விழுந்துள்ளது. இரு கட்சிகளும் தாங்களே ஆட்சியில் அமர்ந்து கோலோச்ச வேண்டும் என்பதற்காக, போட்டி போட்டுக் கொண்டு இலவச திட்டங்களை அள்ளி வீசி, தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி வைத்துள்ளன. இதில், 'கடன் அதிகரிப்புக்கு நிதி நிர்வாகம் காரணம் அல்ல; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையே காரணம்...' என்று வழக்கம்போல் பழியை துாக்கி மத்திய அரசு மீது போடுகிறார், தங்கம் தென்னரசு. இதற்கு சரியான பதிலடியாக, 'கொள்கையை அரசியலோடு வைத்துக் கொள்ள வேண்டும்; ஆட்சியில் கலக்கக்கூடாது. மாநில நலனுக்காக மத்திய அரசுடன் நல்ல அணுகுமுறையோடு செயல்பட வேண் டும்...' என்று அறிவுறுத்தி உள்ளார், தங்கமணி. இதைத்தான் கேரளாவில் ஆளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு செய்கிறது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், நிதி தேவைக்காக கவர்னருடன் சென்று, மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார். சமீபத்தில் கூட, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஆனால், தி.மு.க., அரசு எப்போதும் மத்திய அரசுடன் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது. இதனால், என்ன சாதித்து விட்டது? தமிழகத்திற்கான கடன் அதிகரித்துள்ளதுடன், மூலதன செலவுகள் குறைந்து, வருவாய் பற்றாக்குறையும், விலைவாசியும் அதிகரித்தது தான் மிச்சம். வரும், 2026ல் பொறுப்பேற்க போகும் புதிய அரசு, மத்திய அரசுடன் சுமூக உறவை கையாள வேண்டும். அப்போது தான், தமிழகம் இத்தகைய இடர்பாடு களிலிருந்து தப்பிக்கும்!

மூன்று லட்சம் கோடி எங்கே போனது?

ஆர்.கண்ணாயிரம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பொய் சொல்வதில் பிஎச்டி., பட்டம் பெற்றவர்கள் என்பது தமிழகம் அறிந்த விஷயம் தான். அதேநேரம், அப்பொய்யை பொருத்தமாக சொல்ல வேண்டும் என்பதை பல நேரங்களில் மறந்து விடுகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு, 3 லட்சம் கோடி ரூபாயை அளித்துள்ளது, மத்திய அரசு. இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும் போது, மூன்று மடங்கு அதிகம்! ஆனாலும், அவ்வளவு தொகையையும் வாங்கிக் கொண்டு, முதல்வரும், அவரது அமைச்சர் களும், 'மத்திய அரசு தமிழகத்துக்கு நிதியுதவி செய்யாமல் வஞ்சிக்கிறது; மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது...' என்று ஒப்பாரி வைக்கின்றனர். வளர்ந்த மாநிலம் என்பதால், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும், உ.பி.,க்கு மூன்று மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் குற்றஞ் சாட்டுகின்றனர். நோயாளிக்குத் தான் மருந்தும், மாத்திரையும் தேவை; திடகாத்திரமாக இருக்கும் ஒருவருக்கு எதற்கு மருந்து? தமிழகம் வளர்ந்த மாநிலம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். அப்ப, வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு தானே அதிக நிதி உதவி செய்வர்! ஒரு பாத்திரத்தின் விளிம்பு வரை தான் எதையும் நிரப்ப முடியும். அதற்கு மேல் ஊற்றினால், அது வழிந்து கீழே தான் போகும். இந்த தியரி கூட தெரியாமல், 3 லட்சம் கோடி ரூபாயையும் வாங்கிக் கொண்டு, மத்திய அரசு நிதி தரவில்லை என்று புலம்புவதில் என்ன நியாயம் உள்ளது? அப்ப, மத்திய அரசு கொடுத்த 3 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது? திராவிட மாடல் முதல்வர் அதற்கு விளக்கம் கொடுப்பாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
அக் 27, 2025 19:05

தங்களுக்கான நிதியின் உண்மை செலவினங்கள் என விவரம் கேட்டால், அங்கிருந்து வந்ததை மறைத்து, மக்கள் மனத்தில் தங்கள் மாநிலத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று ஒப்பாரி வைத்து திசை திரும்புவதில் திராவிட மாடலுக்கு நிகரே சொல்ல முடியாது