வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பா.ஜ., - காங்., - ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும், எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதற்காக, நிறைவேற்றவே முடியாத இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீசியுள்ளன.இது நாள் வரை இலவசங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த கட்சிகளை விமர்சித்து வந்த பா.ஜ.,வும், தன் பங்கிற்கு இலவச அறிவிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாகக் கொடுப்பதை விடுத்து, பொருளாதார வீழ்ச்சிக்கே வித்திடும் தேவையற்ற இலவசங்களை அள்ளி வீசுவது ஏன்?'பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு' என்பது ஆங்கில பழமொழி.இதை மறந்த அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பசி; மக்களுக்கோ இலவசப் பசி. இந்த இரு பசிகளும் நாட்டிற்கு பேராபத்தை விளைவிக்கும்.நிதி ஆதாரத்திற்கு எங்கே போவது என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு புறம் இலவசங்களைக் கொடுத்துவிட்டு, அதை ஈடுகட்ட, மறுபுறம் வரியை உயர்த்திக் கொண்டே போவதற்குப் பெயர் வளர்ச்சி இல்லை!இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று அடிக்கடி சொல்லி வரும் பிரதமர் கூட, தன் கட்சியின் இலவச அறிவிப்பிற்கு துணை போவது காலத்தின் கொடுமை!கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மகளிர் இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, பள்ளி- கல்லுாரி மாணவர்களுக்கான உதவித் தொகை போன்ற இலவச வாக்குறுதிகளால் ஏற்பட்ட கடன் சுமையால், திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது, தி.மு.க., அரசு.கெஜ்ரிவால் ஏராளமான இலவசங்களை அள்ளி வீசி, ஆட்சியைப் பிடித்து டில்லியின் கடன் சுமையை ஏற்றியதோடு, மதுபானக் கொள்முதல் ஊழல் வழக்கில், கைதாகி சிறை சென்று வந்ததை அறிவோம். அரசியல் கட்சிகள் கண்மூடித்தனமாக அறிவிக்கும் இலவசங்களுக்கு மக்கள் ஆசைப்பட்டால், ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதை எதிர்த்து, கேள்வி கேட்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.'நாடு எப்படியானால் என்ன... ஆட்சி, அதிகாரம்தான் குறிக்கோள்' என்று நினைக்கும் அரசியல்வாதிகளும், 'யார் ஆண்டால் என்ன... ஓட்டுக்குத் துட்டும், இலவசங்களும் கிடைத்தால் போதும்' என்று எண்ணும் மக்கள் இருக்கும் வரை, நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி தான்! உடன்பிறப்பின் உருக்கம்!
டி.கே.முத்தையா, விருதுநகரில் இருந்து எழுதுகிறார்: உதயநிதி ஸ்டாலின் அவர்களே... தேர்தல் பரப்புரையில் என்ன சொன்னீர்கள் என்று நினைவு இருக்கிறதா... 'நம்ம ஆட்சி தான் வரப் போகுது; நகைகளை தாராளமாக அடகு வையுங்கள். ஆட்சிக்கு வந்ததும், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என்றீர்கள். நீங்கள்
கொடுத்த வாக்குறுதியை நம்பி, 'நகைக் கடன் தள்ளுபடி வேண்டும்' என்று கேட்ட
ஒரு பெண்மணியிடம், நீங்கள் பேசிய பேச்சு, தரமானதா சொல்லுங்கள்...தஞ்சையில்,
90 வயது மூதாட்டி ஒருவர், வயது வந்த பெண்களுடன் வந்து, 'இந்த
பிள்ளைகளுக்கு என்னைத் தவிர வேறு எவருமில்லை; சொற்ப வருவாயில் கஷ்ட ஜீவனம்
நடத்துகிறோம்' என்று கண்ணீர் மல்க கூறியபோது, 'எம்.எல்.ஏ.,வை போய்
பாருங்கள்' என்று விரட்டி விட்டீர்களே... இது சரியான செயலா? எம்.ஜி.ஆரிடம் எவராவது இப்படி கேட்டிருந்தால், அவர் என்ன செய்திருப்பார் தெரியுமா? உடனே,
அதிகாரிகளை அழைத்து, அவருக்கு முதியோர் பணம் கிடைக்க உத்தரவு
தந்திருப்பார். அதற்கு முன், தன் பணத்தை அள்ளிக் கொடுத்து, அவர்கள்
முகத்தில் மலர்ச்சியை வரவழைத்திருப்பார்!ஒரு சமயம், வயல் வெளியில்
களை எடுக்கும் பெண்கள், சாலையில் வாகனத்தில் எம்.ஜி.ஆர்., செல்வதைப்
பார்த்து ஓடி வந்தனர். அவர்களுக்கு பணத்தை அள்ளி தந்தார். அந்த
ஏழைப் பெண்கள், 'நீங்கள் நுாறு ஆண்டுகள் வாழ வேண்டும்; எங்களுக்கு பணம்
தேவையில்லை' என்றபோது, மனம் உருகிப் போன எம்.ஜி.ஆர்., 'உங்கள் அன்புக்கு
நான் எப்படி கைமாறு செய்யப்போகிறேன்...' என்று கூறி, நெகிழ்ந்து
நின்றாராம்!இதேபோன்று தான், கழகத்தின் ஆணி வேரான அண்ணாதுரை எளிமை, அடக்கம், அன்புடன், ஏற்றத்தாழ்விற்கு இடம் தராத குணம் கொண்டவர்.இத்தகைய தலைவர்களிடம் இருந்து பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! கழகத்தின்,
71 வயது இளைஞர் நான்; எங்களது ரத்தம் சிந்தி வளர்ந்த இயக்கம் இது!
கழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கலாம்; ஆனால், 'ஒழிக' என்று வந்து விட
வேண்டாம்! வனவா சத்தை மறந்து விட வேண்டாம்!
என்.வைகைவளவன்
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மணிப்பூரில் ஏராளமான
பெண்கள் அவமானப்படுத்தப் பட்டனர்; தாக்குதலுக்கும் ஆளாயினர்; ஆனாலும்,
இன்று வரை அம்மாநிலத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பெண்களைப் பார்த்து,
நடந்த சம்பவம் குறித்து ஆறுதல் சொல்லப் போகாதவர், நம் பிரதமர் மோடி' என்று
குறை கூறியுள்ளார், கனிமொழி எம்.பி.,அதேகேள்வியைத் தான்
பொதுமக்களும் கேட்கின்றனர்... எங்கோ இருக்கும் மணிப்பூர் மக்களுக்காக
இப்படி பரிதவிக்கும் கனிமொழி, அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் ஞானசேகரன்
என்பவனால், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவியை நேரில் சந்தித்து,
ஆறுதல் சொல்லவில்லையே... ஏன்? 'மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்காரத்தை அறிந்து, என் நெஞ்சம் பதறுகிறது' என்று வெறும் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதுமா?கனிமொழியும், முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் தானே இருக்கின்றனர்... வேற்றுக் கிரகத்தில் இல்லையே...பாதிக்கப்பட்ட மாணவியும் சென்னையில் தானே இருக்கிறார்... அப்படி இருந்தும் அவரை ஏன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை? மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவன், தி.மு.க.,வை சேர்ந்தவன் என்ற பாசம் இருவரது கால்களையும் கட்டிப் போட்டு விட்டதா? தமிழக மக்கள் தானே ஓட்டு போட்டு உங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினர்?அம்மக்களுக்கு
ஒரு பிரச்னை என்றால், ஆறுதல் கூறக் கூட போக மாட்டீர்கள்... ஆனால், எங்கோ
இருக்கும் மணிப்பூர் மக்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வருகிறது!இத்தகைய
நடிப்பு அரசியலால் தான், தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்து துாக்கி
எறியப்பட்டு, 10 ஆண்டுகள் வனவாசம் இருந்தீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!