வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மையிலேயே அவர்கள் அனுப்பிய மின் அஞ்சல் வர வேர்க்க தக்கது அனல் ஒட்டு உரிமை உள்ளவர்கள் உணர வேண்டும்
என்.கந்தசாமி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ராஜாஜி ஆட்சியில் இருந்தபோது, பள்ளிகளில் இருந்த இடப்பிரச்னையை சமாளிக்கும் பொருட்டு, தொழிற்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, ஒவ்வொரு மாணவனும், அரை நாள் பள்ளிக்கு வந்து கல்வி பயில வேண்டும்; அரை நாள் அவரவர் தகப்பனார் செய்து கொண்டிருக்கும் தொழிலை கூட இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த திட்டம். மாணவன் கல்வியும் கற்கலாம்; ஒரு கைத்தொழிலிலும் பயிற்சி பெறலாம் என்ற கோணத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் இது. ஆரம்ப நிலையிலேயே அந்த திட்டத்திற்கு, 'குலக்கல்வி திட்டம்' என்ற நாமகரணம் சூட்டி, எதிர்ப்பு தெரிவித்து, பின் வாங்க வைத்து விட்டன, அப்போதைய எதிர்க்கட்சிகள். அதன்பின், காங்கிரஸ் கட்சியின் மீதிருந்த வெறுப்பால், அக்கட்சியை தேர்தலில் தோற்கடித்தே தீர வேண்டும் என்ற வெறியில், இந்தியாவிலேயே முதன்முறையாக காங்கிரசுக்கு எதிராக எட்டு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, ஒரு கூட்டணியை உருவாக்கிய மஹானுபாவரும் ராஜாஜி தான். அதுவரை ஒவ்வொரு அரசியல் கட்சியும், தனித்தனியாகத் தான் வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றியையும், தோல்வியையும் சந்தித்து கொண்டிருந்தன. அன்று ராஜாஜி துவக்கி வைத்த கூட்டணி தேர்தல், 'கான்செப்ட்' தான், இன்றைக்கு கூட்டணி இல்லாமல் தேர்தலே இல்லை என்ற கேடுகெட்ட சூழலை உருவாக்கி வைத்து விட்டது. அத்துடன், எந்த தொழிற்கல்வியை, குலக்கல்வி திட்டம் என்று எதிர்த்தனரோ, அக்கட்சிகள் அனைத்தும், வாரிசு அரசியலை, அரசியலுக்குள் புகுத்தி, அப்பன், மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்ற வரிசையில், அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. மேலும், கை குலக்கல்வி திட்டத்திற்கு, 'கலைஞர் தொழிற்கல்வி திட்டம்' என்ற நாமகரணம் சூட்டி, அதையும் கழகம் கண்டுபிடித்தது போல், 'பிலிம்' காட்டி கொண்டிருக்கின்றனர். அத்துடன், ராஜாஜி பிள்ளையார் சுழி போட்டு வைத்த இந்த கூட்டணி, 'கான்செப்ட்'டையும் பிடித்துக் கொண்டு, தமிழகத்தை குட்டிச் சுவராக்கி வருகின்றனர். எனவே, கூட்டணி, தொகுதி உடன்பாடு போன்ற கண்றாவிகள் எல்லாம், அரசியலில் இருந்து விலகி,1962ல் தேர்தலை எப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக சந்தித்ததோ, அதுபோன்ற நிலை வரும் வரை, தமிழகத்திற்கோ, மக்களுக்கோ எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை! lll வட்டியை தள்ளுபடி செய்தால் போதும்! ஜி.ரவிச்சந்திரன், திருநெல்வேலியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளுங்கட்சியும், புதிதாக தேர்தல் களத்தில் குதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியும், விதவிதமாக இலவச வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. அதில், கல்வி மற்றும் நகை கடன் ரத்தும் ஒன்று! கடந்த தேர்தலில் தி.மு.க., இந்த வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்தது; ஆனால், கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. பொதுவாக கடன் வாங்கியவர்கள், அதை திரும்ப செலுத்துவது தான் முறை; ஏனெனில், கடன் வாங்கிய அப்பணத்தை அனுபவித்தவர்கள் அவர்கள் தானே! அவ்வகையில், தனிமனிதர் வாங்கிய கடனுக்கு, மக்களின் வரிப்பணம் ஏன் விரயம் ஆக வேண்டும்? அதனால், கடனை தள்ளுபடி செய்வதை காட்டிலும், அக்கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்யலாம். கல்விக்கடன் பெற்ற தினத்திலிருந்து வட்டியை கணக்கிடுவதற்கு பதிலாக, படித்து முடித்து ஒரு பணியில் சேர்ந்த பின், அக்கால கட்டத்தில் இருந்து வட்டியை கணக்கிடலாம். ஏனெனில், வேலை கிடைத்தாலும், அவர்கள் வாங்கும் சம்பளம் அவர்களுக்கே போதுமானதாக இல்லாத சூழ்நிலையில், வட்டியும், அசலையும் சேர்த்து கடனை அடைக்க முடியாது. எனவே, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், வட்டி தள்ளுபடி என்பது போன்ற சாத்தியமுள்ள வாக்குறுதிகளை அளித்தால், மக்களுக்கும் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை ஏற்படுமே! lll தலைவனுக்கு அழகு தனி மனித ஒழுக்கம்! முனைவர் சு.பால்ராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், திராவிட கட்சிகள் இனம், மொழி என்ற பிரிவினையை மையப் புள்ளியாக வைத்து, தங்கள் ஒழுக்கமின்மையை அதற்குள் மறைத்துக் கொண்டது. படிப்பறிவு அதிகம் இல்லாத அக்காலத்தில், துாண்டுதல் பேச்சிற்குள் இளைஞர்கள் விழுந்து கிடந்தனரே தவிர, தங்களை ஆளும் அரசியல் தலைவர்களின் தனி மனித ஒழுக்கம் குறித்து சிந்தித்து ஓட்டு செலுத்தவில்லை. விளைவு... ஊழலும், சுரண்டலும் மிகுந்த மாநிலமாக தமிழகம் பரிணாமம் எடுத்துள்ளது. அன்றைய அதே தவறை தான் இன்றைய படித்த இளைஞர்களும் செய்கின்றனர். காரணம், இன்று சில இளம் தலைவர்களிடம் தனி மனித ஒழுக்கம் இல்லை; அது, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை என்று மக்களும் கடந்து விடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், சினிமா! பழைய திரைப்படங்களில் தனி நபர் ஒழுக்கம், குடும்ப பாசம், பெற்றோரை மதித்தல், தர்ம சிந்தனைகள் போன்ற கருத்துகள் நிறைந்திருந்தன. ஆனால், இன்றைய சினிமாக்களில் சிறுவர்களின் காதல், கவர்ச்சி, பயங்கரவாதம், ரவுடியிசம், போதைப் பழக்கம் போன்றவை ஹீரோயிசத்தின் அடையாளமாக காட்டப் படுகின்றன. விளைவு... 'இவையெல்லாம் தவறு இல்லை; அது அவர்களது தனிப்பட்ட விஷயம்' என்று எண்ணுகின்றனர், இன்றைய இளைஞர்கள். நன்னடத்தை என்பது ஒரு மக்கள் தலைவருக்கு இருக்கவேண்டிய தலைமை பண்புகளில் ஒன்று! உதாரணமாக, அமெரிக்காவில் பொதுவாக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எவரும் கண்டுகொள்வதில்லை; அதேநேரம், தாங்கள் ஒருவரை தலைவனாக தேர்ந்தெடுக்கின்றனர் என்றால், அவரின் தனிப்பட்ட ஒழுக்கம் கூர்ந்து கவனிக்கப் படுகிறது. உதாரணம், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்! அவர் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததால் தான், தன் அதிபர் பதவியை இழந்தார். எனவே, இளைஞர்கள் இனியாவது நம்மை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும் தலைவரின் நன்னடத்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; ஏனென்றால் தேர்தெடுக்கப்படும் நபர் சட்டரீதியாக அனைவருக்கும் தலைவராக ஏற்றுக்கொள்ளப் படுகிறார். அவ்வகையில், காமராஜர், அப்துல் கலாம், இன்றைய பிரதமர் மோடி போன்ற தலைவர்கள், தங்களது அப்பழுக்கற்ற தனி நபர் ஒழுக்க நடத்தைகளால் தான், விமர்சனங்களை கடந்தும் மதிக்கப்படுகின்றனர். ஓட்டைப் பானையில் எப்படி நீரை சேகரித்து வைக்க முடியாதோ, அதுபோல், தனி மனித ஒழுக்கம் இல்லாத தலைவரின் கீழ், நாடும் சிறப்பு அடையாது! lll
உண்மையிலேயே அவர்கள் அனுப்பிய மின் அஞ்சல் வர வேர்க்க தக்கது அனல் ஒட்டு உரிமை உள்ளவர்கள் உணர வேண்டும்