உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இனி லட்டை பார்த்தாலே...

இனி லட்டை பார்த்தாலே...

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: பழனி என்றால் சுவையான பஞ்சாமிர்தம் தான் நம் நினைவுக்கு வரும்; திருப்பதி என்றால் பூந்தியால் செய்யப்பட்ட அந்த லட்டு மட்டுமே நம் நினைவுக்கு வரும்.பக்தர்களால் உயர்வாக போற்றப்பட்ட புனிதமான திருப்பதி லட்டில், நெய் என்ற பெயரில் மாட்டுக் கொழுப்பையும், பன்றிக் கொழுப்பையும் கலந்து தெய்வப் பிரசாதமாக வழங்கி வந்த படுபாதகச் செயல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துஉள்ளது.இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.இதற்கு முன் ஆந்திராவில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி காலத்தில் தான் திருப்பதி லட்டில் பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு போன்ற அருவருக்கத்தக்க பொருட்கள் எல்லாம் இருந்தது, இப்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.'மக்களின் கவனத்தை திருப்பவே சந்திரபாபு நாயுடு இப்படி எல்லாம் அபாண்டமாக பொய் சொல்கிறார்' என்று, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.'கண்ணப்ப நாயனார், சிவபெருமானுக்கு பன்றிக்கறியைப் பிரசாதமாக படைக்கவில்லையா?' என்று சிலர் விதண்டாவாதம் செய்யலாம்; கண்ணப்ப நாயனார் இதைப் பாவம் என்று தெரிந்தே செய்யவில்லையே? பகவானுக்கு படைக்கப்படும் பிரசாதத்தில் கூட இப்படி அருவருக்கத்தக்க அயிட்டங்களைக் கலக்க, மோசடி பேர்வழிகளுக்கு எப்படித் தான் மனம் சம்மதிக்கிறதோ தெரியவில்லை. இனிமேல் திருப்பதி லட்டைப் பார்த்தாலே, பன்றிக் கொழுப்பும், மாட்டுக் கொழுப்பும் தானே நம் நினைவுக்கு வந்து தொலையும்?

இப்போது தான் திருமாவுக்கு ஞானமோ?

மணியட்டி மூர்த்தி, தேரம்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்த அ.தி.மு.க., கொரோனா காலங்களிலும் மதுக்கடைகளை திறந்து வைத்து லாபம் சம்பாதித்து விட்டு, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடப்பதாகவும், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய மரணத்தை ஊதி பெரிதாக்கி அரசியல் செய்து வருகிறது. ஆனால், இப்போதைய தி.மு.க., அரசு எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த நிலைக்கு காய் நகர்த்தி வருகிறது.தமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை. இதைத்தான் பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அக்., 2 காந்தி பிறந்த நாளன்று உளுந்துார்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என தி.மு.க., கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்து உள்ளார்.இதில் வேடிக்கை என்னவெனில், அ.தி.மு.க.,வை மாநாட்டுக்கு அழைத்துள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க., தொடர்ந்து ஆட்சி செய்த போது அரசின் மது கொள்கைக்கு எதிராக போராடாமல் திருமாவளவன் எங்கு போனார், பாவம் இப்போது தான் திருமாவளவனுக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது போலும். அடுத்து தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மதுவை ஒழிக்க சாத்தியமே இல்லை என்பதை அறிந்தும் கூட்டணி தர்மத்திற்கு எதிராக எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கும் திருமாவின் முடிவு, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக உள்ளது.

ஜீவானந்தம்போல் வருமா!

ந.உறந்தை மைந்தன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: ஏறக்குறைய, 40 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமை தலைவர் தான், 'தோழர்' என பாசத்துடன் அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம், ஏறத் தாழ 10 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.மிகச்சிறந்த தேச பக்தர்; அற்புதமான தமிழ் இலக்கியவாதியும் கூட. இந்தியா விடுதலை அடைந்த பின்னும், தன் பணி நிறைவடைந்ததாக, அவர் நினைக்கவில்லை. பொதுவுடமை இயக் கத்தின் சார்பில் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று, பலமுறை சிறை சென்றிருக்கிறார். தன் இறுதிக்காலம் வரை மக்களிடையே வாழ்ந்த ஜீவாவின் வாழ்க்கை வறுமையில் தான் கழிந்தது. ஒரு சமயம், சிறையில் இருந்து விடுதலையான அவர், தன் வீட்டுக்கு செல்லாமல், நேரே கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டார். அங்கு, அவர் வருகையை எதிர்ப்பார்த்து பெருங் கூட்டம் காத்திருந்தது. அனைவரிடமும் அவர் பேசி முடித்த போது இரவு, 9:00 மணி ஆகி விட்டது. கடைசியாக இரு பெண்கள் மட்டும், பெஞ்சில் அமர்ந்திருந்ததைப் பார்த்தார். 'நீங்கள் யாரம்மா? உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காக இவ்வளவு நேரம் இங்கு காத்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டார். 'உங்களுக்காக தான் காத்திருக்கிறோம். வாருங்கள் வீட்டுக்கு போகலாம்' என்றாள் ஒரு பெண். 'வீட்டுக்கா? நீங்கள் யார்?' என்று மீண்டும் கேட்டார் ஜீவா. 'அப்பா... எங்களை தெரியவில்லையா... நாங்கள் தான் உங்கள் மகள்கள். சிறைக்கு சென்று விட்டால், பெற்ற குழந்தைகளை கூடவா அடையாளம் தெரியாமல் போய்விடும்...' என்றாள் இன்னொரு பெண். திடுக்கிட்ட அவர், இரு மகள்களையும் பார்த்து கண் கலங்கினார். தன் வாழ்நாட்களை பெரும்பாலும் சிறை யிலேயே கழித்ததால், தன் வாரிசுகளையே அடையாளம் காண முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஜீவா. ஆனால் இப்போதைய அரசியல் தலைவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும் போதே, அதற்கு வாரிசு முத்திரை குத்தி விடுகின்றனர். அன்றைய அரசியல் தலைவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அற நெறியுடன் வாழ்ந்தனர்; இன்றைய அரசியல் தலைவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற வழியில் மக்களை ஏமாற்றி வாழ்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 23, 2024 19:22

Swiggi , zomoto மட்டும் பரிசுத்தமான பொருள்களை வைத்து சமைத்தா கொண்டு வருகிறார்கள் 'தெய்வமே கதி' என்று கிடைத்ததை வைத்துப் பொங்கித் தின்ன வேண்டுமென்பது நம் தலையெழுத்து என்று ஆகிவிட்டது


kantharvan
செப் 23, 2024 13:38

லட்டு வச்சு அரசியல் செய்றான் நாயுடு ...


Rajan
செப் 23, 2024 04:28

திருப்பதி லட்டுலயே கலப்படம் என்றால் நமது கடைகளில் விற்கப்படும் பொருட்கள்? சமையல் தெரியாது போடா என்று வீர முழக்கம் தான் ஸ்விக்கி, ஸோமாட்டோ போன்றவைகளின் மூலதனம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை