என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா தாரைவார்த்துக் கொடுத்ததில், பெரும் பங்கு வகித்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அத்துடன், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது,'அதிக அளவில் மீன் பிடிக்கும் பேராசையில் எல்லை தாண்டி செல்கின்றனர்' என்று குற்றஞ்சாட்டியவரும் கருணாநிதி தான்!ஏற்கனவே, 'இந்தியாவிடம் கச்சத்தீவை மீண்டும் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை' என்று, இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதியாகச் சொன்னதையும் மறந்துவிடக் கூடாது.எனவே, மோடி என்னதான் முயற்சிகள் செய்தாலும், இலங்கை அரசு, மீண்டும் கச்சத்தீவை நிச்சயம் திருப்பி தராது. அதற்கு, இலங்கை மீனவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள்; கடுமையாக எதிர்ப்பர். இலங்கை அரசைப் பொறுத்தவரை, கச்சத்தீவு என்பது முடிந்து போன கதை.யானையின் வாய்க்குள் போன கரும்பை எப்படி மீண்டும் பெற முடியாதோ, அதுபோல், இலங்கை அரசிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவையும் இந்தியா திரும்பப் பெற முடியாது!தமிழக மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்வதை தடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யுமே தவிர, கச்சத்தீவை மீட்டுத் தராது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி குவிப்பதால், எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை! ஆதீனம் அரசியல் பேசலாமா?
முனைவர்
வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற சூழல் மாறவேண்டும்.
மக்களுக்காக பணியாற்றுவோரே வரவேண்டும். சினிமா புகழை மட்டும் வைத்து,
நடிகர்கள் அரசியலுக்கு வர நினைப்பது தவறு' என்று பேசியுள்ளார், மதுரை
ஆதீனம்.சினிமா என்பது அரசியலுக்கான நுழைவாயிலாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டதை ஆதீனம் அறியவில்லையா? அண்ணாதுரையுடன்
இருந்து அரசியல் பாடம் படித்து, தான் நடித்த படங்களில் எல்லாம்,
தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்த எம்.ஜி.ஆர்., அரசியலில் அமோக
வெற்றி பெற்றார். அதேநேரம் அவருக்கு இணையான செல்வாக்குடன் இருந்த நடிகர்
சிவாஜி கணேசன், படுதோல்வி அடைந்தார். மக்கள் செல்வாக்கு இருந்தும்
ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க தயங்கியதும், துணிவோடு இறங்கிய கமல்ஹாசன்
வெற்றிபெற முடியாமல் முழிப்பதும் நாம் அறிந்ததே!ரசிகர்களை
வாக்காளர்களாக மாற்றி, தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவோடு வந்த எத்தனையோ
பேர் காணாமல் போய்விட்டனர். இதில் ஓரளவு ஜெயித்துக் காட்டியவர்,
விஜயகாந்த்!எனவே, ஆதினம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்... இது
ஜனநாயக நாடு; எவர் வேண்டுமானாலும் அரியணை ஏற ஆசைப்படலாம்; தேர்தலில்
நிற்கலாம். ஏன்... ஆதீனம் கூட அரசியலுக்கு வரலாம். அதனால், அரசியலுக்கு
வரவேண்டாம் என்று சொல்ல எவருக்கும் உரிமையும் கிடையாது. அதுசரி... ஆதீனமாக இருக்கும் ஒருவர், ஆன்மிகம் தழைக்க பாடுபடுவதை விடுத்து, அரசியல் பேசுவது சரியா? பொறுப்பை தட்டி கழிக்கலாமா?
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல்
ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு, கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டால், உடனே,
சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, 'அ.தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளைகள்,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் நடைபெறவில்லையா? 'துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொண்ட வர்கள் தானே நீங்கள்' என்று பதில் அளிக்கத் துவங்குகிறார். கடந்த
ஆட்சியில் தவறுகள் நடந்தால், இந்த ஆட்சியிலும் அது தொடர வேண்டுமா...
இதற்காகவா மக்கள் ஓட்டளித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்? சமீபத்தில்,
அ.தி.மு.க., உறுப்பினர், 'பொள்ளாச்சி பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை
மரங்கள் நோயால் தாக்கப்பட்டுள்ளன; விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என்று
சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு, 'இது உங்கள் ஆட்சியிலும்
இருந்ததே' என்கிறார் சம்பந்தப்பட்ட அமைச்சர். கேள்வி கேட்பவர்
மீதே குற்றம் சாட்டுவதும், எதிர்கேள்வி எழுப்புவதுமே ஆளுங்கட்சிக்கு
வாடிக்கையாய் போய்விட்டது. பொறுப்பை தட்டிக் கழித்து, கேள்வி கேட்பவர்களை
சிறுமைப்படுத்தும் அரசின் இதுபோன்ற செயல்பாடுகள், மக்களுக்கு வெறுப்பையே
ஏற்படுத்தும் என்பதை, ஆட்சியாளர்கள் மறந்து விட வேண்டாம்! தண்டனை அவசியம்!
பி.ரேவதி
பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,
சென்னை புழல் பகுதியில், வளர்ப்பு நாயை ஏவி, வயதான தம்பதியை கடிக்க செய்த
வழக்கறிஞர் குறித்த செய்தியை அறிந்தவர்கள் அதிர்ந்து தான் போயிருப்பர்.
தொலைக்காட்சியில் அதைப் பார்த்தபோது, மனம் பதைபதைத்து போனது. ஏற்கெனவே,
தமிழகத்தில் பல இடங்களில் தெருநாய் கடித்து இறந்த அல்லது சிகிச்சை பெற்று
வரும் எண்ணற்ற சிறுவர் - முதியோர் குறித்த செய்திகளை அறிந்து கொண்டு தான்
இருக்கிறோம். ஐந்தறிவுள்ள ஜீவனின் செயலுக்கே அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கோரிக்கை எழும்போது, ஆறறிவுள்ள இம்மனிதனின் கொடூர
செயலுக்கு கடும் அபராதத்துடன், தண்டனை அளிக்கப்பட வேண்டும். பொதுவாகவே,
வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செல்வோர், வழியில் தென்படும் வீட்டு வாசலிலோ
அல்லது நடுத்தெருவிலோ நாயை காலைக்கடனை கழிக்கச் செய்து, ஜாலியாக
செல்கின்றனர்.'சுத்தம் சுகாதாரமெல்லாம் உங்கள் வீட்டுக்கு மட்டும்
தானா... தெருவிற்கு இல்லையா?' என்று கேட்டால், கோபமடைந்து சண்டைக்கு
வருவோரும் உண்டு. அதன் உச்சக்கட்டம் தான், வயதான தம்பதி மீது நாயை ஏவிய
செயல்! 'ராட்வைலர்' போன்ற உயர் ரக ஜெர்மன் நாயை சங்கிலி கட்டாமல்
அழைத்துச் சென்றதே தவறு; இதில், அதை சுட்டிக்காட்டியவரை, நாயை ஏவி கடிக்கச்
செய்வது என்றால், என்ன ஓர் அகங்காரம் இருக்க வேண்டும்?அந்த
வழக்கறிஞருக்கு வாய்தாவே இல்லாமல், உரிய தண்டனையை உடனே கொடுக்க வேண்டும்.
அப்போதுதான், மற்றவர்களும் இத்தவறை செய்ய துணிய மாட்டார்கள்!