முஸ்லிமாக மாறலாமே!
ரா.முத்தையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நபிகள் நாயகத்தின் 
1,500வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'முஸ்லிம் 
மக்களுக்கு, தி.மு.க., அரசு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்து உள்ளது. 
அவர்களுக்கு இடர் வந்தால், தி.மு.க.,வும், அரசும் துணை நிற்கும். 
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க., தான் போராடியது. மத்திய பா.ஜ., அரசின் மலிவான, எதேச்சாதிகார அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும்' என பேசியுள்ளார். முதல்வருக்கு எதேச்சாதிகாரம் என்றால், என்னவென்று தெரியவில்லை! 'கிட்னி' திருட்டில் நடந்த மர்மங்கள் குறித்த விசாரணைக்கு மதுரை உயர் 
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,  தன் கட்சிக்காரரை காப்பாற்ற, 
விசாரணையை தடுக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு 
போடப்பட்டுள்ளதே...  அதற்கு பெயர் தான் எதேச்சாதிகாரம்! தமிழர்களின் ஓட்டுகளை வாங்கி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, தமிழர்களின் 
பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல், பக்கத்து மாநிலத்து  ஓணம் பண்டிகைக்கு 
வாழ்த்து சொல்வதற்கு பெயர் எதேச்சாதிகாரம்! தான் பிறந்த ஹிந்து 
மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் கேலி செய்து, கோவில்களை இடித்து 
தரைமட்டமாக்கியும்,  பக்தர்கள் உண்டியலில் போடும் காணிக்கைகளை சுரண்டி, 
அதேநேரம் கோவில் வளாகத்தில் பிரியாணி உண்பதை கண்டும் காணாமல் இருப்பதற்கு 
பெயர் எதேச்சாதிகாரம்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு  
அரசு சார்பில் கொடுக்கும் பொங்கல் பரிசு பையை கூட, பொங்கல் கொண்டாடாத 
முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ பெண்மணிகளை முன்னிறுத்தி கொடுத்து 
குதுாகலிப்பதற்கு பெயர் தான் சர்வாதிகாரம்! ஸ்டாலின் ஹிந்து 
மதத்தில் பிறந்தது தவறல்ல. ஆனால், அந்த மதத்தை பழித்துக் கொண்டும், ஏளனம் 
செய்து கொண்டும் அதில் நீடித்து கொண்டிருப்பதும் தான் தவறு. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. எந்த மதத்தை சிலாகித்து 
கொண்டிருக்கிறாரோ,  அதில் ஸ்டாலினும், அவர் குடும்பத்தினரும் 
சேர்ந்திடலாமே! பிடிக்காத மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்துக்களின்
 மனங்களை புண்படுத்துவதை காட்டிலும், தனக்கு பிரியமான முஸ்லிம் மதத்திலேயே 
தன்னையும், தன் குடும்பத்தினரையும், உடன்பிறப்புகளையும் ஸ்டாலின் இணைத்துக்
 கொள்வது சாலச்சிறந்தது! 
டிரம்பின் வாயை மூட நோபல் பரிசு!
 எஸ்.ராஜேஷ், திருப்பூரில் இ ருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், ஏழு நோபல் பரிசுகளைக் கேட்டுள்ளார். ஏனென்றால்,  அவர் ஏழு போர்களை நிறுத்திஉள்ளாராம்! சமீபத்தில் நடந்த இந்தியா- - பாகிஸ்தான் போரில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பாகிஸ்தானே தெளிவுபடுத்தி விட்டது. ஆனால், தான் கூறிய பொய்யில் உறுதியாக இருக்கிறார். தொழிலதிபராக இருந்து அரசியல்வாதி ஆனவர் என்பதால், ஒவ்வொரு விஷயத்திலும் வணிக ரீதியாகவே முடிவெடுக்கிறார். இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு எதிராக வரிகளை விதித்தது, விசா விதிகளை கடுமையாக்கியது போன்ற நடவடிக்கைகளால் பாதிப்பு அடைந்தோர் பலர். உக்ரைன் உடனான போரை நிறுத்தாவிட்டால், ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்; நடவடிக்கை எடுத்தாரா? இதுமட்டுமா... சிறுமியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, எப்ஸ்டீன் என்ற பாலியல் குற்றவாளி, சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இவ்வழக்கு குறித்த கோப்பு களை மறைத்த விவகாரத்தில்,  டிரம்பின் ஆதரவாளர்களே அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். காரணம், எப்ஸ்டீனுடன் அந்நாட்டு பெரிய புள்ளிகள் தொடர்பில் இருந்ததுடன், டிரம்ப் அப்பெண்மணியுடன் தனி விமானத்தில் ஏழு முறை பயணித்துள்ளாராம்! இந்த லட்சணத்தில் இவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமாம்! நோபல் பரிசு வழங்கும் குழுவில் ஐந்து பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் மூன்று பேர்,  கடந்த காலத்தில் டிரம்பின் மோசமான  செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில், டிரம்பிற்கு நோபல் பரிசு தரவில்லை என்றால், அக்குழு மீது வரி விதிப்பாரோ? சரி... உலக அமைதிக்காக, அவரது வாயை மூடுவதற்காகவது நோபல் பரிசை கொடுத்து விடுங்கள். அப்போதாவது மனுஷன் வாயை மூடுகிறாரா என்று பார்ப்போம்! வேலியில் போகும் ஓணானை வேட்டியில் கட்டிக் கொள்வரா? 
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும்' என, அவ்வப்போது கோரிக்கைகள் எழுந்த போதிலும், அதற்கு சம்மதம் தெரிவிக்காத அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியின் செயல் வரவேற்கத்தக்கதே! ஏனெனில், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வில் தான் பெரும்பாலான தலைவர்களும், தொண்டர்களும் இருக்கின்றனர். இரட்டை இலை சின்னமும் அவர்களிடம் தான் உள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் தினகரன், அவரது சித்தி  சசிகலா ஆகியோரின் பின்,  பெரிய அளவில்  தொண்டர்கள் பலம் இல்லை. எனவே, அவர்கள் மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்காததால், கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல, ஓர் உறைக்குள்,  ஒரு கத்திதான் இருக்க வேண்டும். அ.தி.மு.க.,  இப்போது பழனிசாமி தலைமை யில், ஒற்றுமையுடன் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் போன்றோரை மீண்டும் கட்சியில் சேர்த்தால், தேர்தலில் சில ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கலாம். அதேநேரம்,  இப்போது இருக்கும் ஒற்றுமை இருக்குமா என்பது கேள்விக்குறி! அவர்கள் மூவரும் கண்டிப்பாக வேறு எவர் தலைமையின் கீழும் பணியாற்ற மாட்டார்கள். கட்சியை கைப்பற்ற அவர்களுக்கென்று கோஷ்டியை உருவாக்குவர்.  பழனிசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் ஓரம் கட்டுவர்.  அதன்பின், கோஷ்டி மோதல்கள் தான் கட்சிக்குள் நடக்கும்.  தப்பித் தவறி சசிகலா தலைமை பதவிக்கு வந்து விட்டால், பன்னீர்செல்வம், பழனிசாமி உட்பட, கட்சி  பெருந்தலைகள் எல்லாம் அவர்  காலில் விழுந்து கிடக்க வேண்டிய அசிங்கமும் அரங்கேறும். 
தேவையா இது? 
இப்போதே, 'பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்' என்று கூறிக் கொண்டிருக்கிறார் தினகரன். எனவே, அவர்கள் மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்பது, வேலியில் போகும் ஓணானை பிடித்து வேட்டிக்குள் விடுவதற்கு ஒப்பாகும்!