ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவிரி டெல்டா பகுதிகளில் வறட்சி ஏற்படும் போதெல்லாம், விவசாயிகளின் நலன் காக்க அவதாரம் எடுத்து வந்துள்ள தேவதுாதர்களைப் போல் தங்களை எண்ணி போராட்டத்தை துவக்கி விடுகின்றனர், தமிழக அரசியல்வாதிகள். கர்நாடகாவில் அதிக மழை பெய்து, காவிரியில் உபரி நீர் திறந்துவிட்டதும், இவர்களது நீலிக்கண்ணீர் அடங்கி விடுகிறது. இதுதான் காலங்காலமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரங்கேறி வரும் நாடகம்! மத்தியில் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் தி.மு.க.,வும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, காவிரி பிரச்னையில் தமிழர்கள் நலனைப் பாதுகாக்காத, தி.மு.க., இப்போது, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு, த.வெ.க., அரசுக்கு, நெருக்கடி கொடுக்கிறது. இக்கூட்டத்தை கூட்டினால் மட்டும் கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட்டு, திராவிட கட்சிகளின் ஆட்சியில் கட்டி வைத்துள்ள அணைகள் எல்லாம் நிரம்பி, விவசாயிகளின் துயர் தீர்ந்து விடுமா என்ன? இக்கூட்டத்தைக் கூட்டுவதால், ஒரு நயா பைசாவுக்கும் பிரயோஜனமில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்; தமிழக மக்களுக்கும் நன்றாக புரியும். ஆனாலும், இந்த அரசியல் நாடகத்தை நடத்துவதில் இவர்களுக்கு ஓர் ஆனந்தம்! ஒருபுறம் காவிரியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கர்நாடகா; மறுபுறம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளா; மற்றொருபுறம், வட மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இருக்கும் பாலாற்றின் குறுக்கே அணையைக் கட்டுவோம் என்று அடம் பிடிக்கும் ஆந்திரா என, மூன்று எல்லைப்புற மாநிலங் களாலும் தமிழகத்திற்கு நிரந்தரமான இடையூறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம், தொலை நோக்கு சிந்தனையற்ற இரு திராவிடக் கட்சி ஆட்சியாளர்கள் தான்! கர்நாடகாவில் தோன்றி ஆந்திரா வழியாகப் பாய்ந்து, தமிழகத்தின் ஐந்து வட மாவட்டங்கள் வழியாக, 222 கி.மீ., துாரத்திற்கு மேல் பயணித்து, வங்கக் கடலில் கலக்கிறது பாலாறு. வெறும், 93 கி.மீ., துாரம் பயணிக்கும் கர்நாடகாவில், மூன்று பெரிய தடுப்பணைகளும், வெறும், 33 கி.மீ., துாரம் பயணிக்கும் ஆந்திராவில், 22 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில், 222 கி.மீ., துாரம் பயணிக்கும் தமிழகத்தில் ஒரு சில தடுப்பணைகள் மட்டுமே கட்டப் பட்டுள்ளன. நீர் மேலாண்மையில் இரு திராவிடக் கட்சிகளும் தோற்றுப்போனதற்கு, இதைவிட பெரிய சான்று தேவையில்லை. கல்லணை மற்றும் மேட்டூர் அணையை தவிர்த்து, தமிழகத்தில் உள்ள வைகை, அமராவதி, சாத்தனுார், மணிமுத்தாறு, பவானிசாகர், ஆழியாறு உள்ளிட்ட அனைத்து பெரிய அணைகளும் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. ஒவ்வொரு ஆண்டும் கடலில் வீணாகக் கலக்கும் பல டி.எம்.சி., மழைநீரை சேமிப்பது குறித்து துளியும் சிந்திக்காமல், தமிழகத்தை வறட்சி பூமியாக மாற்றி, அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காக கையேந்தும் நிலையை உருவாக்கி விட்டு இன்று, விவசாயிகளுக்காக என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர், இரு திராவிடக் கட்சியினரும்! விஜய் அரசாவது, ஆழ்ந்து சிந்தித்து, நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்! ------ மனம் புகைவது ஏன்?
எம்.சுப்பு, தேனியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேளாண் பட்ஜெட் அறிவிப்புகளை வாசிப்பதற்கு முன், முதல்வரை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார், அமைச்சர் வினோத்.உடனே, 'பட்ஜெட் உரையில் இடம் பெறாத வாசகங்களை எப்படி கூறலாம்' என்று எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டனர், தி.மு.க.,வினர்.சட்டசபை மற்றும் பார்லிமென்டில் துதிபாடி அரசியல் செய்வது எப்படி என்ற அரிச்சுவடியை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கற்றுக் கொடுத்த கட்சி எது என்று கேட்டால், அது, தி.மு.க., தான்!கடந்த 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டில் பதவியேற்பு நிகழ்வின் போது, 'கருணாநிதி வாழ்க, ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க' என்று பதவி பிரமாணம் எடுத்து, ஆட்சியாளர்களுக்கு காக்கா பிடிப்பது எப்படி என்று, ஒட்டு மொத்த எம்.பி.,க்களும் பாடம் நடத்தினர்.அப்படிப்பட்டவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு முதல்வரை புகழக் கூடாது என்று பாடம் எடுக்கின்றனர்.கடந்த தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை, 'ராஜராஜ சோழன், மனு சோழனின் மறு அவதாரம்' என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை தி.மு.க.,வினர் புகழ்ந்து தள்ளினரே... அது எல்லாம், கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களா?போற்றுதலுக்கும், புகழுரைக்கும் தி.மு.க.,வினர் காப்பிரைட் வாங்கி வைத்துள்ளனரா என்ன?முன்னேர் சென்ற வழியில் பின்னேர் செல்கிறது; இதில் மனம் புகைவது ஏன்?-----இதுதான் கைமாறா?
ஜெயஸ்ரீ எம்.சாரி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மாதம் 26ம் தேதி, நாடு முழுதும் கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது. 1999-, மே மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான லடாக்கின் வடக்கு கார்கில் உள்ள சியாச்சின் மலைக்குள் ஊடுருவினர்.அவர்களை விரட்டி அடிக்க, கார்கில் மலை உச்சியில், கடும் குளிரில் நம் ராணுவத்தினர் மூன்று மாதங்கள் கடுமையாக போரிட்டு, பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டி அடித்தனர். இப்போரில், 527 வீரர்கள் உயிர் இழந்தனர்.அவர்களது வெற்றியை நினைவு கூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26ம் தேதி, நாடு முழுதும் கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியர்களை உணர்வு ரீதியாக ஒருங்கிணைக்கவே, இதுபோன்ற நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.ஆனால், நம்மில் எத்தனை பேர், அந்த நாளின் தியாகத்தை அறிந்து வைத்துள்ளோம்?இரவு - பகல் பாராமல் கடும் குளிரிலும், மழையிலும், வெயிலிலும் உயிரை துச்சமாக மதித்து, நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு, சமுதாய ரீதியாக நாம் கொடுத்துள்ள மதிப்பு தான் என்ன?ஊரை அடித்து, தன் வீட்டு உலையில் போட்டு, உடல் கொழுக்கும் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது, நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு கொடுத்துள்ளோமா?போரில் வீரமரணம் அடைந்தால் மட்டுமே, அவர்கள் தியாகம் கொண்டாடப்படுகிறது. உறுப்புகளை இழந்து முடமாகிப் போனோரை, அலட்சியமாக கடந்து விடுகிறோம்.இதுதான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் கைமாறாக இருக்கிறது. இந்த மனநிலை மாற வேண்டும். நாட்டிற்காக உழைக்கும் ராணுவ வீரர்களின் தியாகங்கள் மதிக்கப்படும் போது தான், நாம் இந்தியர் என்ற உணர்வும், தேசப்பற்றும் ஏற்படும்!