உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  கருநாக கூட்டம் அழிக்கப்பட வேண்டும்!

 கருநாக கூட்டம் அழிக்கப்பட வேண்டும்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கிய நாளன்றே, பார்லிமென்டை நோக்கி செல்லப் போவதாக கூறி, பிரச்னையை தொடங்கியது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, கல்வித் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே இவர்களின் போராட்டத்திற்கு காரணம்!ஆனால், இந்த அமைப்புக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சியினரோ, கல்வி அமைச்சர் மட்டுமின்றி, பிரதமர் மோடியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.'நீட்' வினாத்தாள் கசிவு சம்பந்தமாக, ஏற்கனவே அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது; பார்லிமென்ட்டில் விவாதிக்க தயார் என்றும் கூறியுள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை தொடர்ந்து முடக்கி வருகின்றன.இப்படி ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு பிரச்னையை முன்னெடுத்து சபையை முடக்கி, அடாவடித்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், தொகுதி மக்களின் பிரச்னைகளை எப்போது தான் இவர்கள் பேசுவர்?தேர்தலில் முறையாக வெல்ல முடியாத இக்கட்சிகள், இளைஞர்களை துாண்டி, அவர்களை ஆயுதமாக பயன்படுத்தி, அரசியல் லாபம் காண துடிக்கின்றன.உண்மையில், ஜனநாயகத்தை மதிப்பவர்களாக இருந்தால், தங்களின் கொள்கைகளை மக்களிடம் முன்னிறுத்தி, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வர வேண்டுமே தவிர, இப்படி குறுக்கு வழியில் கோட்டையை பிடிக்க நினைக்கக் கூடாது.இன்று, 'நீட்' தேர்வுக்கு எதிராக வரிந்து கட்டி களத்தில் குதித்துள்ள காங்கிரஸ் தான், தங்கள் ஆட்சிக் காலத்தில், 'நீட்'டுக்கு பிள்ளையார் சுழி போட்டது என்பதை அக்கட்சி மறந்து விட்டது.'நீட்'டுக்கு எதிராக இப்போது களத்தில் குதித்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பின் தொடர்வோர் பாகிஸ்தான், வங்கதேசத்தினர், இங்குள்ள பிரிவினைவாதிகள் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனரே தவிர, 'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இல்லை.கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை துவக்கியவரே, 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் எனும் போது, இந்த அமைப்பு எப்படி அனைத்து இளைஞர்களுக்குமானதாக இருக்கும்?'நீட்' வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களையும், சம்பந்தப்பட்ட துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராடியிருந்தால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது எனலாம்; ஆனால், இந்திய ராணுவம் மற்றும் நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்புவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?எனவே, கரப்பான் பூச்சி கூட்டத்துக்குள் புகுந்துள்ள கருநாகங்களை இனியும் மத்திய அரசு களையெடுக்கவில்லை என்றால், கருநாகங்களின் கொடிய விஷத்தால் நாடு அமைதி இழந்து விடும்!

எதிர்ப்பாளர்கள் விளக்கம் அளிப்பரா?

எஸ்.விவேகானந்தம், குடியாத்தம், வேலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான, 'நீட்' தேர்வை சில அரசியல் கட்சிகளும், சில கல்வியாளர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். அதே நேரத்தில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, தமிழக அரசே, 'டான்செட்' மற்றும் 'சீட்டா' போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நுழைவுத் தேர்வுகளால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டனரா என்ன? நுழைவுத் தேர்வு முறையே தவறு என்றால், அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் ஒரே நிலைப்பாடு அல்லவா இருக்க வேண்டும்? மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தினால், அது சமூகநீதிக்கானது; அதையே மத்திய அரசு நடத்தினால் பாசிசமா? இங்கு எதிர்ப்பு என்பது நுழைவுத் தேர்வு என்ற கொள்கைக்கானதா அல்லது மத்திய அரசுக்கானதா? 'நீட்' எதிர்ப்பாளர்கள் விளக்கம் அளிப்பரா?

ஊரார் அடித்து திருத்துவர்!

கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சியில் நடக்கும் தவறுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை இந்த அரசு, 'டேக் டைவர்ஷன்' மாடலில் வேட்டையாடி கைது செய்கிறது. இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?' என்று கேள்வி கேட்டுள்ளார், முன்னாள் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் நாற்காலிக்கு என்று ஒரு மரியாதை உள்ளது; அதை ஒரு எம்.எல்.ஏ., தர வேண்டாமா... தமிழக முதல்வரின் எலும்பை உடைத்து விடுவேன் என்று கூறுவது என்ன நாகரிகம்? இதற்கு பெயர் தான் தவறுகளை சுட்டிக் காட்டுவதா? தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் இத்தகைய அநாகரிகமான பேச்சை வழிமொழிகிறாரா ஸ்டாலின்? இதேபோன்று தான், டில்லியில் பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து, தமிழகத்தின் செங்கோலை நிறுவி, அதை சாஷ்டாங்கமாக வணங்கியதை, 'மூச்சு இருக்கா, மானம் ரோஷம் இருக்கா?' என்று விமர்சனம் செய் தார், முன்னாள் தி.மு.க., அமைச்சர் மனோ தங்கராஜ். ஒரு நாட்டின் பிரதமரை இதுபோன்று அவமரியாதை செய்த போது, ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன? தி.மு.க., அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் எவரை வேண்டுமானாலும் இழிவாக பேசிக் கொண்டிருப்பர்; அவர்களை தட்டிக் கொடுத்து பாராட்ட வேண்டுமா... அதற்கு பெயர் தான் சட்டத்தின் ஆட்சியா? அநாகரிகமாக பேசுவது தி.மு.க.,வின் மரபணு கோளாறாக இருக்கலாம்; அதற்காக எல்லாரும் அவர்கள் பேசுவதை வாய் மூடி கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வீட்டுக்கு அடங்காத பிள்ளையை, ஊரார் தான் அடித்து திருத்துவர்!

நல்ல முடிவு எடுக்க வேண்டும்!

மா.சங்கர் சீனிவாசன், ஆசிரியர், ( பணி நிறைவு) பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பது குறித்த விவகாரத்தில் முடிவெடுக்க, தமிழக அரசுக்கு மூன்று வாரம் கெடு விதித் துள்ளது, உச்ச நீதிமன்றம். கடந்த தி.மு.க., அரசு, நவோதயா பள்ளிகளை ஏற்றுக் கொள்ளாமல், 'மாடல் ஸ்கூல்' என்ற பெயரில் மாவட்டம் தோறும் பள்ளிகளை ஏற்படுத்தி வீண் செலவு செய்தது. இம்மாடல் பள்ளிகளை விட பல மடங்கு சிறந்தது நவோதயா பள்ளிகள். இப்பள்ளிகளுக்கு தமிழக அரசு இடம் மட்டும் கொடுத்தால் போதும்; அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்! குறைந்த செலவில், உணவு, தங்குமிடத்துடன் தரமான கல்வி வழங்கும் இப்பள்ளிகளில் கூடுதலாக ஒரு மொழியை படிக்க வேண்டுமே தவிர, ஹிந்தி தான் கற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எனவே, தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அரசு நவோதயா பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 25, 2026 19:23

மாணவர்களின். நலனைவிட, தங்கள். பள்ளிகளின். . நஷ்டத்தைத்தாதானே பார்க்கிறார்கள் அதனால். தான். ஏழை நடுத்தர. மாணவர்/. பெற்றோரின். நிம்மதி. பெருமூச்சு. இவர்களுக்கு. அல்ர்ஜி. யாக. உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை