எஸ்.மாரியப்பன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 2021 சட் ட சபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த, 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன...' என்று கூறியுள்ளார், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில், 'தி.மு.க., அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. 364 வாக்கு றுதிகளை நிறைவேற்றி இருந்தால், வரிசை எண் வாரியாக, எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன, அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர் என்ற விபரங்களை வெளியிடுமா?' என்று கேட்டு உள்ளார், பா.ம.க., தலைவர் அன்புமணி. இரண்டு அரசியல்வாதிகளுக்கு இடையே நடக்கும் குஸ்தி இது என்று கடந்து விட்டாலும், ஒரு சாமானியனாக, அந்த, 505 வாக்குறுதிகளில் பிரதானமாக, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு முறை அமலுக்கு வரும்' என்ற வாக்குறுதியை நம்பி ஓட்டளித்து ஏமாந்த லட்சக்கணக்கான குடும்ப தலைவர்களுள் நானும் ஒருவன்! இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டுவதால், ஒவ்வொரு முறையும், 6,000 ரூபாய் வரை கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கின்றனர். அவ்வகையில் இதுவரை, 45,000 ரூபாய் கூடுதலாக கட்டியுள்ளேன். 'ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், 'மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு' என்ற ஒற்றை வாக்குறுதியையே கடந்த நாலரை ஆண்டுகளாக செயல்படுத் தாமல், டிமிக்கி கொடுத்து, ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும், பல ஆயிரம் ரூபாய்களை கூடுதலாக வசூலித்து கல்லா கட்டி வருகிறது, திராவிட மாடல் அரசு. இந்நிலையில், 'தி.மு.க., அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது' என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி சொல்வதை நம்பத் தானே வேண்டும்? அது மட்டுமல்ல... சில மாதங்களுக்கு முன், தி.மு.க., அமைச்சர் ஒருவர், '2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளில் இரண்டே இரண்டு வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அதையும் தேர்தலுக்குள் நிறைவேற்றி விடுவோம்' என்று ஓர் உருட்டு உருட்டியிருந்தார். இப்போது, தங்கம் தென்னரசோ, 364 வாக்கு றுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். இன்னும், தேர்தல் நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, 'இரண்டே இரண்டு வாக்குறுதி களைத்தான் நிறைவேற்ற முடிந்தது; வாக்குறுதி களை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு, மத்திய அரசு நிதி அளிக்காததே காரணம். இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் அத்தனை வாக்குறுதி களையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றி விட்டே அடுத்த வேலையைப் பார்ப்போம்...' என்று மேடைதோறும் முழங்குவர். ஏன்... சத்தியம் கூட செய்வர்! வழக்கம் போல், அதையும் உண்மை என நம்பி, ஓட்டளித்து ஏமாந்து நிற்பர், தமிழக மக்கள்! ஏமாறுவோர் இருக்கும் வரை, ஏமாற்றுபவர் காட்டில் மழை தானே... தன் குறையை மறந்து போகலாமா? ஜெ.பொன்மணி ஜெயராஜ், செங்கோட்டையிலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அண்ணாதுரை பெயரில் கட்சி வைத்துக் கொண்டு,
சுயலாபத்துக்காக அமித் ஷாவிடம் கட்சியை அடமானம் வைத்ததை கண்டு தமிழக
மக்கள் சிரிக்கின்றனர்...' என்கின்றனர், தி.மு.க.,வினர். ஈ.வெ.ரா., - அண்ணாதுரையிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும்,
ஈ.வெ.ரா., தன் துணைவியான மணியம்மையை வாரிசாக்கியதை எதிர்த்து தான்,
திராவிட கழகத்தில் இருந்து வெளியேறி, தி.மு.க.,வை ஆரம்பித்தார் அண்ணாதுரை. அதாவது, வாரிசு அரசியலுக்கு எதிராகத் தான் தி.மு.க., துவங்கப்பட்டது. ஆனால், அக்கட்சியின் இன்றைய நிலை என்ன? கட்சிக்காக உழைப்பவர்கள் இறுதி வரை உழைத்துக் கொண்டே இருக்க, வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் கிடைக்கின்றன. கட்சித் தலைவர், இளைஞரணி தலைவர், மாவட்ட செயலர்கள், முதல்வர், துணை
முதல்வர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் என, முக்கிய
பதவிகளில் பெரும்பாலும், தி.மு.க., தலைவர்களின் வாரிசுகள் தான் அமர்ந்து
உள்ளனர். அதேபோல், அண்ணாதுரை முதல்வராக இருந்த வரை, தமிழகத்தில்
மதுவிலக்கு அமலில் இருந்தது. மது விற்பனை வாயிலாக கிடைக்கும் வருமானத்தை,
அவர் அவமானமாக கருதினார். ஆனால், அவருக்கு பின் முதல்வரான கருணாநிதி,
மதுவிலக்கை ரத்து செய்து தமிழனை குடிக்க வைத்தார். இப்போது மது
விற்பனையின் வாயிலாக அரசுக்கு ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய் வருவாய்
கிடைக்கும் அளவிற்கு, தமிழனிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து விட்டது.
'இது அண்ணாதுரையின் மண்... நாங்கள் அவரிடம் பாடம் பயின்றவர்கள்'
என்று கூறிக்கொண்டே, மதுவிற்பனை மற்றும் வாரிசு அரசியல் தொடர்பான
அண்ணாதுரையின் கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு ஆட்சி நடத்தும் தி.மு.க.,
பிற கட்சிகளின் குறைகளை ஆராய்ச்சி செய்யலாமா? அதற்கு, தி.மு.க.,விற்கு தகுதி உள்ளதா? தேசத்துக்கு உதவியாக இருங்கள்! எம்.சந்திரசேகரன் மஹாலிங்கம், கடலுாரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவிலிருந்து இறக்குமதி
செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார், அமெரிக்க அதிபர்
டிரம்ப். இதனால், அமெரிக்காவில் இந்திய பொருட்களின் விலை உயர்ந்து,
விற்பனை பெரும் சரிவைச் சந்திக்கும்! இதுகுறித்து, இறால்
ஏற்றுமதியாளர் ஒருவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறும்போது, 'ஏற்றுமதி
அநேகமாக நின்று போய்விடும் என்பதால், உள்ளூர் சந்தையில் தான் விற்பனை செய்ய
வேண்டும். 'லோக்கல் மார்க்கெட்டில், கிலோ 250 ரூபாய் என
விற்கப்பட்ட இறால், தற்போது, 190 ரூபாயாக குறைந்துவிட்டது. இந்த இழப்பை
ஈடுசெய்ய, மின்கட்டணத்தில் அரசு சலுகை தர வேண்டும்' என்கிறார். அதாவது,
இவர்களுக்கு கிடைத்த லாபம் குறைந்துவிட்ட படியால், அதை அரசு ஈடுசெய்ய
வேண்டும் என்கிறார்! என்ன நியாயம் இது? ஏற்றுமதி நின்றால் என்ன? உள்ளூர் சந்தை விற்பனையை அதிகப்படுத்த வேண்டியது தானே? குறிப்பாக, தமிழகத்தில் அசைவம் சாப்பிடுவோர், 98 சதவீதத்திற்கு மேல் இருக்கின்றனர் என்கின்றன புள்ளி விபரங்கள். விலையை குறைத்து, விற்பனையை அதிகப்படுத்தினால் லாபம் பெறலாமே! நியாயமான விலையில் விற்றால், விற்பனையும் பெருகும்; நுகர்வோரும் பயன் பெறுவர். நம் நாட்டு சந்தை மிகப்பெரியது. இதை பயன்படுத்திக் கொள்வது ஏற்றுமதியாளர்கள் கையில் உள்ளது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைக்
சீர்குலைக்க நினைப்பதை தடுக்க, தொழில் நிறுவனங்கள் தேசத்துக்கு உதவியாக
இருப்பது, அவர்களது தார்மீக கடமையும் கூட!