உள்ளூர் செய்திகள்

விடிவே கிடையாதா?

கி.பாலசந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 5ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் ஒரு செய்தி... அதில், 2005 ஜனவரியில் பொதுப்பணித்துறை முன்னாள் அதிகாரி லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட வழக்கு, முதல் கோர்ட்டில் முடியவே, 20 ஆண்டுகள் ஆகியுள்ளதாக படித்தேன். ஒரே நாளில் முடித்திருக்க வேண்டிய வழக்கு-, கைப்புண்ணை பார்க்க கண்ணாடி பிடித்த நீதிக்கு, 20 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது!அவர், 'அப்பீல்' செய்கிறேன் என்று சொன்னால், ஜாமினும் தந்திருப்பர். இறுதி தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் இருந்து வரும் வரை, தண்டனையிலிருந்து மேலும், 20 ஆண்டுகள் அவர் தப்பிவிடலாம்!சாதாரண ஒரு அரசு அதிகாரிக்கே இப்படியெல்லாம் முடியுமென்றால், பண-பலம் உள்ளோரும், அரசியல்வாதிகளும் எப்படி சாதிப்பர் என்பதற்கு பீஹார் முன்னாள் முதல்வர் லாலு, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளே சாட்சி! 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது' என்ற சட்டக் கொள்கையால், குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், ஜாமினில் எந்த பயமும் இன்றி சுற்றித் திரிகின்றனர். அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் போல், இந்த ஜாமின் குற்றவாளிகள் மேலும் பல குற்றங்கள் செய்வர். சிவில் அல்லது கிரிமினல் வழக்கு, கீழ் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை நடந்து முடிவடையவே, 25 - -35 ஆண்டுகள் ஆகின்றன. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், முதல் ஜாமினை, உதாரணத்திற்கு தன், 45 வயதில் பெற்று விட்டால் போதும்... அனேகமாக அதன் கடைசி தீர்ப்பு வருவதற்குள், ஒன்று அவர் உயிருடன் இருக்க மாட்டார் அல்லது தன் வாழ்வின் எல்லையில் இருப்பார். இங்கு, குற்றவாளி எங்கே தண்டனை அனுபவிக்கிறார்? இதற்கு விடிவே கிடையாதா?

வெறும் உரலில் மாவு இடிச்சது போதும்!

எஸ்.மதுசூதனன், நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின், உணவு மற்றும் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால், தமிழகத்தில், வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. 'முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, உணவுத்துறையில் தன்னிறைவு அடைவதற்காக, புதிய திட்டங்களை தந்து, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, சாதனைகள் நிகழ்த்தி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளது. வறுமையை ஒழிக்க அப்படி என்ன திட்டம் கொண்டு வந்து முதல்வர் செயல்படுத்தி விட்டார்...நீர்நிலைகளை செப்பனிட்டு, புதிய நீர் தேக்கங் களை கட்டி, விவசாய புரட்சியை ஏற்படுத்தி விட்டாரா?ஏற்கனவே இருக்கும் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி விட்டதாலேயே தமிழக மக்களின் வறுமை ஒழிந்து விட்டதா?வீதிகளில் உணவுக்காக யாரும் கையேந்துவது இல்லையா? ரேஷனில் இலவச அரிசி வாங்க மக்கள் வருவதில்லையா? தமிழகத்தில் உணவு தன்னிறைவு அடைந்ததால் தான், வெறும், 200 ரூபாய் கூட மதிப்பு பெறாத பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்குகிறதா? எங்கும் வேலையில்லா திண்டாட்டம், மது, போதை மருந்து கலாசாரத்தால், தமிழகம் குற்றம்மிகு மாநிலமாக மாறி வருகிறது. கடன் சுமையில் மூச்சு முட்டிக் கிடக்கிறது. மாநிலத்தின் பொருளாதார ஆதாரத்திற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் அரசு எடுப்பதாக தெரியவில்லை.ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்த, 44 மாதங்களில், தினமும் எதையாவது சொல்லி பெருமைப்படுவது மட்டும் குறையவில்லை. பெருமைக்கு வெறும் உரலில் மாவு இடிச்சது போதும் முதல்வரே... மீதி இருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, ஆக்கபூர்வமான செயல்களில் கவனத்தை செலுத்துங்கள்!

பொறுத்திருந்து பார்ப்போம்!

எஸ்.பி.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிந்து சமவெளி புதிருக்கு விடை சொன்னால், மில்லியன் டாலர் பரிசு தருவதாக அறிவித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். இது ஒரு நல்ல அறிவிப்பு! ஆயினும், நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது சந்தேகம் தான். கடந்த சட்டசபை தேர்தலின்போது, அனைத்து மகளிருக்கும், மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற பின், உரிமைத் தொகை பெற பல நிபந்தனைகளை சொல்லி, நம்பி ஓட்டளித்த பெண்களில் பாதி பேருக்கு பட்டை நாமம் சாற்றியதை, மக்கள் மறக்கவில்லை. இந்நிலையில், மில்லியன் டாலர் பரிசளிப்பதாக கூறியுள்ளார், ஸ்டாலின். ஒரு டாலரின் இந்திய மதிப்பு, 85 ரூபாய் எனும் போது, மில்லியன் டாலர் என்பது, 8.50 கோடி ரூபாய் பரிசாக தர வேண்டும். 1,000 ரூபாய் கொடுக்கவே, உன்னைப் பிடி என்னைப் பிடி என்று பல்வேறு நிபந்தனைகளை போட்டது, அரசு. எழுதிவைத்து படிக்கும் போதே, முதல்வர் பல விஷயங்களில் கோட்டை விடுகிறார். இதில், டாலர், மில்லியன் போன்ற பண மதிப்பை அறிந்து சொன்னாரா இல்லை... மேடையில் வெற்றுப் பெருமைக்காக பிரகடனம் செய்தாரா என்று தெரியவில்லை. அண்ணாதுரை தேர்தல் வாக்குறுதியாக, ரூபாய்க்கு மூணு படி அரிசி என்று அறிவித்தார்; ஆட்சிக்கு வந்து, ஆறு மாதம் ஒரு படி அரிசி போட்ட பின், 'மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று, தான் சொன்ன வாக்கை மாற்றினார். பின், கருணாநிதி தேர்தல் வாக்குறுதியாக, ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் தருவதாக வாக்களித்தார்; ஆனால், தரவில்லை. தற்போது, ஸ்டாலின், சிந்து சமவெளி எழுத்து முறை புதிருக்கு விடை சொன்னால், மில்லியன் டாலர் பரிசு தருவதாக அறிவித்துள்ளார். கேட்கவும், பத்திரிகைகளில் படிக்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அது செயல் முறைக்கு வரும் போது தான் தெரியும்... அள்ளிக் கொடுக்கின்றனரா, கிள்ளிக் கொடுக்கின்றனரா என்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Azar Mufeen
ஜன 23, 2025 11:51

என்னமோ சிந்து சமவெளி புதிருக்கு கோடி கணக்கில் விடை வந்தது மாதிரியும் பரிசு தொகை எப்படி கொடுப்பார்கள் என்று எழுதிய இந்த அறிவாளி வாசகரின் புத்திய பார்க்கும்போது புல்லரிக்குது, நோபல் பிரைஸ் எல்லாருக்குமா கொடுக்கிறார்கள் அய்யா வாசகரே உங்களுக்கு விடை தெரிந்தால் போய் விளக்கி கூற வேண்டியதுதானே


kumar
ஜன 21, 2025 07:41

இந்த அறிஞர் ஆரம்பித்து வச்சது தான் தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆக காரணம்


நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:43

அந்த ஒரு மில்லியன் டாலரை ஸ்டாலின் தனது மருமகன் கணக்கில் இருந்து கொடுப்பாரா இல்லை உதயநிதி கணக்கில் இருந்து வருமா இல்லை ஆக்டொபஸ் மாறங்கள் கணக்கில் இருந்து வருமா, கனியாக்க வீட்டில் இருந்து கொடுப்பாரா, பேரன் வருங்கால கார்பொரேட் முதல்வர் இன்பநிதி கணக்கில் இருந்து வருமா, ரெட்ஜயண்ட் இயக்குனர் வீட்டில் இருந்து வருமா இல்லை கல்வித்தந்தைகள் பலரும் இவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார்களே அவர்கள் வீட்டில் இருந்து வருமா என்று யாரும் கேட்பதே இல்லை ?


Anantharaman Srinivasan
ஜன 21, 2025 23:40

கொடுப்பதெல்லாமே அரசு கஜானாவிலிருந்து தான். சொந்தமாகயெடுத்துக்கொடுக்க ஏழைபங்களான் வீட்டில் என்னயிருக்கு..?


D.Ambujavalli
ஜன 21, 2025 06:07

எந்தக் கட்சியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரைகுறையாகத்தான் இருக்கிறது மக்களும் ஒவ்வொரு தேர்தலிலும் இலவசங்களோடு திருப்தி பட்டுக்கொண்டு வோட்டளிக்கின்றனர் 200/ 300 வீசியெறிந்தால் பொறுக்கிக்கொண்டு ஓட்டுப்போடப்போகிறார்கள் என்ற ஒரு அலட்சியமும், அகம்பாவமும் உள்ள இவர்கள், மில்லியன் டாலரைத் தூக்கிக் கொடுத்துவிட்டாழும் ……. யாராவது சரியாக புதிரை விடுவித்துவிட்டு கொண்டா மில்லியன் டாலரை, என்று நின்றால், அரசு கஜானாவை சுத்தமாக்க கவிழ்த்துக்கொட்டிக் கொடுத்துவிடுவாரா ? Loose talk மன்னர்கள் அண்ணாவிலிருந்தே ஆரம்பித்துவிட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை