உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ராகுல் ஏன் கேவலமாக நடந்து கொள்கிறார்?

ராகுல் ஏன் கேவலமாக நடந்து கொள்கிறார்?

பா.பரத்வாஜ், சென்னையிலிருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: காங்., ராகுலின் சமீபத்திய செய்கைகள், 'மிக கவுரவமான கட்சியை நடத்திய, மிக கவுரவமான பிரதமர் பதவியை வகித்த இந்திராவின் பேரனா இப்படி?' என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.நாட்டைத் துண்டாடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வது, பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கேலி செய்வது என, மிகவும் தரம் தாழ்ந்த வகையில் நடந்து கொள்கிறார்.உலக நாட்டு தலைவர்களை, நம் பிரதமர் மோடி கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிப்பதை சமீபத்திய காங்., கூட்டத்தில் மிகக் கேவலமான முறையில் செய்து காட்டினார் ராகுல். அதற்கு, காங்., நிர்வாகி ஒருவர், பெண் தலைவர் ஒருவர் பெயரைக் கூறி, அவரை கட்டி அணைத்தார் மோடி என்று பேசினார். உடனே, 'கடகட'வென சிரித்தார் ராகுல். ஏன் இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை.இவரின் சித்தப்பா சஞ்சய், நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கட்டாய கருத்தடுப்பு இயக்கத்தை முன்னெடுத்து நடத்தி, பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.அரசியலில் எந்த பதவியும் வகிக்காமலேயே, இந்திராவின் கீழ் பணி புரிந்தவர்களை தன் மனநிலைக்கு ஏற்றார்போல் பணிபுரிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் பலரும் ராஜினாமா செய்ததாகவும் கூட இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.இதனால், முதன் முதலாக 1977ல் இவர் போட்டியிட்ட, உ.பி.,யின் அமேதி தொகுதியில் மிகப் பெரிய தோல்வியைக் கண்டதோடு மட்டுமல்லாமல், இந்திரா காங்., கட்சியே நிறைய இடங்களில் தோல்வி கண்டது.தற்போது, ராகுலின் நடவடிக்கைகள், சஞ்சயைப் போலவே உள்ளன. காங்., கட்சியின் அழிவுக்கு இவரே காரணமாகி விடுவார் போலிருக்கிறது என்று, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கவலை கொள்கின்றனர்.ராகுலின் சகோதரி பிரியங்காவாவது, தேசிய சிந்தனையுடன் செயல்படுவார் என்று எதிர்பார்த்தால், அவரும் சரியான பாதையில் பயணிப்பவராகத் தெரியவில்லை.'நாம் சரியாகச் செயல்படுகிறோமா என்பதை, நம் எதிரியின் செயல்பாடுகளை வைத்துப் பார்த்தால் தான் தெரியும்' என, அறிஞர்கள் பலர் சொல்லி இருக்கின்றனர்.பா.ஜ.,வை எதிர்க்க, தேசிய சிந்தனை உடைய சரியான எதிர்க்கட்சி எதுவும் கண்ணுக்கெட்டிய துாரம் வரை தெரியவில்லையே!

விடைகளை மறுமதிப்பீடு செய்யுமா தேர்வு துறை?

டாக்டர் பா.நாகராஜ கணேஷ், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வாயிலாக நடத்தப்படும், சி.ஓ.எ., என்ற 'கம்ப்யூட்டர் ஆன் ஆட்டோமேஷன்' தேர்வு, அரசு சான்றிதழ் படிப்புக்கானது. டி.என்.பி.எஸ்.சி., - குரூப் 4, தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இச்சான்றிதழ் அவசியம். பத்தாம் வகுப்பு முடித்து, ஆங்கிலம் அல்லது தமிழில் தட்டெழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும் என்று இருந்த நிலையை மாற்றி, பத்தாவது முடித்திருந்தால் போதும்; எவர் வேண்டுமானாலும், சி.ஓ.எ.,தேர்வை எழுதலாம் என்றும், கணினி வாயிலாக தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டெழுத்து தேர்வையும் இத்துடன் சேர்த்து எழுதவேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும், ஏற்கனவே தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜூன் 2026-ல் புதிய கணினி வழித் தேர்வு முறையில் இத்தேர்வு நடத்தப்பட்டது. பல தேர்வு மையங்களில், கீ போர்டு, மவுஸ் சரியாக வேலை செய்யவில்லை. புதிய ஆன்லைன் தேர்வு முறைக்கான மாதிரித் தேர்வுகள் மற்றும் கணினி பயிற்சிகள், தேர்வுக்கு முதல் நாளில் தான் கொடுக்கப்பட்டன. இதன்காரணமாக, கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில், பலர் தோல்வி அடைந்துள்ளனர். இதில், ஏற்கனவே தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்ற பலரும் தோல்வி அடைந்தது தான் கொடுமை. கணினி தேர்வு மதிப்பெண்ணை வெளியிடாமல், தட்டச்சு மதிப்பெண்ணை வைத்து மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்? தேர்வின் போது சரியான உபகரணங்களை வழங்காமல் தேர்வு நடத்தி, ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது, தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம். இத்தேர்வின் முடிவுகளை நம்பி, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் நலனைக் கருத்தில் வைத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவோ அல்லது விடைத்தாள்களை உரிய முறையில் மறுமதிப்பீடு செய்யவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நகைப்பிற்கு ஆளாகாதீர்கள் அமைச்சர்களே!

க.துரையரசன், கும்ப கோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில், தமிழ்த்தாய் வாழ்த்து, 'நீட்' தேர்வு ரத்து மற்றும் எப்.சி.ஆர்.எ., சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, தமிழக வெற்றிக் கழக அரசு. தீர்மானம் குறித்து பேசிய உறுப்பினர்கள், ஏன் ஆதரிக்கிறோம்; எதற்கு எதிர்க்கிறோம் என்பது குறித்து பேசாமல், தங்கள் கட்சியின் முந்தைய, இன்றைய தலைவர்கள் மற்றும் முக்கியமானவர்களின் பெயர்களை எல்லாம் கூறி, அவர்களுக்கெல்லாம் நன்றி நவின்று, தீர்மானத்திற்கு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் பேசினர்; கட்சி செய்த சாதனைகளை பட்டியலிட்டு நேரத்தை வீணடித்தனர். கட்சி மற்றும் தலைவர்களின் பெருமை பேச, சட்டசபை என்ன அரசியல் மேடையா? மக்கள் பிரச்னையை பேசும் சட்டசபையை, தங்கள் கட்சி மேடையாக கருதுவதை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தவிர்க்க வேண்டும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு மாணவன் பொருத்தமான பதிலை எழுதினால் தான், அவனுக்கு மதிப்பெண் கிடைக்கும். அதுபோன்று, சட்டசபை உறுப்பினர்கள் விவாதப் பொருள் மற்றும் மக்கள் பிரச்னை குறித்து பேசினால் மட்டுமே, மக்களின் நன்மதிப்பை பெற முடியும். மாறாக, தென்னை மரம் பற்றி கட்டுரை எழுதச் சொன்னால், பசு மாடு குறித்து எழுதிவிட்டு, இறுதியில் இப்படிப்பட்ட பசுமாடு, தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் கட்டப்பட்டது என்று எழுதினால், மக்களின் நகைப்பிற்கு தான் ஆளாக வேண்டி இருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை