ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் மக்கள் பணியாற்றும் அரசு பணியாளர்கள் எவர் என்று கேட்டால், அது மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் மட்டுமே! அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், இரவு நேரங்களில் மருத்துவ பணிகளுக்கிடையே மருத்துவர்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக, ஓய்வு அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல், நள்ளிரவில் ஆய்வு செய்ய வந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ., சரவணன், பணியிலிருந்த மருத்துவரை ஏக வசனத்தில் பேசி அவமானப்படுத்தியுள்ளார். தமிழகம் முழுதும் வீசிய விஜய் அலையால் அடித்து வரப்பட்டு, வெறும் 1,186 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தான், இந்த சரவணன். பள்ளிப்படிப்பைக் கூடத் தாண்டாத சரவணன், விஜயின் தயவால், எம்.எல்.ஏ., பதவி கிடைத்ததும், தன் உண்மையான தகுதி என்னவென்பதை மறந்து, உயர் பதவிகளில் இருப்போரை, ஒருமையில் பேசி அவமானப்படுத்தியுள்ளார். எம்.எல்.ஏ., என்ற ஆணவத்தின் வெளிப்பாடு அல்லவா இது! கடந்த தி.மு.க., ஆட்சியில் ஆணவத்தால் தலைகால் புரியாமல் ஆடியதால், 15 அமைச்சர்கள் படுதோல்வியடைந்து விட்டனர். தற்போது குறுநில மன்னர் போல வலம் வந்து கொண்டிருந்த பொன்முடி தன் திமிர் பேச்சால் இன்று, வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். கட்சித் தலைவரான ஸ்டாலின் இவர்களது அடாவடித்தனத்தைக் கண்டிக்கத் தவறியதால், வெறுப்படைந்த மக்கள், அவரையும் சேர்த்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். த.வெ.க., ஆட்சியில் முதன்முறையாக எம்.எல்.ஏ.,க்களாகவும், அமைச்சர்களாகவும் தேர்வு செய்யப்பட்டிருப்போர், தி.மு.க.,விற்கு நேர்ந்த கதியைப் பார்த்து, பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., என்ற ஆணவத்தில் ஆடினால், அடுத்த தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவர் என்பதை மறந்து வி டக் கூடாது!மாற்றத்திற்கான அரசு தானே இது?ஏ.வி.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை, 59 ஆண்டுகள் ஆண்ட இரு திராவிட கட்சிகளும் தம் சுயநலத்திற்காக ஹிந்தியை ஒருபுறம், 'திணிப்பு மொழி'யாக வெறுத்தும், மற்றொருபுறம், 'இனிப்பு மொழி'யாக விரும்பியும் இரட்டை வேடம் போட்டு வருகின்றன. கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் நவோதயா பள்ளிகளுக்குத் தடை போடும்போது இவர்களுக்கு ஹிந்தி, திணிப்பு மொழியாகவும், தாங்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படும் போது, அதுவே இனிப்பு மொழியாகவும் ஆகி விடுகிறது. நடுத்தர, ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் இலவசமாக ஹிந்தி கற்றுக் கொள்ள விரும்பினால், அது திணிப்பு; தங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்பினால், அது இனிப்பு மொழி!அரசியல் மேடைகளில் வீராவேசமாக முழங்கவும், முக்கிய பிரச்னைகளில் இருந்து தமிழக மக்களை திசை திருப்பவும், திராவிட கட்சியினருக்கு திணிப்பு மொழியாக தெரியும் ஹிந்தி, டில்லி வட்டாரத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், பார்லிமென்ட் வளாகத்தில் அரசியல் பிழைப்பு நடத்தவும் இனிப்பு மொழியாகிறது. திராவிட கட்சி ஆதரவாளர்களான சினிமா பிரபலங்கள் சிலர், தங்களை தமிழ் உணர்வாளர்கள் என்று காட்டிக்கொள்ள, அப்பாவி ரசிகர்களிடம், 'ஹிந்தி தெரியாது போடா' என்று, 'பஞ்ச்' டயலாக் பேசுவர். அதேநேரம், ஹிந்தி திரைப்படங்களில் தங்களுக்கு ஓர் வாய்ப்பு வந்தால், விழுந்தடித்து ஓடுவர்; அப்போது கூற மாட்டார்கள், 'ஹிந்தி தெரியாது போடா' என்று!காமாலை கண்ணுக்கு காண்பது எல்லாம் மஞ்சளாக தெரியும் என்பது போல், தேசியக் கல்விக் கொள்கையில், மூன்றாம் மொழியாக, மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம் என்று மத்திய அரசு திரும்பத் திரும்ப எடுத்துக் கூறியும், திராவிட கட்சியினருக்கு அது ஹிந்தி திணிப்பாகவே தெரிகிறது. அதுமட்டுமா... தமிழர்கள் தங்கள் பெயரை துாய தமிழில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு தமிழ் பெயரை தான் வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுவர்; ஆணையிடுவர். ஆனால், தங்கள் குடும்பத்தினருக்கும், தம் நிறுவனங்களுக்கும் ஹிந்தியும், சமஸ்கிருதமும் கலந்த பெயர்களை சூட்டி மகிழ்வர்.இதுதான், 59 ஆண்டுகளாக திராவிட கட்சியினர் போட்டு வந்த இரட்டை வேடம்!எனவே, தமிழக வெற்றிக் கழக அரசாவது, இந்த இரட்டை வேடதாரிகள் போன்று இல்லாமல், விரைவில், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வந்து, உண்மையிலேயே இது மாற்றத்திற்கான அரசு என்பதை நிரூபிக்க வேண்டும்!மக்கள் நல பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!எஸ்.கீதாஞ்சலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுராந்த கம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் மற்றும் தொடர்ச்சியான ஐந்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பல அதிரடி இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், இலவச எரிவாயு சிலிண்டர், 200 யூனிட் இலவச மின்சாரம், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, ஆவின் பால் விலை உயர்வு, நிவாரணம் மற்றும் தாய்மாமன், அண்ணன் சீர் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து கடந்த தி.மு.க., அரசு வழங்கிய சலுகைகளையும், கோடைக்கால சிறப்பு நிதிகளையும் மக் கள் முற்றிலுமாகப் புறக்கணித்து, தேர்தலில் தோல்வியைப் பரிசளித்ததை, த.வெ.க., மறந்துவிடக் கூடாது.இன்றைய வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற்று உள்ளனர். அரசு வழங்கும் இலவசங்கள் அனைத்தும் தங்களது சொந்த வரிப்பணத்தில்தான் வழங்கப்படுகின்றன என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். எனவே, வெறும் இலவசங்களை மட்டுமே நம்பி ஆட்சியை நிலைநிறுத்த முடியாது என்பதை, முதல்வர் உணர வேண்டும். கடந்த ஆட்சியின் படுதோல்விக்கு காரணம், ஊழலும், முறைகேடுகளும், சிறிய மழைக்கும் சென்னை நகரம் வெள்ளக்காடாக மாறி, மக்களை வீட்டிற்குள் முடக்கியதும் தான்!ஓட்டு வங்கி அரசியலைத் தாண்டி, இதுபோன்ற மக்கள் நலப்பணிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதன் வாயிலாக, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது, சிறந்த சாலை வசதிகள், மழைநீர் வடிகால்களைச் சீரமைப்பது, ஏரிகள் மற்றும் கால்வாய்களை துார்வாருவது, விவசாயிகளின் நெல் கொள்முதலை எளிதாக்குவது போன்றவை காலத்தின் கட்டாயம். எனவே, இலவச திட்டங்களோடு நின்று விடாமல், இதுபோன்ற விஷயங்களிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்!lllவி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எந்த கட்சியும் துாண்டவும் இல்லை; துணை நிற்கவும் இல்லை. 'நீட்' தேர்வு விடைத்தாள் வெளியானதை கண்டித்து கரப்பான் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியது போன்று, அன்று, தமிழகத்தில் மாணவர்கள் சுயமாக திரண்டு நடத்தியது தான், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். மாணவர்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களை அழைத்து பேசி இருந்தால், ஆட்சியை பறிகொடுத்து இருக்காது, அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால், மாணவர் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, 1967ல் ஆட்சியை பிடித்தது, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தங்கள் அரசியலுக்கு ஒரு கொள்கை வேண்டுமே... அதற்காக, ஹிந்தி எதிர்ப்பையே கொள்கையாக வைத்துக் கொண்டது, தி.மு.க., அதேசமயம், ஹிந்தி கட்டாய பாடமாக உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை அதிக அளவில் நடத்தி வருவதும், இந்த ஹிந்தி எதிர்ப்பு போராளிகள் தான்! இதுதான் இவர்களது மொழிக் கொள்கையின் லட்சணம்! இன்று கட்டுமானம், விவசாயம், நெடுஞ்சாலை, ஹோட்டல், எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் உற்பத்தி என அனைத்து துறைகளிலும், வடமாநில தொழிலாளர்கள் தான் மிகுந்துள்ளனர். தொழிலும், முதலீடும் கூட அவர்களின் கைகளில் தான் உள்ளன. தமிழ் நாளிதழில் ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை என்று, ஹிந்தியில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. பள்ளியில் ஹிந்தி படிக்காத தமிழ் வியாபாரிகள், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற கோவில் நகரங்களில் வடமாநிலத்தவரிடம் ஹிந்தியில் பேசி வியாபாரம் செய்கின்றனர். சிவகாசி, விருதுநகர் வர்த்தகர்கள் வடமாநில வியாபாரிகளுடன் ஹிந்தியில் உரையாடி, தங்கள் வியாபாரத்தை பெருக்குகின்றனர். ஏன்... சென்னை போன்ற பெருநகரங்களில், சாதாரண காய்கறி மார்க்கெட்டில் கூட வியாபாரிகள் ஹிந்தி பேசுகின்றனர். உண்மை இவ்வாறு இருக்க, நெடுஞ்சாலை தொலைவு காட்டும் பலகையில் ஊர் பெயர் ஹிந்தியில் இருந்த காரணத்துக்காக, இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது, தமிழக அரசு. மும்பை, டில்லி, பெங்களூரில் சில பகுதிகளிலும், உ.பி.,யில் உள்ள காசியிலும் தாராளமாகவே தமிழ் பெயர் பலகைகள் மின்னுகின்றனவே... இங்குள்ள திராவிட கட்சியினர் அதற்கு என்ன பதில் கூறுவர்? சொந்த ஊர்களில் இருந்து பேருந்து, ரயில், விமானம் வாயிலாக தமிழகம் வரும் வடமாநிலத்தவர், தமிழகத்தின் ஊர்களை தெரிந்து கொள்ள, ஹிந்தி பெயர் பலகைகள் அவர்களுக்கு உதவுகின்றன. அதை அழிப்பதால், தமிழ் வளர்ந்து விடுமா, இல்லை தமிழர்களின் வாழ்க்கை தரம் தான் உயர்ந்து விடுமா? தி.மு.க., அரசியல் அவியல் செய்கிறது என்பதற்காக, த.வெ.க., அரசும் மொழிப் பிரச்னைகளை கையாள்வதில் அவசரம் காட்டுவது நல்லதல்ல! lll