க.விக்னேஷ்
ராம்குமார், ராமேஸ்வரத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில்,
இன்றும் அவரின் நினைவிடத்தை பார்த்து செல்ல, ஆயிரக்கணக்கான பொது மக்கள்
வருவதை பார்க்கும்போது, மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு மிக்க தலைவராக
இருந்துள்ளார் என்பதை அறிந்து, வியப்பாக இருக்கிறது. அதேநேரம், அதை அடிப்படையாக வைத்து, அங்கு நடக்கும் சம்பவங்கள் மனதை நெருடுகிறது. பொதுவாக,
மறைந்தவர்களின் சமாதியை, நினைவிடம் அல்லது நினைவாலயம் என்று அழைப்பது தான்
வழக்கம். ஆனால், விஜயகாந்த் சமாதியில், 'கேப்டன் ஆலயம்' என்று பலகை
வைத்துள்ளனர். அது மட்டுமா... கோவில்களில் நடப்பதை போன்று தீபாராதனை,
விபூதி, குங்குமம் பிரசாதங்கள் வேறு!இதற்கெல்லாம் மேலாக, கடந்த
மாதம் அவரின் நினைவு நாளன்று, 'கேப்டன் குரு பூஜை' என்று அழைப்பிதழ்
அடித்து, அனைத்து கட்சியினருக்கும் வெற்றிலை - பாக்கு வைக்காத குறையாக
அழைப்பு விடுத்தனர். இதென்ன மகிழ்ச்சிகரமான நிகழ்வா... ஊரெல்லாம் அழைக்க!மக்கள்
போற்றும் தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி... அதற்கு கட்சி பேதமின்றி
அனைத்து தரப்பினரும் பங்கேற்பர்; இதற்கு எதற்கு அழைப்பு? அதுமட்டுமின்றி,
விஜயகாந்த் குரு பூஜை என்கின்றனர். குரு பூஜை என்பது பிறந்த நாளும்,
மறைந்த நாளும் ஒரே நாளாக அமையும்போது அனுசரிப்பது! விஜயகாந்த்க்கு அப்படி இல்லையே... நினைவு நாள் என்பதே சரி! அந்த
நல்ல மனிதனின் மீது உள்ள பற்றை, அவரைப் போன்றே நல்ல காரியங்கள் செய்து
வெளிக்காட்டுங்கள்; அதை விடுத்து, உங்களுக்கு நீங்களே புகழஞ்சலி செலுத்தி
கொள்ளாதீர்கள்; சகிக்கவில்லை! ஜனநாயக புல்லுருவிகளுக்கு முடிவு கட்டணும்!
வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி, 'அரசியல் பின்புலமில்லாத இளைஞர்கள், அரசியலுக்கு வர வேண்டும்; அதுவே, தேசத்தின் நலனிற்கும், வளர்ச்சிக்கும் உகந்தது' என்று அடிக்கடி கூறி வருகிறார். அதேபோன்று, பா.ஜ., கட்சியும் சாதாரண, எளிய பின்புலம் கொண்டவர்களை கட்சி உறுப்பினராக்கி, பொறுப்புகளை அளித்து வரும் நிலையில், மாநில கட்சிகள் பல, குடும்ப ஆட்சியின் வாயிலாக, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகின்றன. சமீபத்தில், ஆந்திர முதல்வரின் மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்று தெலுங்கு தேசம் கட்சியினர், முதல்வருக்கு அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வந்துள்ளன. தி.மு.க.,விலும் இதே போன்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறி, உதயநிதியை எம்.எல்.ஏ.,வாக களம் இறக்கி, தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சராக்கி, இப்போது துணை முதல்வராகவும் ஆக்கப்பட்டு விட்டார். அது என்னவோ, எல்லா மாநிலங்களிலும், முதல்வரின்வீட்டு வாரிசுகள் தான், துணை முதல்வராக வர வேண்டும் என்று கட்சியினர், முதல்வருக்கு அழுத்தம் கொடுப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. ஏன் இக்கட்சிகளில் எல்லாம், துணை முதல்வர் பதவி வகிக்க, மூத்த தலைவர்கள் இல்லையா அல்லது கட்சிக்காக உழைத்தவர்கள் தான் எவரும் இல்லையா? அரசியல் கட்சி என்பதை கார்ப்பரேட் கம்பெனி போல் நடத்தும் இவர்கள் தான், அம்பேத்கரின் அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வந்தவர்களா?தி.மு.க.,வில் உதயநிதிக்கு அடுத்து யார் அக்கட்சியின் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக, அவரது மகன் இன்பநிதி, பொதுவெளியில், கட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்து விட்டார். சமீபத்தில், மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில், இன்பநிதிக்கும், அவருடைய நண்பர்களுக்கும் இருக்கைகள் தரவேண்டி கலெக்டர், தான் அமர்ந்திருந்த இருக்கையை காலி செய்து கொடுத்தது, பலராலும் விமர்சிக்கப்பட்டது. மக்களாட்சி, மாநில சுயாட்சி, அரசியல் சாசனத்தைக் காப்போம் என்று அடிக்கடி கூறிவரும் இக்கட்சிகள் தான், வாரிசு அரசியல் மூலம், ஜனநாயகத்தை செல்லரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்க்கும் இவர்கள், வாரிசுகள் ஆட்சியை குறித்து மட்டும், வாய் திறப்பதில்லை. வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று விட்டோம்; இந்த ஜனநாயக புல்லுருவி ஆட்சியாளர்களுக்கு மக்கள் எப்போது முடிவு கட்டுவர்? அரசியல் அனாதையாகி விடுவீர்!
கே.சாதுமணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் கடவுள் முருகன்; அவனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையில், ராமநாதபுரம் எம்.பி.,நவாஷ்கனியின் ஆதரவாளர்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதுகுறித்து ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, 'நுாற்றாண்டுகள் பழமை மிக்க சிக்கந்தர் தர்காவில், ஆண்டாண்டு காலமாக ஆடு, கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது. தற்போது ஏதோ புதிதாக அசைவ உணவு கொண்டு சென்று உண்ணுவது போன்ற ஒரு தோற்றத்தை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஏற்படுத்துகின்றனர்' என்று திருவாய் மலர்ந்துள்ளார். தமிழகம் திணைவழி தெய்வ வழிபாடுகளை கொண்டிருந்த காலத்திலேயே, சைவ பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கியது திருப்பரங்குன்றம் மலை. இங்குள்ள முருகனின் குடைவரை கோவில், 2ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், ஸ்கந்த மலை என்று போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை, எப்போது இருந்து சிக்கந்தர் மலைஆனது நவாஷ் கனி?மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள, முருகன் கோவில் எப்போது கட்டப்பட்டது என்று தெரியுமா... 7ம் நுாற்றாண்டில்! மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. அப்படி இருக்கையில், எங்கிருந்து வந்தது இந்த சிக்கந்தர் மலை?யார் இந்த சிக்கந்தர்? நபிகள் நாயகம் போல், ஓர் இறை துாதரா? மாலிக்காபூர் போல், மதுரை கோவில்களை கொள்ளை அடிக்க வந்த கொள்ளையன் இந்த சிக்கந்தர் எனும் சுல்தான்!தன் படைத் தளபதிகளுடன், திருப்பரங்குன்றம் மலையில் பதுங்கியிருந்தபோது, விஜயநகர பேரரசால் கொல்லப்பட்டவன்!அவனுக்கு தான் புனிதமிக்க திருப்பரங்குன்றம் மலையில், 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது ஒரு கல்லறை!அதைத் தான், பல நுாற்றாண்டுகளாக இருக்கும் புனிதமிக்க வழிபாட்டு தலம் என்கிறார், நவாஸ் கனி! ஆனால், கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ் குடியின் வழிபாட்டுக் கடவுள் முருக பெருமான் வீற்றிருக்கும் மலையின் புனிதம்இவருக்கு ஒன்றுமே இல்லையாம்!இஸ்லாமிய ஓட்டுகளால் மட்டும் நவாஸ் கனி எம்.பி., ஆகிவிடவில்லை; துாங்கிக் கொண்டிருக்கும் ஹிந்துக்கள் எழுந்துகொள்ள ஆரம்பித்தால், உங்களைப் போன்ற பிரிவினை சக்திகள் கவுன்சிலராக கூட முடியாது. ஒற்றுமையாக இருக்கும் இரு சமூக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர் காய நினைத்தால், அதில் எரிந்து சாம்பலாவது, நவாஷ் கனி போன்றவர்களின் அரசியல் எதிர்காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!