முதல்வர் மறந்து போனாரா?
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் வெற்றி - தோல்வி என்பது எந்தக் கட்சிக்கும் நிரந்தரமானது அல்ல; ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆவதும், எதிர்க்கட்சி ஆட்சியை பிடிப்பதும் சகஜம். அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளுக்கும் இந்த நியதி பொருந்தும். இதை உணராமல் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏதோ தி.மு.க., இதுவரை தோல்வியே அடைந்தது இல்லை என்பது போல், 'தி.மு.க.,வை எந்தக் காலத்திலும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது' என்று வாய் வீரம் காட்டியுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றையும், தமிழகத்தில் தி.மு.க.,வின் வரலாற்றையும் மறந்துவிட்டு பேசுகிறாரா அல்லது திருமங்கலம் பார்முலா கைவசம் இருப்பதால், 2026-ல் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற தைரியத்தில் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள், கருணாநிதிக்கே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர் என்பதும், 1977-ல் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர்., தான் இறக்கும்வரை கிட்டத்தட்ட, 12 ஆண்டுகள் தி.மு.க.,வை வனவாசம் அனுப்பி வைத்தார் என்பதும் ஸ்டாலினுக்கு மறந்து விட்டது போலும்! கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தி.மு.க.,வால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெறமுடியவில்லை. அதேநேரம், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார், மறைந்த தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்த். அதேபோன்று, 2014- பார்லிமென்ட் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று, 37 இடங்களில் அ.தி.மு.க.,வை வெற்றி பெறச்செய்தார் ஜெயலலிதா. தி.மு.க., ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல், 'வாஷ் அவுட்'ஆனது. இதையெல்லாம் மறந்து விட்டு, 'தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது' என்கிறார், ஸ்டாலின். ஒருகாலத்தில், இந்தியாவில் உள்ள ஒருசில மாநிலங்களைத் தவிர, அனைத்திலும் கோலோச்சிய காங்கிரசின் சுவடு, இன்று மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சி என்ற நிலையில் சுருங்கி விட்டது. மே.வங்கத்தில் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியிலிருந்த காங்., கட்சியும், 23 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிஸ்டும், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வின் வரவால் இன்று அடையாளமே இல்லாமல் தொலைந்து விட்டன. தமிழக மக்களும் மே.வங்கம், குஜராத் மாநிலத்தைப் போல் ஒற்றை தலைமையின் கீழ் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாற்றம் ஒன்றே மாறாதது! எனவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'தி.மு.க., வை எவரும் தொடக்கூட முடியாது' என்று சவால் விடுவதை விடுத்து, எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்டு தனித்து நின்று தேர்தலை சந்தித்தால், அவரது தைரியத்தையும், நம்பிக்கையையும் பாராட்டலாம். அதைவிடுத்து, கூட்டணி கட்சிகளின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு, வெற்று சவால் விடக்கூடாது! ஓட்டுபோட உடம்பை தேற்று! ஆர்.எஸ்.வையாபுரி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, முதல்வருக்கு தமிழக மக்கள் மீது பாசம் பீறிட்டு எழுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக கும்பகர்ணன் போன்று நீண்ட துாக்கத்தில் இருந்த தமிழக முதல்வர், கடந்த சில மாதங்களாகவே படு சுறுசுறுப்பாக இயங்குவதுடன், திடீர் திடீரென நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'ஸ்டாலின் தான் வர்றாரு; விடியல் தரப் போறாரு' என்று பாட்டுப்பாடி ஊர் ஊராகப் போய் மனுக்களை வாங்கி, பெட்டியில் பூட்டிக் கொண்டு போனார். 'அடேங்கப்பா... தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையிலேயே மனுவை கொடுத்து விட் டோம். கண்டிப்பாக நமக்கு தீர்வு கிடைத்து விடும்' என்று நம்பி, ஓட்டு போட்டனர் மக்கள். ஆட்சியை பிடித்து, அதிகாரத்திற்கு வந்ததும், மனுவாவது மண்ணாங்கட்டியாவது என்று துாக்கி கடாசி விட்டார், ஸ்டாலின். இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது... இப்போது, விடியல் தரப் போறாரு என்று பாடினால், மக்கள் முறத்தை துாக்கிக் கொண்டு அடிக்க வந்துவிடுவர் என்பது முதல்வருக்கு தெரிந்து போயிற்று! உடனே, 'உங்களுடன் ஸ்டாலின்' என்று ஒரு திட்டத்தை அறிவித்து, ஊர் ஊராக தான் சென்று வாங்கிய மனுக்களை, அதிகாரிகளை வைத்து வாங்க வைத்தார். அதிகாரிகளோ மக்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை ஆற்றில் கப்பல் விட்டு மகிழ, நொந்து போனார் முதல்வர். கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க., அரசின் செயல்பாடுகளால் வெறுப்படைந்த மக்களை சந்தோஷப்படுத்த இதுபோன்று ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்கள் என்ற ஒவ்வொரு அம்பும்,இலக்கை எட்டாமல்ஒடிந்து போகவே, இப்போது புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்து உள்ளார். அது தான், 'அன்புச்சோலை' திட்டம்! இந்த அன்புச்சோலைக்குள் நுழையும் முதியோருக்கு, ஓட்டு போடும் அளவுக்கு கை கால்கள் நன்றாக இயங்க பிசியோதெரபி அளித்து, பொழுதுபோக்கு, திறன் மேம்பாட்டு நிகழ்வுகள் வாயிலாக, 2026 சட்டசபை தேர்தலின்போது உதயசூரியன் சின்னத்தில் முத்திரை குத்தும் அளவுக்கு, அவர்கள் மனதையும், உடலையும் தேற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கம். ஆதரவற்றோர், பிள்ளைகளால் கைவிடப்பட்டோர் மட்டுமல்ல... பணிக்கு செல்வோரும் தங்கள் வீட்டில் உள்ள முதியோரை அன்புச்சோலைக்குள் விட்டுச் செல்லலாம். அவர்களும் சட்டசபை தேர்தல் வரை, தங்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்கலாம். தேர்தல் முடிவுகள் வரும் வரை, உடன் பிறப்புகள் எவரும் இவர்களை நிச்சயம் வெளியேற்ற மாட்டார்கள். இந்த சிறப்பு சலுகை கூட, தமிழகத்தின், 25 மாவட்டங்களுக்கு மட்டும்தான். மீதியுள்ள, 13 மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள், தேக ஆரோக்கியத்துடன், பிள்ளைகளின் பராமரிப்பில் வசதியாக வாழ்கின்றனராம். அதனால், அம்மாவட்டங்களை திராவிடமாடல் அரசு கணக்கில் கொள்ளவில்லை போலும்! அறுவடை காலத்தில் எலிக்கு எண்பத்தெட்டு பெண்டாட்டிகளாம்... அதுபோன்று தான், தேர்தல் காலத்தில் திராவிட கட்சிகளின் வாக்குறுதிகளும், திட்டங்களும் தாராளமாகவே உள்ளன!