வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது, ஹிந்து மதத்தின் சாஸ்திர நுாலான மனுஸ்மிருதி; அந்நுாலில் உள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டி, 'பெண்களை அடிமைப் படுத்துகிறது மனுஸ்மிருதி' என்று விமர்சனம் செய்தார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.அதேநேரம், காங்., ஆளும் கேரளாவில், ஓர் இஸ்லாமிய மத குரு, 'பெண்கள் பொதுவெளியில் ஆண்களின் துணையின்றி செல்லக்கூடாது; அப்படியே சென்றாலும், உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிய ஆடையை அணிந்து தான் செல்ல வேண்டும்' என்று கூறிய போது, அதுகுறித்து, அவரும், அவரது சகோதரி பிரியங்காவும் சிறு கண்டனம் கூட எழுப்பவில்லை!இதுமட்டுமல்ல... ஜி.எஸ்.டி., 'நீட்' தேர்விற்கு பிள்ளையார் சுழி போட்டதே தங்கள் கட்சி தான் என்பதை மறந்து, அதற்கு எதிராக குரல் கொடுக்கிறார், ராகுல். அதேநேரம், காங்., ஆளும் கர்நாடகாவிலும், தங்கள் கூட்டணி கட்சி ஆட்சி செய்யும் ஜார்க்கண்டிலும் அதுபோன்று முறைகேடுகள் நடந்தால், ராகுலின் காதுகள் கேட்கும் திறனையும், வாய் பேசும் திறனையும் இழந்து விடுகின்றன.இதுபோன்று தான், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடந்த,'பிரிக்ஸ்' மாநாட்டை உலக தலைவர்கள் எல்லாம் பாராட்ட, ராகு லோ, 'மாநாட்டில் உலக தலைவர்களுக்கு ஏன் சைவ உணவை வழங்கினீர்கள்; இந்தியர்களின் விருப்ப உணவான அசைவ உணவை ஏன் வழங்கவில்லை' என்று கேட்கிறார்.இந்த நாட்டின் தொன்மை மதங்களான ஹிந்து மதத்தின் உட்பிரிவுகளான சைவம், வைணவம், கணாபத்தியம், சாக்தம், கவுமாரம், சவுரம், ஸ்மார்த்தம் உட்பட, சீக்கியம், பவுத்தம், சமணம், ஆசீவகம், அய்யாவழி என அனைத்து மதத்திலும் அசைவம் சாப்பிடுவோர் கூ ட, சாதாரணமாக திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் தங்கள் மதப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, அந்நாட்களில் அசைவ உணவை உண்பதில்லை .அசைவ உணவு என்பதே மேற்கத்திய கலாசாரத்தின் வழியில் வந்ததே தவிர, அது இந்தியாவின் கலாசாரம் அல்ல என்பதை, ஒரு இந்திய தாய்க்கு பிறந்திருந்தால், அவர், ராகுலுக்கு புரிய வைத்திருப்பார்!ராகுலுக்கு இந்திய கலாசாரமும் தெரியவில்லை; அதன் தொன்மையையும் அறியவில்லை எனும் போது, இப்படித்தானே கேள்வி எழுப்புவார்.ராகுலின், அரசியல் அறிவு தான் அதளபாதாளத்தில் இருக்கிறது என்றால், இந்தியாவின் பூகோள அறிவும் இப்படி இருந்தால், காங்., எப்படி கரை சேரும்?--- பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானால் என்ன செய்வர்?
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளின் அரவணைப்பில் தான், இதுவரை தேர்தல்களை சந்தித்து வந்துள்ளன, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்! தனித்துப் போட்டியிட்டால், 'டிபாசிட்' கூட தங்களுக்கு கிடைக்காது என்பதை அறிந்தே, திராவிடக் கட்சிகள் கொடுப்பதை வாங்கி, 'கூட்டணி தர்மம்' என்ற பெயரில், அக்கட்சியினர் செய்யும் ஊழல்களை கண்டும் காணாமல் இருந்தனர், காம்ரேடுகள். இப்போது ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் நீண்ட நாட்களுக்குப் பின், தனித்துப் போட்டியிட களத்தில் இறங்கியுள்ளனர், காம்ரேடுகள். இந்த திடீர் முடிவுக்கு காரணம், என்னதான் த.வெ.க.,விற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலும், காங்., - விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்று, அதன் பலனை கம்யூ., கட்சியினர் அனுபவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது, எந்த லாபமும்இல்லாமல், த.வெ.க.,விற்கு தேர்தலில்ஆதரவு கரம் நீட்டி அக்கட்சியின் வெற்றிக்கு பாடுபட காம்ரேடுகளுக்கு விருப்பம் இல்லை. அதேநேரம், த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுத்தபடி, தி.மு.க.,வின் வெற்றிக்கும் துணையாக இருக்க முடியாது. அதனால், இச்சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்கள் கட்சியின் ஓட்டு வங்கியை அறிந்து கொள்ள, இடைத்தேர்தலை பயன்படுத்த நினைக்கின்றனர். தேர்தல் முடிவு, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாக, கம்யூ.,களின் கூட்டணி எதிர்காலத்தை கேள்விக் குறி ஆக்கிவிடாமல் இருந்தால் சரி! ---- தீர்வு காணுமா அரசு?
முனைவர் ரா.சந்திர சேகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான் படித்த காலத்தில், பள்ளி ஆய்வு கூடங்களில் நாங்கள் செய்த செய்முறை பயிற்சிகளான, தனி ஊசல், நீரின் பரப்பு விசை, பியூரட் உதவி கொண்டு செய்யப்பட்ட பழுப்பு வளைய சோதனை, கூட்டு நுண்ணோக்கி உதவியுடன் செய்த தாவர செல் ஆராய்ச்சி போன்றவை இன்றும் என் மனதில் நிலைத்து நிற்கின்றன.ஆனால், தற்போது, தமிழகத்தில் பல மேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான செய்முறைப் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுவதே இல்லை.ஆண்டு முழுதும் ஆய்வகப் பக்கமே செல்லாத மாணவர்களுக்கு, ஆண்டின் இறுதியில் ஒரு சில நாட்கள் மட்டும் கண்துடைப்புக்காக சில பயிற்சிகள் அரைகுறையாக பயிற்றுவிக்கப்படுகின்றன. செய்முறை தேர்வும் ஒரு சடங்காகவே நடத்தப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் அள்ளி வழங்கப்படுகின்றன. விளைவு...செய்முறைப் பயிற்சி இல்லாததால், மாணவர்கள் அறிவியல் கோட்பாடுகள் புரியாமல், உயர்கல்விக்கோ அல்லது ஆராய்ச்சி படிப்புகளுக்கோ செல்லும்போது, சிறு கருவியைக் கூட கையாளத் தெரியாமல் திணறுகின்றனர். 'நீட்' போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற இயலாமல், அரசை குறை கூறுகின்றனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த அவல நிலைக்கு, இனிமேலும் கல்வித் துறை இடமளிக்கக் கூடாது.கல்வித்துறையில் மாற்றங்களை நோக்கி நகரும் புதிய அரசு, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறை வகுப்புகளை கட்டாயமாக்குவதுடன், ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அனைத்து நவீன உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருட்களுடன் கூடிய தரமான ஆய்வுக்கூடங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அறிவியல் ஆய்வு கூடங்களுக்கு கட்டாயம் ஆய்வக உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். மேலும், செய்முறை வகுப்புகள் நடக்கிறதா என்பதை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் செய்து கண்காணிக்க வேண்டும்.செய்முறை தேர்வுகளை கடுமையான விதிகளுடன், முறையான மதிப்பீட்டின் கீழ் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்பட வேண் டும். மாணவர்களை வெறும் மதிப்பெண்களைக் குவிக்கும் இயந்திரங்களாக மாற்றாமல், சிந்திக்கும் திறன் கொண்ட விஞ்ஞானிகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்க வேண்டும்.புதிய அரசு, கல்வித்துறையின் இந்த அடிப்படை பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணுமா?