வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அது மட்டுமா? தினந்தோறும் நாளிதழ்களில் ‘ இன்றைய தங்க வெள்ளி விலை நிலவரம்’ வர மறந்தாலும், அன்றாட போக்ஸோ கைதிகளின் புள்ளிவிவரத்துக்கே ஒரு column ஒதுக்கும் சாதனையைக்கூட அறிவித்து ஓட்டுக்கேட்கலாமே
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 'நீட்' தேர்வு நடைமுறைக்கு வராத காலகட்டத்தில், பிளஸ் 2 மதிப்பெண்களை வைத்து மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனால், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 99 சதவீதம் பேர் ஆங்கில வழியில் படித்தவர்களே இடம் பிடித்தனர். அத்துடன் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் குறுக்கு வழியில் மதிப்பெண் பெற்று, அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்தனர். இதனால், ஆண்டு தோறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒற்றை வரிசையில் அல்லது 100க்கும் குறைவான சீட்டுகளே கிடைத்தன. 2017ல் தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின்னரே, தகுதியான மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.அதிலும், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்தனர். இதனால், ஆண்டுதோறும் 600 ஏழை - எளிய மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது வெளிவந்த நீட் தேர்வு முடிவுகளில், தமிழக மாணவர்கள் ஆறு பேர் தேசிய அளவில் முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளனர். சூரியநாராயணன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 27வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் படித்துள்ளதுடன், 'நீட் தேர்வு எழுத, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் தான் சிறந்தது' என்றும் கூறியுள்ளார். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் போது, நீட் தேர்வை எழுதுவது சிரமம். மேலும், அரசுப்பள்ளிகளில் பாடங்களை சொல்லித் தர போதிய ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் இன்று இல்லை.தற்போது, நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத, 59,534 பேருக்கு மனநல ஆலோசனை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதில், வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக நீட் தேர்வில் வெற்றி பெற, பயிற்சி அளிக்கலாமே!மாணவர்கள் முறையாக பயிற்சி பெறும்பட்சத்தில், 7.5 சதவீத ஒதுக்கீடு மட்டும் அல்லாமல், பொதுப்பிரிவின் கீழ் கூட மருத்துவ இடங்களை பிடிப்பர் அல்லவா!தி.மு.க., மாவட்ட செயலர் பேரன் ஒருவர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்து, இந்திய அளவில், 922வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டே, தங்கள் பிள்ளைகளை மட்டும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்க வைத்து, நீட் பயிற்சிக்கு அனுப்பி மருத்துவர்களாக்கும் தி.மு.க.,வினர், மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, நீட் பயிற்சி மையங்களை ஏன் துவக்கக்கூடாது? என்னவென்று சொல்வீர்கள்?சி.சுருதி, செங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்' என்று மாவட்ட செயலர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.காமராஜர் முதல்வராக இருந்த போது, 'அரசின் நலப்பணிகளை விளம்பர படமாக எடுத்து, சினிமா தியேட்டர்களில் போட்டால், தேர்தலில் அதிக ஓட்டுகள் கிடைக்கும்' என்று கூறினர், கட்சியினர். அதற்கு காமராஜர், 'நாம் போட்ட சாலைகளும், கட்டிய அணைகளும், பள்ளிக்கூடங்களும், தொழிற்சாலைகளும் மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன... அவை, நம் ஆட்சியில் தான் நிறைவேற்றபட்டன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, விளம்பரம் தேவையில்லை...' என்று கூறிவிட்டார்.தகவல் தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாத அக்காலத்திலேயே, காமராஜருக்கு, அவரது ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக, விளம்பரம் தேவையில்லை என்று கூறினார். ஆனால், தகவல் தொடர்பு வசதிகள் வளர்ந்து விட்ட இக்காலத்திலும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார் என்றால், அவரது ஆட்சியின் மீது, அவருக்கே நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. சரி... மக்களிடம் சென்று மாவட்ட செயலர்கள் எதைச் சொல்வர்? பூரண மதுவிலக்கை அமல்படுத்தி விட்டோம். போதைப்பொருள் விற்பனையை, லஞ்சம், ஊழலை ஒழித்து விட்டோம். மழைநீர் வீணாக கடலில் கலப்பதை அணைகள் கட்டி தடுத்துள்ளோம். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்துள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டோம். காலிப்பணியிடங்களை நிரப்பி விட்டோம் என்றா கூறுவர்? சனாதன தர்மத்தை துணை முதல்வர் உதயநிதி ஒழித்ததையும், சைவம் -- வைணவம் குறியீடுகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி கொடுத்த விளக்கத்தையும், கோவில் திருவிழாக்களுக்கு கூட்டம் கூடுவது நாகரிக சமுகத்தின் அடையாளம் அல்ல என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதை எல்லாம் ஹிந்துக்களிடம் எடுத்துக் சொன்னால், கிடைக்கும் ஓட்டுகளும் கிடைக்காமல் போய்விடுமே!எனவே, தி.மு.க., மாவட்ட செயலர்களின் நிலை கொஞ்சம் பரிதாபம் தான்!பகல் கனவுகாணும் விஜய்!ஆர்.கோவிந்தன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டென்ஷனை குறைக்கவும், காரியத்தில் வெற்றி பெறவும், சிவப்பு சந்தன மாலையை வெள்ளியுடன் சேர்த்து அணிந்து வலம் வருகிறாராம், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்.இம்மாலையை அணிந்து கொண்டால், பஞ்ச பூதங்களும் அஞ்சி நடுங்கும். டென்ஷன் குறையும், மன உறுதி, விவேகம் அதிகரிக்கும். துவங்கிய காரியம் வெற்றி பெறும். எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி குறையும். எதிர்பார்க்கும் வளமான வாழ்வு தேடி வரும் என, புதுச்சேரி ஜோதிடர் ஒருவர் ஆலோ சனை வழங்கினாராம். இவரும் மாலையை அணிந்து கொண்டு, முதல்வர் கனவு காணத் துவங்கி விட்டார்!நடிகர்கள் தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற, பல ஜெகஜாலங்களை எல்லாம் காட்டி, ரசிகர்களை ஏமாற்றுவதுபோல், ஜோதிடர்களும் பிழைப்புக்காக, இதுபோன்ற, 'டுபாக்கூர்' ஐடியாக்களை அவிழ்த்து விட்டு, மூளைச்சலவை செய்து வெகுமதி பெறுவது வழக்கம்.ஆலோசனை நிறைவேறாவிட்டால், பஞ்சபூதங்களின் மீது பழியை சுமத்தி, தப்பித்து கொள்வர்.சிவப்பு சந்தன மாலையை, வெள்ளியுடன் சேர்த்து அணிந்து கொள்வோருக்கு வெற்றி வந்து சேரும் என்பது உண்மையானால், அதை ஜோதிடர் அணிந்து இருக்கலாமே! இனியும், ஹிந்து மத துவேஷிகளுக்கு ஓட்டளித்து, அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அவதிப்படும் அளவிற்கு தமிழக வாக்காளர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அதனால், விஜய் தன் பகல் கனவை விட்டு, நிதர்சனத்திற்கு வருவது நல்லது!
அது மட்டுமா? தினந்தோறும் நாளிதழ்களில் ‘ இன்றைய தங்க வெள்ளி விலை நிலவரம்’ வர மறந்தாலும், அன்றாட போக்ஸோ கைதிகளின் புள்ளிவிவரத்துக்கே ஒரு column ஒதுக்கும் சாதனையைக்கூட அறிவித்து ஓட்டுக்கேட்கலாமே