ஆதாரங்கள் மறைந்தது எப்படி?
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டம் - ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்; தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும்' என்று, முந்தைய தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த பேச்சை உண்மை என நம்பிய சமூக ஆர்வலர் ஒருவர், 2025, அக்., மாதம் 'ஜெம் கிரானைட்' அதிபர் வீரமணியின் லீலைகள் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர் பணபலம் மிக்கவர் என்பதாலோ என்னவோ, 'பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை; குற்றம் நடந்ததாக கூறப்படும் இடத்தில், 'சி.சி.டி.வி' கேமரா இல்லை; குற்றத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண முடியவில்லை' என்று பல்வேறு காரணங்களை கூறி, வழக்கு விசாரணையை கமுக்கமாக மூடி மறைத்தனர்.ஆனால், ஆட்சி மாறியதும் காட்சியும் மாறத் துவங்கியுள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியால் முடக்கி வைக்கப்பட்ட அதே வழக்கை, மறுவிசாரணை செய்து, இப்போது வீரமணி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும், முந்தைய ஆட்சியாளர்களைப் போல குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படாமல், வீரமணியுடன் சேர்த்து, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள், குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்தவர்கள் என எவரையும் தப்பிக்க விட்டுவிடக் கூடாது என்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முதல்வர் உத்தரவிட்டுள்ளது, மனதிற்கு ஆறுதலாக உள்ளது.தி.மு.க., ஆட்சியின் போது, பணியில் இருந்த அதே போலீசார் தான், த.வெ.க., ஆட்சியிலும் இருக்கின்றனர். ஆனால், அன்று கிடைக்காத ஆதாரங்கள், இப்போது மட்டும் எப்படி கிடைத்தன? குற்றவாளி பெரும் பண முதலை என்பதால், ஆட்சியாளர்களின் கண்களிலிருந்து ஆதாரங்கள் மறைந்து விட்டனவோ!நாடகத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்!
கு.காந்திராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாதத்திற்குள், மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளுக்கு தேவையான நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, பள்ளிகள் துவக்க இடம் வழங்கப்பட வேண்டும்' என்று, உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நவோதயா பள்ளிகள் என்பது, கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மத்திய அரசால் நடத்தப்படும் நவீன வசதிகள் கொண்ட இலவச உறைவிட பள்ளிகள்! இப்பள்ளிகளில் ஹிந்தி ஒரு பாடமாக கற்றுத் தரப்படுகிறது என்பதற்காக, தமிழகத்தில் இப்பள்ளிகள் செயல்பட, திராவிட கட்சிகள் அனுமதிக்க மறுத்து வந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் 'நவோதயா' பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. உடனே, நவோதயா பள்ளிகளுக்கு 'தமிழகத்தில் இடமளிக்கக் கூடாது' என்று முழக்கமிட்டுள்ளார், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி! நவோதயா, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தி.மு.க., எதிர்ப்பதற்கு காரணம், தமிழகத்தில் எவரும் ஹிந்தி படிக்கக் கூடாது என்பதற்காக இல்லை; தி.மு.க., தலைமையின் குடும்பம் மற்றும் அக்கட்சியினர் மாவட்டந்தோறும் பல சி.பி.எஸ்.இ., பள்ளிகளை திறந்து கல்லா கட்டுகின்றனரே... அதன் வசூல் தடைப்பட்டு விடும் என்பதற்காக! அதனால் தான், நவோதயா பள்ளிகளை அனுமதித்தால், தமிழகத்திற்குள் ஹிந்தி நுழைந்து, தமிழ் அழிந்து விடும் என்று கம்பி கட்டும் கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். ஹிந்தி படித்தால், தமிழ் அழிந்து விடும் என்பது உண்மையானால், இவர்கள் ஏன் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்த வேண்டும்... அவற்றை எல்லாம் இழுத்து மூட வேண்டியது தானே? இவர்கள் நடத்தும் பள்ளிகளிலும், தமிழகம் முழுதும் உள்ள ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளிலும், ஆண்டுதோறும் பல ஆயிரம் மாணவ - மாணவியர் ஹிந்தி படித்து வெளி வருகின்றனர். அவர்களால் பரவாத ஹிந்தி, மாவட்டத்திற்கு ஒன்று என கொண்டு வரப்படும் நவோதயா, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளால் பரவி விடுமா? தி.மு.க.,வின் இந்த குள்ளநரித்தனமான நாடகத்திற்கு புதிய அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும்! நம்பிக்கையை இழப்பது நிச்சயம்!
எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓர் அரசியல் கட்சி, ஓர் அரசுக்கு ஆதரவு தருகிறது என்றால், அந்த நிலைப்பாடு தெளிவானதாக இருக்க வேண்டும். ஒருபுறம் ஆதரவு கொடுத்துக்கொண்டே, இன்னொருபுறம் தேர்தலில் அவர்களை எதிர்த்து நிற்பது என்ன வகையான அரசியல்? ஆரம்பத்தில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தந்தபோது, 'நாங்கள் தான் கம்யூ., கட்சியை அனுப்பி வைத்தோம்' என்றது, தி.மு.க., உடனே, இந்திய கம்யூ., கட்சி தமிழக செயலர் வீரபாண்டியன், 'எங்களுக்குச் சிந்திக்கும் திறன் உள்ளது' என்று கோபமாக பதிலடி கொடுத்தார். அந்த, 'சிந்திக்கும் திறன்' இப்போது எங்கே போனது? 'த.வெ.க.,விற்கு அளிக்கும் ஆதரவை நாங்கள், வாபஸ் பெற்றால், கவர்னர் அரசை கலைத்துவிடுவார்; பா.ஜ., உள்ளே வந்துவிடும்' என்று, பா.ஜ.,வை காரணம் காட்டியவர்கள், இப்போது அதே, த.வெ.க., அரசுக்கு எதிராகத் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது ஏன்? கம்யூ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், த.வெ.க.,வின் பலம் குறைந்து, அவர்களின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாதா? தாங்கள் அதரவு அளிக்கும் அரசு சரியில்லை என்றால், தைரியமாக ஆதரவை வாபஸ் பெற்று, தேர்தலில் எதிர்க்க வேண்டும் அல்லது அரசு சரியாகச் செயல்படுகிறது என்றால், அவர்களோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதை விடுத்து, வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்று கூறி, அதே அரசை வீழ்த்த தேர்தல் வியூகம் வகிப்பது, மக்களிடையே நம்பிக்கையின்மையை தான் ஏற்படுத்தும்! ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்யும்போது, அதை சுட்டிக்காட்டுவதும், எதிர்ப்பதும் தவறில்லை. ஆனால், ஆதரவையும் கொடுத்து, தேர்தலிலும் எதிர்ப்பதையும் பார்க்கும் போது, தி.மு.க.,விற்காக உள்ளடி வேலையில் கம்யூ., கட்சி ஈடுபடுகிறதோ என் ற சந்தேகமே ஏற்படுகிறது. இத்தகைய முரண்பாடான அரசியலைத் தொடர்ந்தால், கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களிடம் எஞ்சியிருக்கும் கு றைந்தபட்ச நம்பிக்கையையும் முழுமையாக இழந்து விடுவர்!