உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாமே!

நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாமே!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க.,வில், 53 ஆண்டுகளாக இருப்பவன் நான்; என்னை எப்படி விளக்கம் கேட்காமல் நீக்க முடியும்? கட்சிக்கு துரோகம் செய்கிறார் பழனிசாமி. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர போகிறேன்' என்கிறார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். பதிலுக்கு செங்கோட்டையனை, 'துரோகி' என்கிறார், பழனிசாமி. அ.தி.மு.க.,வின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், 90 சதவீதம் துரோகிகள்தான் அக்கட்சியில் கோலோச்சி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், மீதியிருந்த அ.தி.மு.க.,வின் இரண்டு ஆண்டுகால ஆட்சி கலைய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. கட்சி இரண்டாக பிளவுபடவும் அவரே காரணம். ஆக, 90 சதவீதம் துரோகிகளில் ஜெயலலிதாவும் அடக்கம். எனவே, அ.தி.மு.க.,வில் துரோகி யார், விசுவாசி யார், தியாகி யார் என்ற விவாதமே தேவையற்றது. அதேநேரம், 'முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பன்னீர்செல்வம், தினகரனுடன் பேசியது உண்மைதான். அதற்காக பழனிசாமி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சியை விட்டு நீக்குவதா?' என்று கேட்கிறார், செங்கோட்டையன். சீனியரான அவர் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்... சென்னையில், முதன்முதலாக ஜெயலலிதாவிற்கு பேரவை மன்றம் திறந்தவர் அ.தி.மு.க., தொண்டர் சைதை முத்து. இவ்விஷயம் எம்.ஜி.ஆர்., கவனத்திற்கு சென்றது. உடனே, அவர் முத்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. முத்துவை கட்சியை விட்டு நீக்க உத்தரவிட்டார். அதன்படி, கட்சி நாளிதழில், 'கட்சிக்கு அவப்பெயரும், களங்கமும் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் முத்து நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்ற அறிவிப்பை வெளியிட்டார், பொதுச்செயலர் ராகவானந்தம். உடனே, ராகவானந்தத்தை சந்தித்து, 'என்னுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என சொல்லி விட்டீர்கள். என் மனைவி அ.தி.மு.க.,வின் உறுப்பினராக இருப்பதால் அவர், என்னிடம் தொடர்பு கொள்ளக் கூடாதா?' என கேள்வி எழுப்பினார், முத்து. இது எம்.ஜி.ஆர்., கவனத்திற்கு சென்றது. குடும்பநலன் கருதி முத்துவின் மனைவியையும் கட்சியில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டார், எம்.ஜி.ஆர்., அதேபோன்று, ஜெயலலிதா பொதுச்செயலராக இருந்தபோது, நால்வர் அணி அமைத்த நெடுஞ்செழியனை நீக்கி இருக்கிறார். பாட்ஷா படவிழாவில் ஆட்சியை குறைகூறிய நடிகர் ரஜினிக்கு, சரியான பதிலடி தராமல் அமைதி காத்ததால், ஆர்.எம்.வீரப்பன் மீது நடவடிக்கை எடுத்தார், ஜெயலலிதா. இவர்களுக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்ன? ஆக, விளக்கம் கேட்பது, நோட்டீஸ் அனுப்புவது, தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் என்பதெல்லாம், அ.தி.மு.க.,வுக்கு பொருந்தாத விஷயம். இதில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப் போவதாக கூறுகிறார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர்., விதித்த அ.தி.மு.க.,விற்கான சட்ட விதிகளில் முக்கியமானது, 'கட்சி விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்பவர், தன் உறுப்பினர் பதவியை இழப்பார்' என்பதுதான்! ஏற்கனவே, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கீழ் கோர்ட்டு முதல், சுப்ரீம் கோர்ட் வரை அ.தி.மு.க., மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இதில் எந்த வழக்கு எந்த கோர்ட்டில் உள்ளது என்பது அவருக்கே புரியாத விஷயம். எனவே, இடியாப்ப சிக்கலில் வழக்குகள் உள்ள நிலையில், செங்கோட்டையன் இன்னொரு புதிய வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

தமிழகம் போராடத்தான் வேண்டும்!

எஸ்.ஆர்.ரத்தினம், செங்கல் பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத் தில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம், 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்; தமிழகத்தை தலை குனிய விட மாட்டேன்!' என்பது போன்ற வசனங்கள் நிறைந்த போஸ்டர்களை சுவர்களில் ஒட்டியுள்ளனர், தி.மு.க.,வினர். இதுபோன்ற நாடகத்தனமான வசனங்களை தேர்தலுக்கான யுக்தியாக கருதி, அவற்றை மக்கள் மனங்களில் திணிக்க நினைக்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், பிக்பாக்கெட் திருடன் ஒருவன் பணத்தை திருடி விட்டு, அதை பறிகொடுத்தவரோடு சேர்ந்து, 'ஐயோ... திருடன்... திருடன்' என்று கத்துவதைப் போல் உள்ளது. தமிழகத்தின் அத்தனை சீர்கேட்டிற்கும், முறைகேடுகளுக்கும், தலைகுனிவுகளுக்கும் காரணமான தி.மு.க., இத்தகைய பிரசார வசனங்களை பயன்படுத்துவது, மக்களை ஏமாற்றப் போடும் தந்திரம்! தமிழகம் இன்று இந்தியாவின், 'நம்பர் ஒன்' கடன்கார மாநிலமாக மாறியுள்ளதற்கும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, அபரிமிதமான மது விற் பனை, போதைப்பொருள் கலாசாரம், ஊழல், மணல், கனிம வளக் கொள்ளை, காவல் நிலைய மரணங்கள், அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் அவலநிலை போன்ற அனைத்திற்கும் காரணம், தி.மு.க., அரசின் நிர்வாக திறன் இன்மையும், ஊழலை மட்டுமே தாரக மந்திரமாக கொண்ட கொள்கைகளும் தான்! தி.மு.க., ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் சுடபட்டபோதும், 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, இன்று கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தும் கயமையை என்னவென்று சொல்வது? அதேபோன்று, காவிரி ஒப்பந்தம் காலாவதியான போதும், ஜல்லிக்கட்டை தடைசெய்த போதும், மாநிலக்கல்வி மத்திய பட்டியலுக்கு போனபோதும் கண்டுகொள்ளாமல், அதிகாரத்தை எப்படி தக்க வைப்பது, எந்த வழிகளில் எல்லாம் ஊழல் செய்து, சொத்து குவிப்பது என்பதில் கவனமாக இருந்து விட்டு, இப்போது, தமிழகத்தை ஸ்டாலின் தலைகுனிய விடமாட்டாராம்! ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, தமிழகத்தைப் பார்த்து இந்தியாவின் ஒட்டு மொத்த மாநிலங்களும் கேலியாக, ஏளனமாக சிரித்தபோது, அன்று துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், தமிழகத்தின் மானத்தைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்தார்? தமிழகத்தின் இன்றைய அனைத்து விதமான தவறுகளுக்கும் பிறப்பிடமான தி.மு.க., தவறுகளுக்கெல்லாம் வேறு எவரோ காரணம் என்பது போல், 'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' என்று கூறுவது என்ன வகை பித்தலாட்டம்? தமிழகம் போராடத்தான் வேண்டும்... தி.மு.க.,வின் குடும்ப ஆட்சிக்கும், ஊழல் களுக்கும் எதிராக!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை