எஸ்.லாரன்ஸ்,
துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக கவர்னர்,
அவருக்கு உரிய மாண்பையும், மரியாதையையும் இழந்து விட்டு, முச்சந்தியில்
நின்று சண்டை போடுவதை போல, ஆட்சியோடு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்.
அதனால், எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை; கவர்னருக்கு லாபமுமில்லை' என,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வேலுார் மாவட்டம் காட்பாடியில், அமைச்சர்
துரைமுருகன், தொண்டர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.கல்யாண
வீட்டுக்கு சென்றால், சோக நிகழ்ச்சிகள் பற்றிப் பேசுவதும், இறந்தவர்
வீட்டுக்குச் சென்று இங்கிதம் தெரியாமல் பேசுவதும் சிலருக்கு வாடிக்கை.அது
போல, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொண்டர்களை சந்திக்க சென்ற
துரைமுருகன், அங்கு பொங்கல் பண்டிகையை பற்றி எதுவும் பேசாமல், தங்கள்
திராவிட மாடல் ஆட்சியை பற்றியும், கவர்னர் ரவியைப் பற்றியும் பேசி
இருக்கிறார்.கவர்னர் ரவி, அவரது மாண்பையும், மரியாதையையும் இழந்து விட்டு, முச்சந்தியில் நின்று சண்டை போடுகிறாராம்.தி.மு.க., அமைச்சர்கள் தான், கவர்னரைப் பற்றி, எப்போதும் தாறுமாறாக பேசி அறிக்கை விட்டபடி இருக்கின்றனர்.கடந்த,
2024ம் ஆண்டு துவக்கத்தில் சட்டசபையில், உரை நிகழ்த்த கவர்னர் வந்தபோது,
திராவிட மாடல் ஆட்சியின் அமைச்சர்களுள் ஒருவரான பொன்முடி, எழுந்து
நிற்காமல் அவமரியாதை செய்தார்.சில மாதங்களுக்கு முன்பு, அதே
பொன்முடி மீது, பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்ததை மறந்து விட்டீர்களா
துரைமுருகன்? கவர்னர் சட்டசபையில் இருந்து, உரையை வாசிக்காமல்
வெளியேறியதால், ஆட்சிக்கு ஒன்றும் நஷ்டமில்லை என்று அகம்பாவத்துடன்,
இறுமாப்போடு, தெனாவெட்டாக கூறியுள்ளீர்கள். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும்
சட்டசபை தேர்தலில், லாப நஷ்ட கணக்குகள், திராவிட மாடல் அரசுக்கும்,
உங்களுக்கும் தெரியப் போவது நிச்சயம்! புனிதர் பட்டத்திற்கு தயாரா?
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., தோழமைக் கட்சிகள், கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சட்டசபையிலேயே ஆளும் கட்சிக்கு எதிராக, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்., கட்சியும், வி.சி., கட்சியும், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்பதை சூசகமாகத் தெரிவித்துவிட்டன. தேர்தல் நேரத்தில் இக்கோரிக்கையை, அக்கட்சியினர் தீவிரமாக முன் வைப்பர். 'தி.மு.க.,வின் ஆதரவில் மா.கம்யூ., இல்லை' என்றும், அறிவிக்கப்படாத அவசரநிலை தமிழகத்தில் நிலவுவதாக கூறி, தி.மு.க.,விற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார், மா.கம்யூ., கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன். ஆனால், ம.தி.மு.க., நிறுவனர் வைகோ மட்டும் தி.மு.க., கொடுத்த ஒரு எம்.பி., ஆறு எம்.எல்.ஏ., சீட்டுக்காக, தன் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருக்கப் போவதாகவும், ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லாதது என்றும் அறிவித்தார். கூடவே, தி.மு.க., ஆட்சிக்கு எந்தவித இடையூறும் வராமல், ஸ்டாலினுடைய போர்வாளாக இருந்து பாதுகாக்கப் போவதாக சூளுரைத்தார்.ஒரு காலத்தில், இந்திராவால், 'பார்லிமென்ட்டின் புலி' என்று வர்ணிக்கப்பட்ட வைகோ, இன்று தமிழக அரசியலில் பூனையாக காட்சி அளிக்கிறார். கருணாநிதியிடம் கோபித்து, எந்தக் கட்சியை விட்டு வெளியேறினாரோ, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலராகவே, தற்போது மாறிவிட்டார், வைகோ!ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் தயவால் அரசியல் அங்கீகாரம் பெற்ற ஈரோடு முத்துச்சாமி, ரகுபதி, ராஜ கண்ணப்பன், சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர், இன்று, தி.மு.க.,வில் முக்கிய அமைச்சர்களாக, அதிகார பலத்துடன் வலம் வருகின்றனர்.அ.தி.மு.க.,வில் இருந்தபோது, 'உலகமகா ஊழல்வாதி' என்று ஸ்டாலினால் முத்திரை குத்தப்பட்ட செந்தில் பாலாஜி, தி.மு.க.,வில் ஐக்கியமானதும், உலகமகா உத்தமராகவும், சிறை சென்ற தியாகியாகவும் பார்க்கப்படுகிறார். அதேபோன்று, ம.தி.மு.க., நிறுவனர் வைகோ, தன் கட்சியை தி.மு.க.,வுடன் இணைத்துவிட்டால், கருணாநிதியையும், ஸ்டாலினையும் பல சந்தர்ப்பங்களில் தரக்குறைவாக திட்டிய பாவத்திற்கு, பரிகாரம் கிடைத்துவிடும்; செந்தில் பாலாஜியைப்போல இவரும் புனிதராகி விடலாம்.கூடவே, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத அமைச்சர் பதவியும், துரை வைகோவிற்கு கிடைத்துவிடுமே!கட்சியை எப்போது இணைக்கப் போகிறார் வைகோ? தெரிந்து கொள்ளுங்கள்!
சந்திரசேகரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன், வாசகி ஒருவர் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்து, இப்பகுதியில், கடுமையான கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். ஏறக்குறைய, ஜி.எஸ்.டி.,என்பது ஒரு பகல் கொள்ளை என்பது போல இருந்தது, அவரின் கருத்து. பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பு பற்றி குறிப்பிட்டு இருந்தார்... சாலையில், உங்கள் தெருவில் உள்ள சிறு கடைகளில் விற்கப்படும் பாப்கார்னுக்கு, ஜி.எஸ்.டி., வரி கிடையாது; பெரிய மால்களில் விற்கப்படும் பாப்கார்னுக்கு தான், ஜி.எஸ்.டி., உண்டு என்பதை வாசகி தெரிந்து கொள்ள வேண்டும். பெரிய வணிக நிறுவனங்களில், அதிக தொகைக்கு விற்கப்படும் பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பதில் என்ன தவறு இருக்கிறது?அத்துடன், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் மத்திய நிதி அமைச்சருக்கு எந்த பங்கும் இல்லை; ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. ஜி.எஸ்.டி.,யில் ஏதேனும் குறை இருந்தால், உங்கள் மாநில நிதி அமைச்சர் அல்லது உங்கள் பார்லிமென்ட் எம்.பி.,யிடம் தெரிவியுங்கள். அவர்கள் அதை ஜி.எஸ்.டி., கவுன்சிலில் விவாதித்து, அதற்கு வரி விலக்கு பெற்றுத் தருவர். அதை விடுத்து மத்திய நிதி அமைச்சரை குறை கூறுவது என்பது, மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் செயல்!ஜி.எஸ்.டி., சரியாக அமல்படுத்துவது மற்றும் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிப்பதில் பிரச்னை என்றால் மட்டுமே மத்திய நிதி அமைச்சரிடம் நீங்கள் முறையிடலாம்!